Spread the love

‘அசுரன்’ அடக்குமுறையாளர்கள் மீதான தலித்துகளின் வெற்றியைக் கூறும் படமல்ல. சாதீயத்தை நாம் முன்னிலைப்படுத்தக்கூடாது’ – சாகித்திய அக்கடமி பரிசு பெற்ற எழுத்தாளர் பூமணி

'அசுரன்' என் கதையைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை - எழுத்தாளர் பூமணி 1

வெற்றிமாறன் இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த தனுஷ் நடித்த ‘அசுரன்’ பற்றிய பலவித விமர்சனங்களும் வந்திருந்த வேளையில் அப்படத்தின் மூலக்கதையான ‘வெக்கை’ யின் ஆசிரியர் பூமணி அவர்கள் படம் பற்றிய தன் கருத்தை ‘தி இந்து’ பத்திரிகையின் பி.கோலப்பன் அவர்களுடன் பகிர்ந்திருந்தார்.

“‘அசுரன்’ எனக்குத் திருப்தியளிக்கும் படமானாலும் அதில் தலித்துகள் அவர்களது அடக்குமுறையாளர்களை வெல்வது குறித்த காட்சிப்படுத்தலில் எனக்கு உடன்பாடில்லை. மூலக் கதையின் ஆசிரியர் நானாக இருப்பினும் எனது நாவலின் முழு விபரங்களும் படத்திற்காகத் தழுவப்படவேண்டுமென நான் எதிர்பார்க்க முடியாது. படத்தை எடுக்கும்போது வெற்றிமாறன் தன் மனதில் எதை நினைத்துக்கொண்டாரோ தெரியாது. ஆனால் சில விடயங்களை அவர் மாற்றியிருக்கக் கூடாது” எனப் பூமணி ‘தி இந்து’வுக்குக் கூறினார்.

‘அசுரன்’ படத்தில் வெற்றிமாறன் இரண்டு மணி நேரத்துக்கும் பார்வையாளர்களை அசையாமல் வைத்திருந்தார், அதுவே அப் படத்தின் வெற்றிக்குக் காரணம் எனவும் அவரின் ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்றபடங்களைத் தான் பார்த்திருந்ததாகவும் அதன் பின்னரே தாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதாகப் பூமணி தெரிவித்தார்

வன்முறையைக் கையாள்தல்

“வெற்றிமாறன் வன்முறையை மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். அதனால் என் கதையில் வரும் வன்முறையின் பின்னணியிலுள்ள காரணங்களை அவர் ஆய்ந்தறிந்திருப்பார் என நான் நினைத்தேன். எனது நாவலான ‘வெக்கை’ யின் பிரதி அவரிடமிருந்தது. ‘நீங்கள் விரும்பியவாறே தழுவலைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று நான் அவரிடம் கூறியிருந்தேன்” என்றார் பூமணி.

‘Asuran’: Dhanush is quite sublime (as always) in Vetri Maaran’s latest
‘அசுரனில்’ தந்தையார் சிசாமி பாத்திரத்தில் தோன்றும் தனுஷ்

படத்தில் தலித்துகள் ஒடுக்கப்படுவது பற்றியும், ‘சிதம்பரம்’ என்ற பாத்திரத்தில் நடித்த கென் கருணாஸ் மற்றும் அவரது தகப்பனான ‘சிவசாமி’ பாத்திரத்தில் நடித்த தனுஷும் விலங்குகளை உடைப்பதாகக் காட்டப்படுவது பற்றியும் வெளிவந்த விமர்சனங்கள் பற்றிக் கேட்டபோது, நாவல் தலித்தியம் பற்றிப் பேசவே இல்லை” என்றார்.

“இது சுத்தமான சாதீயம். அதற்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது. தஞ்சாவூரில் தலித்துகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு விமர்சகர்கள் தமது கருத்துக்களைக் கூறியிருக்கலாம். எங்களூரில் பஞ்சமி நிலங்களுமில்லை, அங்கு செருப்பு அணிவதைத் தடைசெய்வது பற்றியும் எங்களுக்குத் தெரியாது” என்று பூமணி மேலும் தெரிவித்தார்.

நிலங்களுக்கு உரிமையாளர்களாகுவதையும், குடும்பத்தின் கெளரவம் பற்றியுமே நாவல் பேசுகிறது என அவர் விளக்கினார்.

“சிதம்பரம் (பதின்ம வயதுள்ள மகன்) கொலை செய்யத் திட்டமிட்டிருக்கவில்லை. வடக்கூரானின் (உயர் சாதி எதிர்த்தரப்புக்காரன்) வலது கையை வெட்டிவிடுவதே அவனது திட்டம். ஆனால் அவன் அந்த ஆயுதத்தைப் பாவித்த விதம் அது கொலையில் முடிகிறது” என்றார் பூமணி

Related:  பிரபாஸ், தீபிகா இணையும் புதிய படம் | தெற்குநோக்கிப் படையெடுக்கும் பொலிவூட் நடிகைகள்
ஒரு தந்தையின் அச்சங்கள்

சிதம்பரத்தின் பாத்திரம் பற்றிப் பூமணி பேசும்போது, ” அப் பாத்திரத்தினூடாகவே கதை சொல்லப்படுகிறது. தனது சகோதரனின் கொலைக்குப் பழிவாங்குவதே அவனது நோக்கம். சமூகத்திலிருக்கும் நீதி பரிபாலனம் மற்றும் அதன் நிர்வாகம் பற்றித் தந்தையார் மகனுக்கு எடுத்து விளக்குகிறார். மகன் (சிதம்பரம்) நிரந்தரமாகவே விலங்குகளைச் சுமந்துகொண்டு திரிய நேரிடலாம் என்று அவர் அஞ்சுகிறார்” என்கிறார் பூமணி

சிதம்பரத்தின் குடும்பம் கொலையைக் கொண்டாடும் சம்பவம் நாவலில் வருவது பற்றிக் கேட்டபோது, ‘மூத்த மகனின் இழப்பால் குடும்பம் வடித்துக்கொண்டிருந்த கண்ணீரை இக்கொலை துடைத்துவிட்டது என்பதற்கான கொண்டாட்டமே அது’ என விபரித்தார் பூமணி.

“வன்முறை ஒரு போதும் தீர்வாக முடியாது” என்பதை வலியுறுத்தினார் அவர்.

Print Friendly, PDF & Email