NewsNews & AnalysisWorld

ஃபைசர் | தடுத்தாண்டவரின் கதை

வைத்தியன்

எங்களில் பலர் உடலில் ஏற்றுவதற்கு ஆவலோடு காத்திருக்கும் ஃபைசர் தடுப்பு மருந்தின் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது.

தெஸ்ஸலொனீக்கி என்பது கிரீஸ் நாட்டிலுள்ள ஒரு துறைமுக நகரம். எண்பது வருடங்களுக்கு முன்னால் இங்கு சுமார் 60,000 யூதர்கள் அமைதியாகவும் செழிப்புடனும் வாழ்ந்துவந்தார்கள்.

பெரும்பாலானவர்கள் துறைமுக ஊழையர்களாகப் பணிபுரிந்து வந்தனர். சனிக்கிழமைகளிலும், இதர மத வழிபாட்டுத் தினங்களிலும் துறைமுகம் மூடுப்படுமளவுக்கு அவர்கள் அங்கு முக்கியம்பெற்று வாழ்ந்தார்கள்.

செப்டம்பர் 2, 1939 இல் இரண்டாம் உலகப் போர் வெடித்ததும் இங்கு எல்லாமே தலைகீழாகப் போனது. இந்த அமைதியான யூத சமூகத்தின்மீது நாஜிகளின் பயங்கரவாதம் வந்து வீழ்ந்தது.

ஏப்ரல் 6, 1941 இல் ஹிட்லர் கிரீஸ் மீது படையெடுத்தார். ரஷ்யா மீது அவர் மேற்கொள்ளவிருந்த ‘ஒப்பெரேஷன் பாபரோசாவுக்கு’ முன்னர் தென் முனையைக் கைக்குள் கொண்டுவரவேண்டியிருந்தது.

தெஸ்ஸலோனிகி யிலிருந்த 60,000 யூதர்களில் 50,000 பேர் ஹிட்லரின் பேர்க்கினோ செறிவு முகாமில் கொல்லப்பட்டனர். மிகச் சிலர் தப்பியோடியிருந்தனர். கிரீஸிலிருந்த யூதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறி குறுங்காலமே நிலைத்திருந்தாலும் மிகவும் கொடூரமானதாகவிருந்தது. தப்பிய குடும்பங்களிலொன்று பூர்லா குடும்பம்.

1961 இல் முகாமொன்றிலிருந்த இக் குடும்பத்துக்கு ஒரு ஆண் பிள்ளை கிடைத்தது. பெற்றோர்கள் அக்குழந்தையை இஸ்ரேல்-ஏப்ரஹாம் என அழைத்தார்கள். கிரீஸில் வளர்ந்த அக்குழந்தை பெரியவனாகி அங்கேயே விலங்கு மருத்துவத்தையும் கற்றுக்கொண்டது. பின்னர் சலோனிக்காவிலிருந்த அரிஸ்டோட்டில் பல்கலைக்கழக விலங்கியல் கல்லூரியில் மகப்பேறு உயிரியல் தொழில்நுட்பத்தில் ஏப்ரஹாம் தனது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

தனது 34வது வயதில் ஏப்ரஹாம் அமெரிக்காவுக்குச் சென்று வாழ்வதற்கு முடிவு செய்தார். அதற்காகத் தனது பெயரை ஏப்ரஹாமிலிருந்து அல்பேர்ட் என மாற்றிக்கொண்டார். அங்கு அவர் சந்தித்த மிரியம் என்ற யூதப் பெண்ணே பின்னர் அவரது மனைவியுமானார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.

அமெரிக்காவில் அல்பேர்ட் மருத்துவத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இணைந்து விரைவிலேயே தலைமை முகாமையாளராகப் பதவியுயர்ந்தார். அனங்கிருந்து அவரது பாதை குறுகலடைந்து 2019 இல் அந் நிறுவனத்தின் அதிபராகினார்.

2020 இல் அல்பேர்ட் தனது நிறுவனத்தில் அனைத்து வளங்களையும் குவித்து அப்போது உலகைக் கலக்கிவந்த புதியதொரு வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் செலவழித்தார். தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் பல வழிகளிலும் நிதி, தொழில்நுட்ப வளங்களைத் தேடிக்கொண்டார். ஒரு வருடத்தின் பின்னர் அவரது தேடல்களுக்கான பலன் கிடைத்தது. உலக சுகாதார நிறுவனம், தனது நீண்டகால எதிர்பார்ப்பான தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பொறுப்பை அவரது நிறுவனத்துக்கும் கொடுத்தது.

இன்று அந்தத் தடுப்பு மருந்து ஜேர்மனி உட்படப் பல நாடுகளில் விநியோகிக்கப்படுகிறது. ஜேர்மானியர்கள் உட்பட, உலகம் முழுவதிலுமுள்ள பல மில்லியன்கள் மக்களை வைரஸ்களிடமிருந்து காக்கப் போகும் இந்த தடுப்பு மருந்து ஹிட்லரின் கொலைவெறியிலிருந்து தப்பிய ஒரு யூதரது குழந்தையின் முயற்சியால் உருவாக்கப்பட்டது என்பது ஒரு முரண்நகை.

இதனால் தான் இத் தடுப்பு மருந்தை அவர் இஸ்ரேல் நாட்டிற்கே முதன் முதலாக வழங்கியிருந்தார். அவரது பாட்டன், பாட்டி, இஸ்ரேல்-ஆபிரஹாமைப் பெற்றெடுத்த பெற்றோர்களின் நினைவாக அவர் அதைச் செய்திருந்தார். அந்த அல்பேர்ட் பூர்லாவை அதிபராகக் கொண்டதுதான் ஃபைசர் நிறுவனம்.