Columnsசிவதாசன்

அகங்காரம்

போர் ஈழமக்களின் மனங்களில் பல தீராத வடுக்களை விட்டுப்போயிருப்பினும் “எஞ்சியது கரித்துண்டாயினும் எழுதியே முடிப்போம்” என்ற மறைந்த ஈழக் கவிஞர் செழியனின் வரிகளைப் போல எம்மக்கள் வாழ்ந்து காட்டுவோம் எனத் தீர்மானத்தோடு இருப்பது புளகாங்கிதமடையச் செய்கிறது. நிலங்கள் தான் வரண்டுபோனதேயல்லாமல் மனங்களல்ல என்னும் வகையில் அவர்கள் இன்னும் தமக்காகவும் தம் மக்களுக்காகவும் துடித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. போர் காவுகண்டதுபோக எஞ்சிய பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நான் இருக்கிறேன் என்று உதிரத்தாலும் வியர்வையாலும் பசளை பெற்ற அந்த மண் ஆதரவு தருவது எத்துணை இன்பத்தைத் தருகிறது ?

போருக்குப் பின்னான ஈழத்தில் கடந்த சில வருடங்களாக உள்ளூர் மற்றும் புலம்பெயர் மக்களால் வாழ்வாதாரம், ஆரோக்கியம், கல்வி, தொழில்முயற்சி, விவசாயம், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை உற்று அவதானித்து வருபவன் என்ற முறையில் மனதில் எங்கோ ஒரு மூலையில் அகங்காரம் பீறிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கி வரும் ‘The Jaffna Club’ என்ற அமைப்ப்பின் மாதாந்த இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொள்பவன் என்ற முறையில் வடக்கில் நடைபெறும் வாழ்வாதார, தொழில் முயற்சிகள் போன்றன பற்றி நிறைய அறியகூடியதாக இருக்கிறது. பல புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் நிரந்தரமாகவும் சிலர் தற்காலிகமாகவும் அங்கு குடிபெயர்ந்து பலத்த சவால்களின் மத்தியிலும் தம்மாலியன்ற அளவுக்கு மக்களுக்குப் பலன் தரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ‘The Jaffna Club’ நிர்வாகியான ஜெகன் அருளையா அவர்கள் இம்முயற்சிகளை நேரில் போய் விசாரித்து ஆங்கிலத்தில் எழுதும் கட்டுரைகள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து ‘வளரும் வடக்கு’ என்ற தலைப்பில் இவ்விணையத் தளத்தில் அவ்வப்போது எழுதி வருகிறேன்.

இதைவிட 2004 முதல் அமெரிக்காவில் இருந்து இயங்கி வரும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பினால் (IMHO) வடக்கு, கிழக்கு, மலையகம் எனத் தமிழர் வாழிடங்களில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்ற விடயங்களில் ஆற்றிவரும் பணிகள் பற்றியும் கனடாவைத் தளமாகக் கொண்ட ‘அன்புநெறி’ அமைப்பு கிழக்கின் எல்லைக்கிராமங்களில் மேற்கொண்டுவரும் கல்வி மற்றும் வாழ்வாதாரப் பணிகள் பற்றியும் இவ்விணையத்தளத்தில் அவ்வப்போது எழுதி வருகிறேன். சமீபத்தில் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு மேற்கொண்ட இப்படியான ஒரு பணி பற்றியதே இக்கட்டுரை.

2022 இல் மலையகத்தைச் சேர்ந்த செல்வி எச். அனைத்துலக மருத்துவ நல அமைப்பிடம் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவர் வளர்க்கும் 400 கோழிகளுக்குத் தீனி போட முடியாத நிலையில் அவர் இவ்வுதவியைக் கேட்டிருந்தார். அவ்வுதவி கிடைக்காவிட்டால் தான் கோழிகளை விற்றுவிடப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்கி IMHO கோழித் தீனிக்கான ஒரு மாதச் செலவை வழங்கியிருந்தது. அதற்குப் பின்னர் அவருக்கு எதுவித உதவியும் தேவைப்படவில்லை. அந்த மாதம் கிடைத்த இலாபமே அவர் தனது தொழிலைத் தொடரப் போதுமானதாக இருந்தது.

நேற்று (ஏப்ரல் 07, 2024) IMHO வின் தலைவர் மருத்துவர் ராஜம் தெய்வேந்திரன் இப்பண்ணைக்கு விஜயம் செய்திருந்தார். இப்பண்ணையில் இப்போது 800 கோழிகள் வளர்க்கப்படுகின்றன. முட்டைகளை விநியோகம் செய்வதற்கென ஒரு ஆட்டோ இருக்கிறது. அத்தோடு சிறியதொரு நிலத்தில் அப்பெண் தேயிலையும் வளர்க்கிறார். இதற்கு மேலால் IMHO வழங்கிய நிதியுதவியின் ஒரு பங்கை அவர் மீளச்செலுத்தியும் விட்டார். அதுமட்டுமல்லாது மஸ்கேலியா நகரில் IMHO வினால் நிர்வகிக்கப்பட்டுவரும் தொழில்பயிற்சி நிலையத்தில் பைகள் மற்றும் சவர்க்காரத் தயாரிப்பு பற்றி அவர் கற்பித்தும் வருகிறார். அவரது வீட்டுத் தோட்டம் மிகவும் வெற்றிகரமான ஒன்று. அங்கு வளரும் அவரைக்காய், கத்தரி, தக்காளி போன்றவை பிரபலமானவை. IMHO வினால் பராமரிக்கப்பட்டுவரும் பல முன்பள்ளிகளில் ஒன்றுக்கான உணவையும் இவரே தயாரித்து வழங்குகிறார்.

அகங்காரம் வருவதற்குக் காரணமிருக்கிறது.