Columnsமாயமான்

அகலும் பாரதமும் ஒடுங்கும் ஈழமும்…

மாயமான்

ஈழப் பிரச்சினை அவ்வப்போது வீங்கி வெடிக்கிறேன் என்று வெருட்டியபோதெல்லாம் இந்திய அன்னை ஈழத்தைக் கிள்ளி எடுத்து தனது சிறகுகளுக்குள் அடைக்கலம் தந்துவிட மாட்டாரா என அறியா முதுவயதுகளிலும் நாம் ஏங்கியதுண்டு. இப்போது மோடியின் இந்தியா தனது ‘அகன்ற பாரதம்’ திட்டத்தின் கீழ் ஈழத்தை மட்டுமல்ல இலங்கை உட்பட இந்துசமுத்திரத்தில் உள்ள அனைத்து தீவுகளையுமே அப்படியே தனது அரசியல் இழுவைப் படகினால் வாரிக்கொண்டு போனாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இப்படித்தான் முடியும் என இலங்கை மதில்களில் எழுதப்பட்டுக் கன காலமாகிவிட்டது. ஆனால் சிங்கக்குட்டிகள் அதை வாசித்ததாகத் தெரியவில்லை.

யூக்கிரெய்ன் போர் புரையோடிச் சீழ்பிடிக்கவாரம்பித்துவிட்டது. மோடி புட்டினைப் பகைக்காது அவரது எண்ணையையும் எரிவாயுவையும் குறைந்தவிலைக்குப் பெற்று இந்திய பொருளாதாரத்துக்கு மேலதிக இயந்திரங்களைப் பொருத்தி ஓடியதால் சீனாவுக்கும் டாட்டா காட்டும் நிலைக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் வல்லாதிக்கப் போர் தனது கேந்திர ஸ்தானத்தை கிழக்கு ஐரோப்பாவிலிருந்து தென்னாசியாவுக்கு மாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க-ரஸ்ய போர் விரைவில் அமெரிக்க-சீனப் போராக பரிணமிக்கவும் சாத்தியமிருக்கிறது. தென் சீனக் கடலில் அமெரிக்க – சீன நாசகாரிக் கப்பல்களின் ‘கிட்டத்தட்ட மோதல்’ இப்போர் தொடங்கவிருக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை எனக் காட்டுகிறது.

போர் மையம் ஐரோப்பாவிலிருந்து தென்னாசியாவுக்கு மாற்றம் பெறுமானால் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமொன்று நடைபெற்றேயாகவேண்டும். தென்சீனக்கடலில் சீனாவின் வெற்றி தெற்குப் பூகோளத்தின் சோழ சாம்ராஜ்யமாக அதை மாற்றிவிடும். சோழரின் சொத்தாக இருந்த மலாக்கா நீரிணையை முழுமையாக சீனாவிடம் கையளிக்க இந்தியா விரும்பாது. எனவே தென்சீனக்கடலில் சீனாவை மூழ்கடிப்பது இந்தியாவுக்கு அவசியமாகிவிட்ட ஒன்று. இதற்கு ஒரே ஒரு வழி எதிரிக்கு எதிரியான அமெரிக்காவை நண்பனாக்குவது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி மோடியிடம் ஆட்டோகிராஃப் கேட்டது, அவுஸ்திரேலியா மோடிக்கு விசேட அழைப்பு விடுத்திருப்பது, பப்புவா நியூகினி அதிபர் மோடியின் பாதங்களைத் தொட்டுக் கும்பிடுவது போன்றவை சின்ன விடயங்களாகப் பார்க்கப்பட்டாலும் அரசியல் இவையெல்லாம் சர்வசாதாரண விடயங்களல்ல. யூக்கிரெய்ன் போரில் இந்தியா கடைப்பிடித்த ‘நடி-நிலைமை’ யை இனி அது மாற்றியேயாக வேண்டும்.

இதற்கிடையில் தென்னிலங்கயிலிருந்து யாரோ ஒரு ‘குசு மாத்தயா’ “ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து அகற்ற மர்ம விசையொன்று பின்னணியில் ஈடுபட்டு வருகிறது” என மணம் பகர்ந்திருக்கிறார். அரகாலயா மகாராணி ஜூலி ச்சங் மீதான வீரவன்சவின் குற்றச்சாட்டுகள் சரியானால் அந்த மர்ம விசை யாரென்று எல்லோருக்கும் இப்போது புரிந்திருக்கும். இலங்கையின் முடிசூடா முதியரசர் விக்கிரமசிங்க, தான் ஒரு உலகில் அதி தந்திரமான நரியெனக் காட்டுவதற்கு கால் தடங்களைப் போட்டு சில நாடுகளைத் தடுமாறச் செய்துவிட்டதாக சேட்டுக்குள் புல்லரித்துப் போயிருக்கலாம். இதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் தடுமாறினாலும் பந்தை இலாவகமாகத் தனது காலுக்குள்ளேயே வைத்திருக்கிறார் போலவே தெரிகிறது.

கடந்த மாதம் இலங்கையில் மூன்று மாநில ஆளூனர்கள் திடீர் மாற்றலுக்கு உள்ளாகியிருந்தார்கள். அதில் கிழக்கு மாகாண ஆளுனர் கிழக்கு மாகாணத்தை சீனாவிலுள்ள ஒரு மாகாணத்துடன் ‘இரட்டை நகரமாகப்’ பிரகடனம் செய்த காரணத்துக்காக இந்தியாவின் கடும் கோபத்துக்கு உள்ளாகியிருந்தார். வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவும் தனது சிங்கள அரசியல் நண்பர்களுக்கே விசுவாசமாக இருந்தவர். வடமேற்கு மாகாண ஆளுனர் பிரபல கொலைகாரக் கடற்படைத் தளபதி ஏற்கெனவே அமெரிக்காவின் தடைப்பட்டியலில் உள்ளவர். இவர்கள் மூவரும் சடுதியாகத் தூக்கப்பட்டதற்கும் அகல முயலும் இந்தியாவின் ‘அயல் முதல்’ கொள்கைக்கும் (neighbourhood first policy) சம்பந்தமில்லையெனக் கூற முடியாது.

இந்தியாவின் சீற்றத்துக்கு இன்னுமொரு காரணமுமுண்டு. ராஜபக்சக்கள் கஜானாவை வழித்துத் துடைத்துக்கொண்டு போனதைத் தொடர்ந்து இலங்கை வெளிநாட்டுக் கடன்காரரின் கால்களில் விழுந்ததும் அதைத் தூக்கித் தூசிதட்டி விட்டதும் இந்தியா தான். இலங்கையின் மீட்சிக்கு ஒரே வழி சர்வதேச நாணய நிதியமே என்றதும் தனது கடன்களை உடனடியாக restructure பண்ணி IMF இன் நிபந்தனைகளை இலங்கை ஏற்றுக்கொண்டு கடனை வாங்கியமைக்கும் முக்கிய காரணம் இந்தியா. சீனா முதலில் restructure பண்ண மறுத்திருந்தது. பின்னர் ஏதோ ஒரு பரோபகாரத்துடன் ‘சீனா உடன்பட்ட’ காரணத்தால் இலங்கைக்குக் கடன் கிடைத்தது. அப்போதுதான் பந்து இந்தியாவிடமிருந்து சீனாவினால் பறிக்கப்பட்டது என்பது இப்போது தெரியவருகின்றது. இந்த வாரம் கொழும்பு வந்திருந்த சீன உதவி வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை ‘அதிகாரபூர்வமாக’ நன்றி (கடன் பெற உதவியமைக்காக) தெரிவித்திருக்கிறது. அதன் பிரதியுபகாரமாக தனியார் மயப்படுத்தப்படும் எரிபொருள் விற்பனை நிலையங்கள் சீனாவுக்கும் வழங்கப்பட்டன. பந்தை இழந்த இந்தியாவுக்கு மிகவும் கடுப்பேத்திய செயல் இது.

இப்படிப் பலதடவைகள் இந்தியாவை இலங்கை கால்தடம் போட்டு விழுத்தியிருக்கிறது. இருப்பினும் இந்தியா எழுந்து நடந்ததற்குத் தானே sorry சொல்லிவிட்டு ஆட்டத்தைத் தொடர்ந்து வந்தது. ‘இதுதான் இலங்கை’ எனத் தமிழ் தலைவர்கள் பல தடவைகள் எச்சரித்திருந்தும்கூட, இந்திரா காந்தி தவிர, வேறெவரும் அவற்றைச் சட்டை செய்யவில்லை. இப்போது கடனில் மூழ்கிய இலங்கையை மீட்டுத் தந்த இந்தியாவிற்கு சிங்களம் மீண்டுமொருதடவை பெப்பே காட்டியிருக்கிறது.

விளைவு? நடக்கவிருக்கும் அமெரிக்க – சீன பொருதலில் இந்தியா நேரடியாக அமெரிக்கா பக்கம் நிற்கவே வாய்ப்புண்டு. இந்தோ – பசுபிக் களத்தில் சீனாவின் நகர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு மிகுந்த தேவை இருக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து சிறீவிஜயத்திற்கு சோழர்களின் கப்பல்கள் சென்ற பாதையானா மலாக்கா நீரிணை சீனாவின் கைகளில் விழுமானால் சீனாவின் ஆதிக்கம் இந்து சமுத்திரத்தினுள் விரிவாக்கப்படும். அதைச் சாத்தியமாக்க தற்போது அதற்குத் தேவைப்படுவது இலங்கை. இதை எதிர்கொள்ள இந்தியா தற்போது எடுத்திருக்கும் நகர்வுக்குப் பெயர் extended neighbourhood policy.

இதன் முதற்படி இந்தியாவைச் சுற்றியுள்ள தீவுகள், நேபாளம், பூட்டான் போன்றவற்றைக் கையைக் காலை முறுக்கியாவது தனது பக்கம் கொண்டுவருவது. இலங்கையில் அது சாத்தியமாவதற்கான சூழல் இல்லை. ஏற்கெனவே சீனா வெகுவாக அங்கு காலூன்றிவிட்டது. திருகோணமலை எண்ணைக் குதங்கள், மன்னார் காற்றாடி ஆலைகள் என்று சிறிய எலும்புத் துண்டுகளைப் போட்டு இலங்கை இந்தியாவை ஏமாற்றிவிட்டது. எனவே வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கரின் சீற்றத்துக்குக் காரணமிருக்கிறது. அவரது புதிய அறிவிப்பே extended neighbourhood policy.

இக்கொள்கையின் பிரகாரம் இலங்கைக்குத் தாரைவார்த்த கச்சதீவையும் கூடவே நெடுந்தீவையும் கையகப்படுத்த இந்தியா திட்டம் தீட்டுகிறது எனத் தென்னிலங்கை சிங்கள தீவிரவாதிகள் குளறத் தொடங்கிவிட்டார்கள். இந்திய வெளிவிவகார அமைச்சரின் ‘அகன்ற பாரதம்’ கொள்கை விளக்கத்தில் “இந்தியாவைச் சுற்றியுள்ள தீவுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் என ‘அகன்ற இந்தியா’ (Greater India) என்ற திட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் பரவலாக்கப்படும்” என அவர் கூறியது சிங்கள அரசியல்வாதிகளை மட்டுமல்ல அவர்களின் உடுக்கடி ஊடகங்களையும் உசுப்பேத்தியிருக்கிறது.

“இலங்கைக்கு நாங்கள் செய்த உதவி IMF கடனைவிடப் பெரியது. மோடியின் இந்தியா ஒரு எழுகின்ற சக்தி. அதன் வல்லமையைக் காட்டும் காலம் வந்துவிட்டது” என அமைச்சர் ஜயசங்கர் கூறியிருக்கிறார். மோடி, விக்கிரமசிங்க என்ற இரண்டு நரிகளுக்கிடையேயான போட்டியிது. இரண்டும் தமிழரை வைத்துத்தான் இவ்வாட்டத்தை ஆடி முடிக்கலாம். சமிக்ஞை தவறியதால் இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் எதிரும் புதிருமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றில் தமிழர்கள் பயணம் செய்கிறார்கள். அதுதான் வேதனை.

இதே வேளை நமது உள்ளூர் பா.ஜ.க. (விக்கி கட்சி) ‘ஒடுங்கிய ஈழத்தில்’ மஞ்சள் குருவிகள் செய்யும் அட்டகாசம் பற்றி வட இந்திய காவிகளிடம் முறையிட்டிருக்கிறார். புத்த காயா இந்தியாவில் இருக்கும்வரை விக்கியருக்கு விக்கினம் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் “ட்றை பண்ணினனான், சரிவரேல்ல” என்று memoirs இல் எழுதுவதற்காவது ஏதாவது வேண்டாமா. பாதகமில்லை, விட்டுவிடலாம். சிலவேளைகளில் அகண்ட பாரதத்தில் வடமாகாணம் ஒரு புது மாநிலமாக வந்தால் அதில் பா.ஜ.க. வை ஆட்சியில் அமர்த்தலாம் என இருபகுதியினரும் கனவு காணலாம். முற்கூட்டிய எமது அனுதாபங்கள்.

மோடியின் ‘அகண்ட பாரதம்’ கொள்கை ‘ஒடுங்கிய ஈழத்துக்கே’ வழிவகுக்கும். ராஜபக்ச கோஷ்டிக்கு பொற்கிண்ணத்தில் கொடுக்கப்படும் பாற்பழம். அவர்களின் மீள்வருகைக்கான கோள்கள் வானத்தில் பிரகாசிக்க ஆரம்பித்துவிட்டன. மோடிக்கு ஒரு ஆலோசனை. விஜயன் பரம்பரையும் நாயக்கர் பரம்பரையும் உங்கட ஆட்கள் தான். “ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்” என்ற பழமொழியொன்றுண்டு. புரியாவிட்டால் அண்ணாமலையிடம் கேளுங்கள். (Image Credit: Civils Daily)