News & AnalysisSri LankaWorld

அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களை ஜேர்மனி திருப்பியனுப்பவுள்ளது!

அகதி நிலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெருந்தொகையான தமிழர்களை ஜேர்மன் அரசு, மார்ச் மாதம் 30ம் திகதியளவில், இலங்கைக்குத் திருபியனுப்ப திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த சில நாட்களாக, அகதிநிலை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பல தமிழர்களின் இருப்பிடங்கள் அதிகாலையில் முற்றுகையிடப்பட்டு பலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. கைத் தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் யாரால் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. சிலர் இரண்டு வருட விசா தருவதாகவும் ‘வெளிநாட்டார் பொலிஸ் நிலையத்துக்கு’ வரும்படியும் அழைக்கப்பட்டு அங்கு சென்றதும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர்களது உறவினர்களும், நண்பர்களும் கவலைகொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், மார்ச் 30ம் திகதி விசேட விமானமூலம் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படவுள்ளார்கள் எனத் தகவலறிந்த மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில், டுசெல்டோர்ஃபில் 31 பேரும், ஃபிராங்க்ஃபேர்ட்டில் 50 பேரும், ஸ்டுட்கார்ட்டில் 11 பேரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வரைவை உருவாக்குவதன் பின்னால் இருந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களில் இப்படியொரு காரியத்தைத் திருட்டுத்தனமாகச் செய்வது அந்நாட்டின் கபடத்தனம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களை நாடுகடத்துவதன் மூலம் இலங்கையில் சிறுபான்மையினங்களுக்கு உயிராபத்து இல்லை, மனித உரிமை மீறல்கள் அங்கு நடைபெறுவதில்லை என்பதை ஜேர்மனி ஏற்றுக்கொண்டுள்ளதெனவே எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு நீதியான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிகளை இது பிரயோசனமற்றதாக்கும்.

எனவே இதை அவசியமான ஒரு விடயமாக எடுத்து புலம் பெயர் தமிழர் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர், உள்ளக அமைச்சர் ஆகியோருக்கு நாடுகடத்தல்களை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் கேட்டுக்கொள்கின்றன.