NewsSri Lanka

அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பேற்றால் தூதுவர் பதவி தருவதாக ஜனாதிபதி கூறினார் | பொலிஸ் மாஅதிபர்

‘ உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு குண்டுவெடிப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்றால் எனக்கு தூதுவர் பதவி தருவதாக சிறீசேன கூறினார்” என பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர கூறினார்.

குண்டு வெடிப்புக்களுக்கு முன்னரும் பின்னரும் அவ்விடயத்தைக் கையாண்ட விடயத்தில் ஜனாதிபதி சிறீசேன மிகவும் அற்பத் தனமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு பல கோணங்களிலுமிருந்தும் வந்துகொண்டிருக்கும் நிலையில் பொலிஸ் மா அதிபரின் இக் குற்றச்சாட்டு ஜனாதிபதியின் பெயருக்கு மிக்க களங்கத்தை உண்டுபண்ணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாகச் சாட்சியமளிக்கும் போதே பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தர இத் தகவல்களை வெளியிட்டார்.

தற்போது பதவியிலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜயசுந்தர தெரிவுக்குழுவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் முன் கொடுத்த வாக்குமூலத்தில் ” பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளுக்கு முற்றிலும் பொறுப்பை ஏற்று பதவியிலிருந்து விலகும் பட்சத்தில் எனக்கு தூதுவர் பதவி தருவதாக வாக்களித்ததோடு என் பெயருக்கு வரக்கூடிய களங்கத்தையும் முற்றாக நீக்கிவிடுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்” என்று கூறினார்.

“எனது நீண்ட பணிக் காலத்தில் நான் ஒருபோதும் அப்படியான பதவிகளை விரும்பியவனல்ல. அதே வேளை நான் ஒரு போதும் பணி சம்பந்தமாகத் துர்நடத்தையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவனுமல்ல” என்று அவர் மேலும் தெரிவித்தார்.