வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்


துரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது.

அவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன  ஊடகங்கள். அவர் வரவே மாட்டார், இலக்கங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று செவிப்பறைகள் தகரச் சங்கூதின. அதையும் மீறி அவர் வந்து விட்டார். ஊடகங்கள் முட்டாக்குப் போட்டுக்கொண்டு கோடியால் ஓடி விட்டன.
இதெல்லாம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு மீண்டும் நெளிந்து கொண்டு முன்னால் வருவார்கள்.

மக்களது அபிப்பிராயத்தை ஆதிக்க சக்திகளுக்கு சார்பாக மாற்றி எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். மக்களது பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப உடுக்கடித்து உருவேற்றும் ஊடகங்களினால் தான் துரும்பர் வென்றார், ஹிலாறி தோற்றார். ஹிலாரி வென்றுவிடக் கூடாது என்று வாக்களித்தவர்களில் பலர் குடியரசுக்கட்சிக்காரரல்லர். அவருக்கு எதிரிகள் அதிகம். லிபியன் தலைவர் கடாபி கொல்லப்படட செய்தியைக் கேட்ட போது தொலைக்காட்சி முன் “We came, we saw and we killed him” என்று எகத்தாளமான சிரிப்புடன் அட்டகாசம் பண்ணியபோதே நினைத்தேன் இது உலகத்துக்கு ஆகாத ஒன்று  என்று.

அளிக்கப்படட வாக்குகளைப் பகுப்பாய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள் துரும்பரின் குடியரசு வாக்குத்தளம் வழமைபோல் தான் வாக்களித்திருக்கிறது. ஹிலாரியின் ஜனநாயகத் தளமே வற்றியிருக்கிறது  என்று. அதனால் தான் சொல்கிறேன் துரும்பர் வெல்லவில்லை ஹிலாரி தோற்றிருக்கிறார். அதற்கு காரணம் அவரது குடும்பமும் ஜனநாயகக் கட்சியின் மூலஸ்தானமும் தான். தொண்டர்கள் பாவம். அவர்களுக்கு ஆறுதல் கூறாமலேயே பள்ளி கொள்ளப் போன ஹிலாரியின் மீது எனக்கு அனுதாபமில்லை.

துரும்பர் ஒரு துவேஷி என்பதில் சந்தேகமேயில்லை. துவேஷி எல்லோருள்ளும்  தான் இருக்கிறார்.  புழுங்குகிறார்கள்  சிலர் புகைகிறார்கள் சிலர் குரைக்கிறார்கள். பலர் சிரிக்கிறார்கள். துரும்பரின் குறைப்பிற்கு ஹிலாரியின் சிரிப்பிற்கும் எந்த வித்தியாசமுமில்லை.
பெரும்பான்மையினர் மௌனமாய் இருப்பதால் தான் சிறுபான்மையினரின் விருப்புக்கள் இலகுவாக நிறைவேறுகின்றன என்றொரு புண்ணியவான் சொன்னான். இது ஒரு நித்திய உண்மை.
துரும்பர் விடயத்தில் இது தான் நடந்தது. ஸ்டாலின், ஹிட்லர் விடயங்களிலும் இது தான். இந்த தத்துவத்திற்கு  வலது இடது என்றெல்லாம் பேதம் தெரியாது. அதி தீவிர இடதுசாரிக் கொள்கைகளால் துருவப்படுத்தப்படட வலதுசாரிகள் இப்போது வெளியே வருகிறார்கள். அவர்களை சரியான தருணத்தில் இனம் கண்டு அவர்களின் பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொண்டதனால் தான் துரும்பர்  வெற்றி பெற்றார். அது அவரது சாதுரியம்.
அவரது வெற்றி உலகம் முழுவதும் கொதித்துக் கொண்டிருக்கும் வலதுசாரிச் சிறுபான்மையினரை உருவேற்றியிருக்கிறது. அங்கெல்லாம் புதிய துரும்பர்கள் வருவார்கள்,  பெரும்பான்மை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும். இடது சாரிகள் தமது முற்போக்கு கொள்கைகளை ஓரிரண்டு தசாப்தங்கள் அடைகாத்து மீண்டும் வருவர்.
துரும்பரின் வரவு எதையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரால் இலகுவில் முடியாது. வழக்கமாக இவற்றையெல்லாம் பூசி மெழுகி அதிகார வர்க்கத்தைக்  காப்பாற்றி வரும் ஊடகங்கள் அவர் பக்கம் இல்லை.  அவர் கவனம் எல்லாம் அமெரிக்கா மீதே இருக்கும். அதனால் உலகம் கொஞ்சக் காலம் சுயமாகச் சுவாசிக்கும். திணிக்கப்படட ஊன்றுகோல்களை எறிந்து விட்டு தாமாக நடக்க முற்படும்.
சமநிலையாக்கம் என்ற இயற்கையின் தத்துவப் பிரகாரமே எல்லாம்  நடக்கிறது.
Relax and enjoy!

பெரும் படம் பார்த்தல்

 

பெரும் படம் பார்த்தல்

துரும்பரைப்  பற்றி எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது நட்பு வட்டம் சுருங்கிக்கொண்டு போகிறது என்பதை ஒத்துக்கொண்டே  ஆகவேண்டும் .

துரும்பர் விடயத்தில் எனது பார்வை, அவதானிப்பு, நோக்கம் என்பன பற்றிய ஒரு சிறு அரும்பட விளக்கம் தான் இக் கட்டுரை.

வெள்ளை ஆண்  வர்க்கம்  ஆள்வதற்குத் தகுதியானது என்ற மூர்க்க எண்ணத்தின் அடிப்படையே துரும்பரை இவ்வளவு தூரம் தள்ளிக்கொண்டு வந்தது.

ஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் வெள்ளைத் தீவிரவாதியாக மாறியது சந்தர்ப்பவாதமாக இருப்பினும் அது ஒரு விபத்தல்ல. வெள்ளைத் தீவிரவாதம் நீண்டகாலமாக வெந்துகொண்டிருந்த ஒரு எரிமலை. புகையும் தருணத்தில் துரும்பர் அதைத் தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வியாபாரி. வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சந்தர்ப்பவாதிகள். சரியான சந்தர்ப்பங்களைத் தேர்ந்தெடுப்பவனே வெற்றி பெறுபவன். துரும்பர் வியாபாரத்தில் பெற்ற வெற்றியை அரசியலிலும் பெற முனைகிறார்.

இப்படியான துரும்பரின் சித்தாந்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவர் வெல்ல வேண்டும் என்பதற்கான நான் வைத்த காரணங்கள் தெளிவானதாகவில்லை. எனவேதான் இந்த அரும்பட (ஆம் எழுத்துப் பிழையல்ல ) விளக்கம்.

துரும்பரின் ஆரம்பகால பிரச்சாரக் கூட்டங்களில் பங்கு பற்றிய ஒரு பெண் ஆதரவாளரிடம்  ஒரு ஊடகவியலாளர் கேள்வி கேடடார். “துரும்பர் பெண்களை இழிவு படுத்திப் பேசியது உனக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதா?” அதற்கு அப் பெண் சொன்ன மறுமொழி “No, I am looking at the big picture’. அந்த ‘பெரும் படம் பார்த்த’லே எனது துரும்பர் ஆதரவுக்கான காரணமும்.

அப்பெண் சொன்ன அந்தப் பெரும் படம் – ‘துரும்பரின் வரவு அமெரிக்காவிற்கு பெரு நன்மையைப் பெற்றுக்  கொடுக்குமானால் பெண்மையை இழிவுபடுத்துவதைக்கூட நான் சகித்துக் கொள்வேன்’என்பதுவே.

நீண்டகாலமாகத் தகித்துக் கொண்டிருக்கும் ‘ஒடுக்கப்பட்ட’ வெள்ளையினத்தின் பிரதிநிதி அந்தப்பெண். அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வாழும் அடிமை விடுதலைக்குப் பின்னான எசமான் மனநிலைகளிலிருந்து விடுபட முடியாமல் தகிக்கும், தம் பொற்கால மீட்ப்பிற்காக  அலையும் செங்கழுத்து வெள்ளையரின் மோசஸ் தான் நமது துரும்பர். இவர்களின் தேடலைச் சரியாக அறிந்து சந்தர்ப்பத்தை அறிந்து அரசியல் செய்ய வந்தவர் தான் துரும்பர்.

அதற்கும் என்னுடைய பெரும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?

இன்றய உலக மகா பிரச்சினைகளுக்கெல்லாம் தாயான பிரச்சினை மத்திய கிழக்குப் பிரச்சினைதான். இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணமே மேற்கு ஐரோப்பா தான். வியாபார காரணங்களுக்காகவும் அரசியற் காரணங்களுக்காகவும் குழப்பப்பட்ட குழவிக்கூடுதான் இன்றய மத்திய கிழக்கு. ஆப்கானிஸ்தானின் ரஷ்ய ஆதரவு -இடதுசாரி நஜிபுல்லா அரசைக் கவிழ்க்கவென உருவாக்கப்படட முஜாஹிதீனின் இன்றய வடிவம் தான் ஐசிஸ்.  இந்த ஐசிஸ் உருவாக்கத்தில் ஒபாமாவிற்குப் பங்கிருக்கிறது என்று துரும்பர் பகிரங்கமாகக்  குற்றம் சாட்டுகிறார். புட்டினுடன் சேர்ந்து ஐசிஸ் பயங்கரவாதிகளைப்  பஸ்பமாக்கிவிடுகிறேன் என்கிறார். மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு என்ன வேலை என்கிறார். பல உலக நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அமெரிக்க சுய உற்பத்தியையும், வேலைவாய்ப்புகளையம் பாதிக்கின்றன என்கிறார். மொத்தத்தில் இன்று இருப்பதாக நாம் கருதும் இடதுசாரி நாடுகள் வரித்துக் கொள்ளும்  கொள்கைகள் பலவற்றைத் துரும்பரும் கொண்டிருக்கிறார்.

துரும்பர் சொல்லும் மெக்சிக்க எல்லைச் சுவரைப் பார்ப்போம்.

நீண்ட காலமாக பல வறிய மெக்சிக்கர்கள் களவாக அமெரிக்காவில் புகுந்து மிக குறைந்த சம்பளத்தில் நாட்க்கூலிகளாக வேலைபார்த்துவிட்டுத் திரும்பிவிடுவார்கள். அமெரிக்க எல்லை மாநிலங்களில் பல முதலாளிகள் இப்படியானவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பெரும் லாபத்தை ஈட்டி வந்தனர். மெக்சிக்கர்களின் கள்ளக்  குடிவரவைத் தடுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட  போது அதை எதிர்த்தவர்கள் இந்த முதலாளிகள். இந்த முதலாளிகள் துரும்பரையும் எதிர்க்கிறார்கள்.

சரி. துரும்பர் அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வரூவதைக் கட்டுப்படுத்துவேன் என்கிறார். மதில் கட்டுவேன் என்கிறார். அதையெல்லாம் நம்பி – இவர் ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்க நற்பெயர் கெட்டுவிடும் என்கிறார்கள். அப்போ துரும்பர் சொல்லும் ஏனையவற்றையும் நம்பியேயாக வேண்டும். மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறும். புட்டினுடன் சேர்ந்து ஐசிஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதையெல்லாம் நம்பியேயாகவேண்டும்.

அல்ஜீரியாவில்,எகிப்தில், லிபியாவில், சிரியாவில், இராக்கில்  இடப்பட்ட மூலதனங்களின் அறுவடையே  இன்றய உலகின் பயங்கரவாதம். சாதாரண மக்களின் உயிர்கள்தான் உலக வணிகர்களின் நாணயங்கள். இந்த வணிகர்களின் கூடாரத்தில்தான் இரண்டு கட்சிகளும் உறங்குகின்றன. இருவருக்கும் தீனி போடுவது வால்ஸ்ட்ரீட் பெருவணிகர்கள். அமெரிக்க வரலாற்றில் இவர்களின் கடடளையை  மீறும் முதலாவது ஜனாதிபதி வேட்பாளர் துரும்பராகவே இருக்கும் (பேர்ணி சாண்டர்ஸ் இறுதியில் சறுக்கிவிட்டார் என்கிறார்கள்).

சரி, துரும்பர் ஜனாதிபதியாக வந்தால் என்ன நடக்கும்? மதில் கட்டப்படலாம், முஸ்லிம்கலின் குடிவரவு தடுக்கப்படலாம். ஐசிஸ் தொல்லை ஒழியலாம். மத்திய கிழக்கு சுதந்திரமடையலாம்.

இவற்றை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நான் நம்பவில்லை.

ஆனால் எது நடக்கலாம் என நான் நம்புவது இதுதான்.

அமெரிக்க உற்பத்தி பெருக வேண்டுமானால் மலிவு விலை இறக்குமதி கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதன் பெறுபேறு: பொருட்களின் விலை அதிகரிப்பு அதனால் பண வீக்கம், அதனால் வட்டி வீத அதிகரிப்பு அதனால் பொருளாதார பாதிப்பு – இது  ஒரு பக்கம்.

துரும்பரின் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இப்பொழுது தகித்துக் கொண்டிருக்கும் நாஜிகளினதும் பாசிஸ்ட்டுகளினதும் மீளெழுச்சி ஊக்கம் பெறும். இதனால் வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்கா சிக்கலான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும்- இது இன்னொரு பக்கம்.

இந்த இடைவெளியில் உலக ஒழுங்கு அமெரிக்க கட்டுப்பாட்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்கு வித்திடப்படலாம். அமெரிக்க சாம்ராஜ்யத்தின் சரிவு ஆரம்பிக்கும். அதற்கான சுழியை  துரும்பரே போடுவார்.

மாறாக, நீங்கள் விரும்பியபடி கிளிண்டன் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க மேலாதிக்கம் இன்னும் வலுப்பெறும்.

தொட்டிலும் ஆடும் பிள்ளையும் கதறும்.

This is my big picture.

இக்கட்டுரை செப்டம்பர் 20116 ஈ குருவி  பத்திரிகைக்காக எழுதப்பட்டது.

பிற்சேர்க்கை:
விமர்சகர்களுக்கு ஊரெல்லாம் எதிரிகள். எனது எழுத்து ஒரூ சமூக அவதானிப்பு எனவே நான் கருதுகிறேன். விமர்சகர்கள் சமூக அளவுகோல்களை வைத்துக்கொண்டு நடப்புகள் மீது கருத்துக் சொல்பவர்கள். என்னிடம் எந்த அளவுகோல்களும் இல்லை. அளவுகோல்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. புலன்களின் மதிப்பீடுகள் எல்லாமே subjective வகைக்குள் அடங்குவன.

இவரும் அவர்தானா?

எதிரிகளால் வரும் ஆபத்துக்களை விட எதிர்பாராமல் நண்பர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களே அதிகம் என்று பலரும் பல தடவைகள் அனுபவித்து எழுதியிருக்கிறார்கள். இதில் அழுது கொட்டுவதற்கு
எதுவுமில்லை.
அரசியலில்  இது இன்னும் மோசம். உண்மையில் அரசியல்வாதிகள்  மட்டும்தான் உலகத்திலேயே ஒற்றுமையானவர்கள். தங்கள் தேவைகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் கட்சி, மத, இன வேறுபாடுகளின்றி ஒற்றுமையாகச் செயற்படுபவர்கள் (உதாரணம் தமக்குத் தாமே சம்பள உயர்வு கொடுத்துத் தள்ளுவது).
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இடது சாரி வலது சாரி நடுவிலான் என்றெல்லாம் கோஷங்களோடும்
கொள்கை முழக்கங்களோடும் ஊர்வலம் வந்து அப்பாவி மக்களை நம்ப வைத்து ஆசனத்தில் அமர்ந்தவுடன் – “யார் நீ , எதற்கும் அலுவலகத்தில் மனுவைக் கொடுத்துவிட்டுப் போ பின்னர் பார்க்கலாம்”- என்ற சுபாவம் வந்து தொலைத்து விடுகிறது. இது நம்ம சமூகத்தில் மட்டும் நடைபெறுவதல்ல  என்பது கொஞ்சம் ஆறுதலாகவிருக்கலாம்.
தென் நாட்டில் துரும்பர் அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிடட நிலையில் நம்ம நாட்டில் ‘இது 2016’ என்று நாமம் போட்டுக்கொண்டு வந்த இளவரசர் சமீபத்தில் போட்ட குண்டு
எனது செவிப்பறையைத் தாக்கியிருக்கிறது.ஹார்ப்பரசரோடு ஒப்பிடுகையில் இவரது வெளிநாட்டுக்கு கொள்கையில் பல மாற்றங்கள் நிகழும்,
உலகில் போர்கள் தணிந்து மக்கள் தம்மைத் தாமே தூக்கி நிறுத்திக் கொள்ள, ஆசுவாசப் படுத்திக் கொள்ள ஒரு இடைவெளி கிடைக்கும் என்று நம்ப வைக்கப் பட்டவர்கள் ‘என்ன இவரும் அவர் தானா?’ என்று மூக்கில் விரலையே வைக்கிறார்கள்.சிவப்பு சட்டைகளைப் போட்டுக்கொண்டு மனித உரிமைகள் பற்றிப்  பேசுபவர்களது நிஜ வாழ்க்கை  நீலச்  சட்டை போட்டுக் கொண்டு இனவாதம் பேசுபவர்களது வாழ்க்கையை விட மோசமானது என்ற எண்ணம் உங்களிடமும் இருக்கிறது என்றால் – நானும் உங்களினம்.

நம்ம நாட்டு இளவரசர் உலகத்துக்கு இப்படி எல்லாம் இம்சையரசராக மாறுவாரென்று நான்
நினைத்திருக்கவில்லை.

ஈராக்கிலிருந்து மூன்று நான்கு போர் விமானங்களை மீளப்பெற்றுவிட்டு 200 காலாட் படைகளை அனுப்பி
வைத்தது ஒரு அமைதி விரும்பி செய்யும் கடமையல்ல.

ரஷ்ய எல்லை நாடுகளில் நேட்டொ குவிக்கும் படைகளில் ட்ரூடோவின் படைகள் முன்னணி வகிக்குமாம். சவூதி கொலையரசர்களுக்கு கோடி கோடியாக ஆயுதங்களை வழங்கியமை அப்பட்டமான
நபும்சகத்தனம்.

பல வருடங்களுக்கு முன்னர் ஊரிலிருந்து வந்தவர் ஒருவர் சொன்ன கதை இது.

ஒருவருக்கு ஒரு இயக்கத்தில்  சேர விருப்பம். உள்ளூர் ஆள்பிடி காரரை அணுகி யபோது  ‘நீ  ஒரு  நோஞ்சான் உன்னை ஒரு இயக்கமும் சேர்க்காது ‘ என்று சந்தியில் வைத்து அவமானப் படுத்தி விடடார் அந்த ஆள்பிடி காரர். மனம் குழம்பிப் போன வீரவான் ‘கொஞ்சம் பொறு நான் யாரெண்டு காட்டிறன்’ என்று வீட்டுக்குப் போய்  கோடரி ஒன்றைக் கொண்டு வந்து சந்தியில் நின்ற ஒரு முதியவரைக் கொத்திக்
கொலை செய்து விட்டு ‘இப்போ நான் வீரனில்லையா’? என்று கேடடாராம்.

இது ஒரு செவி வழிக்கதையாகவே  எனக்குத் தெரிந்திருந்தது. அன்றய சூழழில் இப்டியொரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருந்தது என்பது மட்டும் உண்மை.

ட்ரூடோவின்  நகர்வுகளை பார்க்க இந்த நோஞ்சானின் கதை தான் நினைவுக்கு  வந்தது. ‘நானும் ரவுடி
தாண்டா’ என்று வடிவேலு போலீஸ்காரரிடம் தன்னைக் கைது செய்யும்படி கெஞ்சுவதைப் போல இருக்கிறது ட்ரூடோவின் நடவடிக்கைகள்.

எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் மீறி உலக சமாதானத்தைக் கொண்டு வருவதும் ஒரு வகை வீரம் தான்.

1964 இல் பல எதிர்ப்புகள் மத்தியிலும் அமெரிக்க குடியுரிமைச் சட்ட த்தில் (Civil Rights Act) கையெழுத்திட்டு நிறப்பிரிகைச் சடடத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன்  போன்றவர்களைத் தான் நான் வீரர் என்று சொல்லுவேன்.

ஒவ்வொரு வாரமும் ஆளில்லா விமானத்தை ஏவுவதன் மூலம் பெண்களையும் குழந்தைகளையும்
கொன்றுவிட்டு உலக சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெற்றுக்  கொண்ட பராக் ஒபாமா ஒரு வீரர் அல்ல.

ஹார்ப்பரை வெறுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அது நடிக்காமையின் விளைவு. ட்ரூடோவைப்  பலர் விரும்புவதற்குக் காரணம் அவர் சிறந்த நடிகனாக இருப்பதனால் எனவும் பார்க்கலாம்.

உள்நாட்டில் நிலைமை சீராக இருக்க வேண்டுமானால் வெளியுறவுக் கொள்கை நன்றாக இருக்க வேண்டும்.

இதை புரிந்துகொள்ள ஒருவர் ஐன்ஸ்டினாக இருக்க வேண்டுமென்பதில்லை.

உலகின் இன்றய நிகழ்வுகள் பேரழிவுக்கான கட்டியத்தைக் கூறுபனவாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் துரும்பரின் வருகை வெள்ளை அதிகாரத்தின் மீளெழுச்சியின் அறிவிப்பு. நீண்ட
காலமாகக் கைவிடப்படட சாமான்ய வெள்ளையரின் சுனாமியைத் திசை திரும்பியவர் தான் துரும்பர். அதில்அடிபடப்  போவது வெள்ளையரல்லாதோர் தான்.

கிளின்ரன் ஒபாமா போன்றோரைப்  பாவித்து தமது இலாபங்களை பெருக்கிய பெரு வணிக நிறுவனங்களின் உலக மயமாக்கலினால்  சோபை இழந்துபோன அமெரிக்காவை மீட்டெடுக்கப் போவதாக உருக்கொண்டிருக்கும் துரும்பரை  இந்தத் தடவை யாராலும் நிறுத்த முடியாது. என்றுதான்
படுகிறது.

உலகெங்கும் வெள்ளை வெறி ‘உரு’ க்கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் உடைவு இந்தப் பெரு
விளையாட்டின் ஒரு அங்கம் தான்.

”பின் லாடனுக்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது அமெரிக்கா தான்’ என்று பேராசிரியர் நோம் சோம்ஸ்கி ஒரு தடவை சொல்லாயிருந்தார்.

இப்போது இஸ்லாமிய பயங்கரவாதம் வெள்ளை வெறியினருக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கிறது. துரும்பருக்கு வெற்றிக்கு அதுவேதான் காரணமாகவிருக்கப் போகிறது.

புஷ் ஆட்சியை விட கிளின்ரன் ஆட்சியின் போது தான் அதிக உலக நாடுகளில் குண்டுகள் போடப்படடன. அதிக எண்ணிக்கையில் கறுப்பர்களைச் சிறையில் தள்ளியது கிளின்ரன் அரசு தான். அடுத்த கிளின்ரன் ஆட்சிக்கு வந்தாலும் ‘ஆளப்’ போவது பில் கிளின்ரன் தான் என்கிறார்கள். அவர் வணிக முதலைகளின் சேவகர்.

துரும்பருக்கும் கிளின்ரனுக்கும் போட்டி வரும் போது ‘நானும் நோஞ்சானில்லை’ என நிரூபிப்பவர்களால் தான் அதிக வெள்ளை வாக்குகளை எடுக்க முடியும். அதற்காகவே எங்கோ ஒரு அப்பாவி  நாடோ தலைவரோ, மக்களோ அழிக்கப்படலாம்.

துரும்பர் நிறைய சவுண்ட் கொடுக்கிறார். அவர் கைகளில் கோடரி இல்லை.

எனக்குப் பயம் சிரிப்பவர்கள்  மீதுதான்.

இக்கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் ஆடி மாத ‘ஈ குருவி’ பத்திரிகையில் பிரசுரமானது. இங்கு சில திருத்தங்களுடன் மறு பிரசுரமாகிறது.

துரும்பரின் அவதாரம்

அவர் வருவாரா? வருவார் என்கிறார்கள்.
உலகத்தில் அதர்மம் ஓங்குகின்றபோது தர்மத்தை நிலை நாட்ட அவர் வருவதுண்டு.
உலகில் பல காலங்களில் பலரும் ‘நான் தான் அவர்’ என்று கூறி அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இவரும் ஏன் இருக்கக் கூடாது என்ற குதர்க்கத்துடன் ‘அவரின்’ வரவை நான் எதிர்பார்க்கிறேன்.
ட்ரம்ப் என்பது அவர் பெயர். மரியாதை கருதி அவரைத் துரும்பர் என அழைப்போம்.
அமெரிக்கா அதர்மர்களின் கைகளில் அகப்பட்டுப் பரிதவிக்கிறது அதைக் காப்பாற்ற வந்திருக்கிறேன் என வந்து குதித்தவர் தான் துரும்பர்.
அவரால் தான் இந்த நெளிந்த உலகத்தை பென்ட் எடுக்க முடியுமென என்று ஏனோ எனது சூட்சும சரீரம் சொல்கிறது.
அதனால் மெக்சிக்க குடிவரவினர் எல்லாம் காமுகர்கள் என்றோ அல்லது அமெரிக்காவிற்குள் வரும் முஸ்லிம்கள் எல்லோரும் தற்கொலைதாரிகள் என்றோ நானும் ஏற்றுக் கொண்டதாகக் கருதிவிட வேண்டாம்.
துரும்பர் ஒரு பக்கா வியாபாரி. ஒரு நோட்டுப் பற்றாளர் மிகப்பெரும் பணக்காரர். ஒரு நிறவாதி, ஆணியவாதி. மொத்தத்தில் ஒரு வலதுசாரிக்குரிய அம்சங்கள் எனச் சட்டம் போடப்பட்ட குணாதிசயஙகள் அவருக்குமுண்டு. இந்த தடவை
அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் பலருக்கும் இப்படியான பண்புகள் உண்டு. இருப்பினும் அதிகார வர்க்கம் ஏன் துரும்பரைப் புறந்தள்ளுகிறது என்பதிலிருந்து தான் எனது இந்த குதர்க்க விவாதம் ஆரம்பிக்கிறது.
‘அதிகார வர்க்கம்’ விரும்பாத ஒருவர் அமெரிக்காவில் அதிபராக வரமுடியாது என்பது எழுதாத சட்டம். 2008 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது நிதியுதவி வழங்கிய முன்னிருபது நிறுவனங்களின் (வால் ஸ்றீற் நிறுனங்கள்) கொடுப்பனவு இப்படியிருக்கிறது:
ஜனநாயகக் கட்சியின் ஒபாமாவுக்கு 13.3 மில்லியன்கள் ; குடியரசுக் கட்சியின் மக்கெயினுக்கு 9.3 மில்லியன்கள்.
அதிகார வர்க்கம் ஏன் ஒபாமை விரும்பியது என்பதற்கு தர்க்கரீதியான விளக்கத்தைத் தேடிப் போகத் தேவையில்லை. சாதாரண தர்க்க விதிகளுக்குள் இன்றய உலகம் அமைவதில்லை.
இந்த அடிமட்டத்தினால் அள்க்கப்படும்போது துரும்பர் ஏனையவர்களைவிடப் பெரியவராகத் தெரிகிறார்.
ஏனையவர்களுடன் ஒப்பிடும்போது துரும்பர் ஒரு raw uncut character. இந்த அதிகார வர்க்கத்தின் பணத் தூண்டிலை அவர் விழுங்க மறுப்பவர். மதங்களின் கட்டுப்பாடுகளை ஏளனம் செய்பவர். ஒரு சாமானியனின் விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலிப்பவர்.
அதனால்தான் ஏழை, பணக்காரர், ஆண்கள், பெண்கள், மெக்சிக்கர்கள், முஸ்லிம்கள், கறுப்பர்கள், மதவாதிகள், மிதவாதிகள் எல்லோரும் அவரின் ஒளிவட்டத்தில் அதிகம் பிரகாசிக்கிறார்கள்.
இருட்டில் நிற்பவர்கள் பல்தேசிய நிறுவனர்களும் அவர்களினால் நாமமிடப்பட்ட பூசாரிகளுமே.
பாம்பின் காலைப் பாம்பறியும். அதிகார மையம் எங்கு இருக்கிறது எப்படி இய்ங்குகிறது என்பது துரும்பருக்குத் தெரியும்.
அப்வர்களின் பெரு நோக்கம் சிறு நோக்கம் என்னவென்பதும் அவருக்குத் தெரியும். தமது பணத்தை அள்ளி இறைப்பதன் மூலம் தமது நலன்களைப் பெருக்க துரும்பர் இடம் கொடுக்கமாட்டார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இதுவரை காலமும் மேப்பர்களை அவர்களே தேர்ந்தெடுத்து வந்தனர். அவர்களது ஊடகங்கள் செருக்கிய உணவையே நுகர்வு மந்தைகள் உண்டும் வந்தன.
இது துரும்பரின் காலம்.
சமூக வலைத்தளங்கள் சாமானியனின் ஆயுதமாக்கப்பட்ட பிறகு மந்தைகளுக்கு தேர்வுகள் அதிகம்.
துரும்பரை அவை தமது மேய்ப்பராக ஏற்றுக்கொண்டு விட்டன.
அமெரிக்காவின் ஆரம்பக் குடியேறிகள் பலர் சுதந்திரவாதிகள் (libetarians). முந்நாள் அடிமைகளின் எசமமான்களின் பரம்பரையினர். கிராமிய வாசிகள். அமைதியான பிரத்தியேக வாழ்வை விரும்புபவர்கள். பெருங்கல்வி கற்றவர்கள் அல்ல.
அமெரிக்காவின் தெற்கு, மேற்கு பிரதேசங்களில் வாழ்பவர்கள். பின்னாட் குடியேறிகள் வடக்கில் வாழ்பவர்கள். மெருகூட்டப்பட்ட வலதுசாரிகள். கல்வி கற்ற, தனவந்தர்கள். அதிகார மையம்
இவர்களைச் சார்ந்தே இருந்துவருகிறது. பலம் வாய்ந்த ஊடகங்கள் மூலம் அதிகாரத்தைத் தம் வசம் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். தெற்கு ஒருவகையில் இவர்களின் பின்நாள் அடிமைகள்.
கறுப்பு அடிமைகளை விடுவித்ததில் வடக்கு அமெரிக்காவிற்குப் பெரிய பங்குண்டு. 1860 இல் அதிபர் – குடியரசுக் கட்சியைச் சேர்ந்த – ஆப்பிரகாம் லிங்கன் அடிமைகளை விடுவிக்க எடுத்த நடவடிக்கை தமது சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று சில தெற்கு மாகாணங்கள் தொடக்கிய போரில் சுதந்திரவாதிகள் தோல்வியுற்றனர்.
சுதந்திரவாதிகள் பழைமையை விரும்புபவர்கள். தமது பிரத்தியேகத்தில் பிறர் உலா வருவதை அவர்கள்
விரும்புவதில்லை. தாமுண்டு தமது குடும்பமுண்டு என்று வாழ்பவர்கள். சமீப காலங்களில் பயங்கரவாதம் என்ற பெயரில் இயற்றப்படும் சட்டங்கள் தமது சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று போர்க்கொடி தூக்கியவர்கள். ஜனநாயக ரீதியாகத் தங்களின் ‘உரிமைகளை’ வென்றெடுக்க வாக்கு பலம் போதாது என உணர்ந்து சிறிய அளவில் சில வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சிவில் யுத்தத்தைப் போலவே அந்நட்வடிக்கைகளும் மூர்க்கமாக ஆனால் இரகசியமாக அடக்கப்பட்டு விட்டன.
வேறு வழியின்றி மீண்டும் ஜனநாயக ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தீர்மானித்தார்கள். இவர்களின் பின்னணியில் பணபலம் மற்றும் மூளை பலத்தோடு செயற்படுபவர்கள் கோக் (Koch Brothers) சகோதரர்கள் என்று அறியப்படுகிறது.
துரும்பரின் துடுக்கும் தொனியும் அபிலாட்சையும் இவர்களின் தேவையும் எங்கோ ஒரு புள்ளியில் சங்கமித்திருக்கின்றன. வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. துருமப்ரின் வடிவில் முதல் தடவையாக
இப்போதுதான் அவர்களுக்கு ஒரு தலைவர் வந்துதித்திருக்கிறார். 1860 சிவில் யுத்தத்திற்குப் பின்னால் முதல் தடவையாக ‘அமெரிக்க தேசியம்’ என்ற புதிய வியூகமொன்றை எடுத்திருக்கிறார்கள். பல்தேசியம் அமெரிக்காவைச் சீரழித்து விட்டது என்பதை முன்வைத்து அவர்கள் போராட வந்திருக்கிறார்கள். அவர்களின் குரலை துரும்பர் ஒலிக்கிறார்.
துரும்பர் எல்லா வகையிலும் ஒரு வடக்கர் தான். அதிபராக வந்துவிட வேண்டுமென்ற ஒரு அபிலாட்சையை விட அவருக்கு வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவர் கூச்சலிடும் எதையும் அவரால் நிறைவேற்ற முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். அமெரிக்கர்களின் அல்லாடும் உணர்வுகள் குறுவாழ்வுடையன என்பதுவும் அவருக்குத் தெரியும்.
இன்றய நிலையில் அதிகார வர்க்கம் தந்நை ஆதரிக்காது என்று தெரிந்தவுடன் அதற்கு எதிரான குடியரசுக் காரருடன் கை கோர்த்திருக்கிறார்.
அதிசயமென்னவென்றால் வழக்கமாக தெற்கத்தைய மதவாதிகள் குடியரசுக் கட்சியின் மந்தைகளாகவே வாக்களிப்பார்கள்.
துரும்பருடன் போட்டியிடுபவர்களும் அதிகார வர்க்கமும் இந்த ‘மந்தை’வாக்குகளையே நம்பியிருந்தனர். மதவாதிகள் மட்டுமல்ல் துரும்பர் திட்டும் ஏனைய மாற்றினங்களும் பெண்களும் கூட அவ்ர் பின்னாலேயே அணிதிரளுகின்றனர்.
இப்படியொரு நிறவாதியை, அடிமை விரும்பியை, பெண்களைத் தூஷிப்பவரை, பணத்திமிர் பிடித்தவர் ஒருவர் அமெரிக்க அதிபராக வருவதை நான் ஏன் விரும்புகிறேன்?
இன்றய உலகு நிலை குலைந்துவருவதற்கு, சமாதானம் அருகி வருவதற்கு முதன்மையான பங்காளி அமெரிக்கா என்று நான் நம்புபவன். அமெரிக்க அதிகார வர்க்கத்தின் இலாப மோகம் உலக
நலன்களை மீறிச் செயற்படுகிறது. அதைச் சீரழிக்கும் வல்லமை புறச் சக்திகளிடம் இல்லை, உட்சக்திகளாலேயே அது சாத்தியமாகும்.
அதிகார வர்க்கம் சதி செய்யாவிட்டால் – துரும்பர் ஆட்சியில் அது நிகழ வாய்ப்பிருக்கிறது. There are many ways to skin a carrot. This may be one.
துரும்பர் ‘அவ்ராக’ இருக்கவேண்டுமென்பதில்லை. இருந்தால் நல்லது என விரும்புகிறேன்.
ஏப்ரல் 24, 2016 ஈ குருவி பத்திரிகையில் பிரசுரமானது