அடுத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர்?
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. கடந்த 25 வருடங்களில் முதல் தடவையாக காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைப்பதவிக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டென அறியப்படுகிறது.
இந்தியர்களிடையே மிகவும் பிரபலமானவரும் கவர்ச்சியாகவும், தர்க்கரீதியாகவும் பேசக்கூடியவருமான பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் இப்பதவிக்குப் போட்டியிடுகிறார். நாளை (வெள்ளி) வேட்பாளர் பத்திரத்தை அவர் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜிவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு காந்தி குடும்பத்தினரால் காங்கிரஸ் கட்சியை வெற்றிகரமாகக் கொண்டுநடத்த முடியவில்லை. தொடர்ந்து பல மத்திய, மாநிலத் தேர்தல்களில் அக்கட்சி தோல்விகளைத் தழுவி வருகிறது. 2014, 2019 மத்திய தேர்தல்களில் மக்கள் தொடர்ந்து பா.ஜ.க. கட்சிக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். இதை முறித்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு காந்தி குடும்பத்தைத் தவிர்த்த வேறொருவர் கட்சிக்குத் தலைவராகவேண்டுமெனவும் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவேண்டுமெனவும் 2020 இல் கட்சி அங்கத்தவர்கள் சோனியா காந்திக்கு விண்ணப்பித்திருந்தனர்.
கட்சியின் அதிகாரத்தைப் பரவலாக்குவது, உட்கட்சி ஆலோசனைகளைப் பெறும் பொறிமுறைகளைக் கட்டமைப்பது, கட்சித் தொண்டர்கள் தலைவர்களை இலகுவாகச் சந்தித்துப் பேசும் வழிமுறைகளைப் பரவலாக்குவது எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கட்சியைப் புனரமைக்கும் பல திட்டங்களை தரூர் தனது விஞ்ஞாபனத்தில் அறிவிக்கவுள்ளார்.
இது தொடர்பாகப் பேசும்போது “காந்தி குடும்பம் தொடர்ந்தும் கட்சியின் முக்கிய வழிகாட்டிகளாக இருப்பர். 2014, 2019 ஆண்டுகளில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்கள் எல்லோரும் இந்துத்துவவாதிகள் அல்ல, அவர்களை நாம் மீண்டும் எமது கட்சி ஆதரவாளர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.