செய்தி

சி.ல.சு.கட்சியின் தலைமையகத்துக்குச் செல்ல சந்திரிகாவிற்குத் தடை – சிறிசேன.

முந்நாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரரணதுங்கவையும் அவரது ஆதரவாளர்களையும்  சிரிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமயலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டாமென அதன் பராமரிப்பாளர்களுக்கு ஜனாதிபதி சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தாய்லாந்தில் பிரத்தியேக விடுமுறையொன்றை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் அவர் இக் கட்டளையைப் பிறப்பித்ததாக அறியப்படுகிறது. தான் திரும்பி வரும்வரையில் டார்லி தெருவில் அமைந்திருக்கும் தலைமை அலுவலகத்தைப் பூட்டி வைத்திருக்கும்படி அவர் கட்டளையிட்டிருந்ததாக அப் பத்திரிகை கூறுகின்றது.

 


ராஜபக்சவின் பிரதமர் பதவிக்கு நீதிமன்றம் தற்காலிக தடை

மஹிந்த ராஜபக்சவும் அவரது மந்திரி சபை மற்றும் துணை அமைச்சர்கள் ஆகியோரும் தொடர்ந்தும் தங்கள் முறையற்ற அரசங்கத்தைத் தொடர முடியாது என்று மேல் முறையீட்டு நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மகிந்த ராஜபக்சவினது முறையற்ற அரசாங்கம் தொடர்வது அரசமைப்புக்குப் புறம்பானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்த முறையீட்டின் மீது தீர்ப்பளிக்கும் போது மேல் முறஒயீட்டு நீதிமன்றம் இவ்வாணையைப் பிறப்பித்தது. அத்தோடு, எவ்வகையான அதிகாரத்துடன் அரசாங்கத்தைத் தொடரலாம் என்பதற்கான ஆதாரத்தை மகிந்த தரப்பு கொடுக்க வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

 

 

அனந்தி சசிதரன் மீது பண மோசடிக் குற்றச்சாட்டு | விசாரணைக் குழு நியமனம்

முன்னாள் வட மாகாணசபை பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மீது செய்யப்பட்ட பண மோசடிக் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக விசாரிக்க மூவர் கொண்ட குழுவொன்றை வட மாகாண ஆளுனர் ரெஜினால்ட் கூறே நியமித்துள்ளார்.

இருதய மற்றும் சிறுநீரக வியாதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்ட நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளது என்று வட மாகாணசபையைச் சேர்ந்த திரு சீ.வீ.கே. சிவஞ்ஞானம் செய்த புகாரைத் தொடர்ந்தே இவ் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

மஹிந்த ராஜபக்சே சந்திப்பு – த.தே.கூ. அறிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் திரு.மஹிந்த ராஜபக்ச அவர்களின் வேண்டுகோளின்படி இன்று அவரை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். திரு இரா. சம்பந்தன் அவர்கள் வேறு எந்தவொரு அடிப்படையிலும் இந்த சந்திப்பில் பங்குபெறவில்லை. மேலும் இச்சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை, இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

 

புதிய கண்களூடு சிறீலங்காவைப் பாருங்கள்

சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை செயற்குழுவின் 73 வது அமர்வின்போது பேசிய சிறீலங்காவின் ஜனாதிபதி சர்வதேச சமூகத்துக்கு மேற்கண்ட அழைப்பை விடுத்தார். “இனங்களுக்கிடையேயான இணக்கம், ஜனனாயக சுதந்திரத்தின் மீளுருவாக்கம், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டமை போன்ற விடயங்களில் நாட்டில் முன்னேறம் ஏற்பட்டுள்ளது. சமாதானத்தை நிலைநாட்டவும் பொருளாதாரத்தை முன்னேற்றவும் நாம் எடுக்கும் முயற்சிகளைச் சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஆதரவை வழங்க வேண்டும். எமது மக்களே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள சர்வதேசம் அனுமதிக்க வேண்டும்” என ஜனாதிபதி தனது உரையின் போது கூறினார்.

பொதுப் பணியாளர்கள் மத அடையாளங்கள் அணிவது தடை செய்யப்படலாம்- கியூபெக் மாகாண அரசு

ஒக்டோபர் 1ம் திகதி நடைபெற்ற கியூபெக் மாகாண அரச தேர்தலில் கோலிஷன் அவெனி கியூபெக் (Coalitions Avenir Quebec -CAQ) கட்சி 74 ஆசனங்களைப் பெற்று அபார வெற்றியைப் பெற்றது. 2011 இல் இருந்து இக் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வந்தாலும் இந்த தடவைதான் அது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இம் மாகாணத்தின் ஆட்சி லிபரல் மற்றும் கியூபெக்குவா கட்சி இரண்டுக்குமிடையேதான் மாறி வந்திருக்கிறது.