அடிபணிகிறதா இலங்கை? – ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீக்கம் குறித்து மக்கள் பீதி கொண்டுள்ளனர்

செப்டம்பர் மாதமளவில் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு இலங்கை வருகிறது

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்ததைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்யத் தயாராகவுள்ளதாக இலங்கை அரசு ஐரோப்பிய ஒந்றியத்துக்கு அறிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது பற்றிப் பரிசீலிப்பதற்காக ஜூன் 21 அன்று அமைச்சரவை, ஒரு உபகுழுவொன்றையும் அதற்கு உதவிசெய்வதற்கென அதிகாரிகள் குழுவொன்றையும் நியமிக்கவுள்ளதாகவும் சட்டத்தை ஆராய்ந்து 3 மாதங்களுக்குள் ஒரு அறிக்கையொன்றை அது தயாரிக்கவுள்ளதெனவும் வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அறிவித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகள் சபை ஜூன் 24 இல் உருவாக்கப்பட்டது. நீதி, வெளி விவகாரம், பொதுப் பாதுகாப்பு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தேசிய புலனய்வுப் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து மூத்த அதிகாரிகளை இக் குழு உள்ளடக்கும்.

அரசியலமைப்பின் 34 ஆவது கட்டளையின் பிரகாரம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக்ச் சிறைவைக்கப்பட்டிருந்த 16 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு மன்னிப்புக் கொடுத்து ஜனாதிபதி விடுதலை செய்தமை பற்றியும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எடுத்துகூறப்பட்டிருக்கிறது.

நட்ட ஈடு வழங்கல்கள் தொடர்பாக, அதை நிர்வகிக்கும் அலுவலகத்துக்கு 79 மில்லியன் ரூபாய்கள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் விசாரணை செய்து முடிக்கப்பட்ட 1.230 கொடுப்பனவுகளை உடனடியாகக் கொடுக்க முடிவெடுக்கப்படுல்ளதெனவும் மேலதிகமாக ஜூன் 29 இல், 80 மில்ல்யன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு மேலும் 1,451 கொடுப்பநவுகள் கொடுக்கப்படவுள்ளன என்வும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பாவித்து வெளிநாடுகள் எங்களை மிரட்ட முடியாது என் ராஜாங்க அமைச்சர் கப்ரால் போன்றவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தாலும், இறுதியில் இலங்கை, ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும் என்னுமளவுக்கு இலங்கையின் பொருளாதார நிலைமைகள் உள்ளன. வரிச்சலுகையைப் பெற, பயங்கரவாதத் தடைச்சட்டம் மட்டுமல்ல, மொத்தம் 27 சர்வதேச நியமச் சட்டங்களை இலங்கை அநுசரித்துப் போகவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்துள்ளது. இந் நிலைமையில், 2020-2021 ஆண்டிற்கான ஜி.எஸ்.பி. பிளஸ் பறுபரிசீலனையை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது செய்து வருகிந்றது. செப்டம்பர் / அக்டோபர் மாதமளவில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையின் மூன்றாவது மீள் பரிசீலனைக்காக இலங்கை வரவுள்ளார்கள். அதற்கு முன்னர் இலங்கை அரசு ஒன்றியத்திந் நிபந்தனைகளை அனுசரிக்கும் வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்.

ஆட்சி முறை, ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட பரிபாலனம் ஆகிய விடயங்களில் இலங்கை எப்படி நிர்வாகம் செய்கிறது என்பதை இலங்கை வரும் கண்கானிப்பு அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள். எனவே இவ் விடயங்கள் குறித்து உரிய தயாரிப்புகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து, ஆடை உற்பத்தியாளர் சங்கம், கடலுணவு ஏற்றுமதியாளர் சங்கம், தொழிற் சங்கங்கள் போன்றவற்றை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தநா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்து, சலுகை ஒத்திவைப்பால் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்த அவர்களது அச்சங்களை நீக்கக்கூடிய உறுதிமொழிகளை வழங்கி வருகிறார்கள் எனப்படுகிறது. இதே வேளை கொலைத் தண்டனைக்கான குற்றம் நிரூபிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட குற்றவாளி துமிந்த சில்வாவை விடுதலை செய்தமை ஐரோப்பிய ஒன்றியத்திந் கடுமையான நிலைப்பாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

இதர வருமான வளங்களும் வற்றிப்போன நிலையில், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை அகற்றப்பட்டால், இலங்கையின் ஆடைகளை ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி ஏற்படும். இந் நிலையில் இலங்கையைப் போல் வரிச்சலுகை பெற்றுக்கொண்டிருக்கும் பங்களாதேசம் போன்ற நாடுகளை நோக்கி வணிகர்கள் செல்லவேண்டி ஏற்படும்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இழப்பு ஏற்படுத்தப்போகும் பாதிப்பு குறித்து சாதாரண மக்கள் மிகவும் அச்சமடைந்த நிலையில் இருப்பது ஆட்சியாளருக்குத் தெரிந்திருக்கிறது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளப்பெறுவதனால் நாடு அடையப்போகும் துயரங்களைக் காரணம் காட்டி, துமிந்த சில்வாவினால் கொலைசெய்யப்பட்ட பிரேமச்சந்திரவின் குடும்பத்தினர்கூட தமது முறைப்பாட்டை சர்வதேசங்களிடம் எடுத்துச்செல்லப் பினவாங்கும் நிலைமையில் நாட்டுமக்களின் மனநிலை இருக்கிறது. (மாயமான்)