BLOG

மடித்து வைத்த பக்கங்கள் - சிவதாசன்

பாபு - விட்டுச் செல்லாத நினைவுகள்

மே 14, 2018

[மறைந்த நண்பர் பாபு பரதராஜாவின் நினைவாக அரங்காடல் நாடக நிகழ்வின் போது நிகழ்த்திய எனது அஞ்சலி உரை]

பாபு இல்லாத நாடக விழா சப்பரம் இல்லாத திருவிழாவைப் போல. அரை மைலுக்கு அப்பாலேயே சிறுவர்களைப் பல்லிளிக்க வைத்துவிடும் மகத்தான சப்பரம் போன்றதே பாபுவும். பத்தடி தூரத்தில் கண்டவுடனேயே நாம் பல்லிளித்து விடுவோம். பகிடி கார் பார்க் வரை கேட்கும். கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவர் நிற்க அவரைச் சுற்றி ஏழெட்டுப் பேர் நிற்பார்கள். அது அவர் நல்லாயிருந்த காலத்தில். கெட்டுப் போன காலத்தில் மூன்று நான்கு பேர் தான். ஆட்களின் எண்ணிக்கை குறைந்தாலும் இறுதி நாட்கள் வரை அவரது நக்கல் நளினம் குறையவேயில்லை. சப்பரத்தின் பிரகாசம் எஞ்சின் நிற்பாட்டும் வரை இருப்பதைப் போல. 

எனக்குத் தெரிந்தவரை / முடிந்தவரை அரங்காடல் நிகழ்வுகளுக்கு அந்தக்காலத்தில் நான் பங்களித்த்ஹிருக்கிறேன். பாபு அதற்கு முக்கிய காரணம். இன்று அரங்காடல் மேடையில் அவரது விட்டுச் செல்லாத நினைவுகளைப் பகிர்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது.

கனடிய கலை உலகம் அவருக்கு நிறையக் கடமைப்பட்டிருக்கிறது. அவர் கலையின் பங்காளி மட்டுமல்ல மிகச் சிறந்த புரவலரும் கூட. இசைத் தட்டுகள், இலக்கிய வெளீயீடுகள் மட்டுமல்ல அவருடைய குடும்பத்தையே முத்தமிழுக்குப் பங்காளிகளாக்கியவர். தன் வீட்டையே சத்திரமாக்கினார், அள்ளிப் போட்டார், அவித்துப் போட்டார். அவர் வீட்டில் உண்ணாத, உறங்காத நண்பர்கள் இல்லை. 

அவரது சுபாவம் மனிதத் தன்மையானது தான். மனத்தை முகத்தில் காட்டித் திரிந்தவர். நட்பை அனுபவிப்பவர். பொழுது போகாதபோது நண்பர்கள் அவரை அழைக்கலாம். அவரிடம் எப்போதும் செய்திகள் சுடச் சுட இருக்கும். ‘தந்தி’ பத்திரிகையில் வருவது போல அறு சுவைகளோடு அவற்றைச் சொல்லுவார். கவலையான செய்தியாக் இருப்பிநும் சிரிக்காமல் இருக்க முடியாது. 

இறுதிக் காலங்களில் சப்பரத்தின் இயந்திரம் மக்கர் செய்ய ஆரம்பித்த போது அதிக நேரங்களை அவருடன் கழிக்க நேரிட்டது. சில நாட்கள் இருட்டிலேயே அவர் வாழ்ந்தார். சுமக்க முடியாத பாரங்களை அவர் தனியாகவே சுமந்தார். அப்படியிருந்தும் அவர் சிரித்துக்கொண்டே இருந்தார். மறையும் போது அவரது நக்கலையும் நளினத்தையும் தன்ன்னுடன் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

இன்று இந்த மேடையில் ஒரு சாய்வு நாற்காலியில் இருந்து வசனம் பேசிக்கொண்டிருக்க வேண்டியவர். நாடகம் முடிந்ததும் “அப்பிடியே வீட்டை வந்திட்டுப் போங்கோ” என்று சொல்ல வேண்டியவர் – இப்போத்கு இல்லை என்பது தாங்க முடியாத ஒன்றுதான்.

சகலதையும் இழந்து செல்லும் அவருக்கே உரித்தான அந்த சிரிப்பையும், நக்கலையும், நளினத்தையும் எமது களிப்பிற்காக விட்டுச் செல்லும்படி கேட்க முடியாது தானே.

நண்பரே, உம்மோடு சேர்ந்து சிரிக்க முடியாவிட்டாலும் உமது நினைவுகளை மீட்டி நாம் இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறோம். 

வரும்வரை காத்திரு.

 

'யா' 'ஹூ' குழுமம்

மார்கழி 12, 2004

இன்று மாலை 6 மணிக்கு ஸ்காபரோ சிவிக் செண்டரில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது. அழைக்கப்பட்ட பல காவல் துறையினரும், அழைக்கப்படாத சில உளவுத்துறையினரும் பல்வேறு உந்துதல்களினால் பல தமிழர்களும் திரண்டு உருண்டு வந்திருந்தது கொஞ்சம் அச்சத்தைத் தந்தாலும் கூட்டம் முக்கியமானதென்பதனால் பொறுத்துக்கொள்ளக் கூடியதொன்று தான். 

பொப் றே சிறப்புரையாற்றினார். ஜோ பெக்கர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சார்பில் 1-84 பக்க அறிக்கையைப் பற்றிப் பேசினார்.

கூட்டம் ஆரம்பித்துத் தைவருரை முடிந்த கையோடு கரி ஆனந்தசங்கரி எழுந்து ‘தமிழர் பிரதிநிதி’ எங்கே என்று கேட்டவுடன் சல சலப்புத் தொடங்கி வாக்கு வாத வடிவத்தை எடுத்து சில விநாடிகளில் சூரன் போர் சூழலை நினைவுபடுத்தும் வகையில் சபையில் குரல்கள் மோதவாரம்பித்தன. அநாகரீகம் என்றால் அது நல்ல சொல் – அப்படி இருந்தது.

யாழ்ப்பாணத்து அழிவுகள் பற்றி பொப் றே கூறத்தொடங்கியதும் சல சலப்பு அடங்கியது. 

ஜோ பெக்கர் பேசியபோது ரொறோண்டோவில் 200,000 தமிழர்கள் இருந்தும் ஒரு நடிநிலையான தமிழரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி மீண்டும் சலசலப்பை உருவாக்கி விட்டார். அது கரி ஆனந்தசங்கரியின் கேள்விக்கான பதிலாக இருந்திருக்கலாம். தொடர்ந்தும் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களை வாய்ப்பாடம் பண்ணியது போல அடுக்கிக் கொண்டே போனார். இவரா நடுநிலை பற்றி…

ஜானகி பாலகிருஷ்ணனின் நடத்தை வினோதமாக இருந்தது. இன்னுமொரு இளம் பெண் சபையை நோக்கி ‘shut up’ சொல்லியது கொதித்துக் கொண்டிருந்த சபைக்குள் மிளகாய்த் தூளை அள்ளி எறிந்தது போலவிருந்தது. 

வண.பிதா சேவியர் புலம்பியது கோமாளித்தனமாகவிருந்தது. வண.பிதா சந்திரகாந்தன் தனது கருத்துக்களை நாகரீகமாக முன்வைத்தார். கர்யின் கருத்துக்களை அவரது ஆரோசம் திண்டு விட்டது.

கனடிய தமிழ்ச் சமூகத்துக்கு இருபது வயது ஆனால் அதன் mental age இரண்டுக்கு மேல் இருக்க முடியாது என்ற நினைவுடன் இன்றய மாலையைக் கழிக்க வேண்டியிருந்தது. 

கற்றல்

மார்கழி 17, 2013

எந்தவித ஆலாபரணமும் இல்லாமல் நேரே விடயத்துக்கு வருகிறேன். இது தன்மையில் எழுதப்படுவதன் காரணமே பிறருக்கு ‘வகுப்பு எடுப்பதற்காக’ அல்ல என்பதை வலியுறுத்தவே. தலைப்பைப் புரியாதவர்களுக்கு விடயமும் புரியாது. 

கற்றல் என்பதன் அர்த்தத்தைப் புரிய எனக்கு கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் பிடித்தது. அதுவும் தற்செயலாகவே அப் பாக்கியம் கிட்டியது. வாழ்க்கையில் பல விடயங்களைப் புரிந்து கொள்வதே இப்படிப் பல தற்செயல் நிகழ்வுகளின் காரணங்களினால் தான். 

எனது பல்கலைக் கழக பட்டமளிப்பின் போது நாசா விலிருந்து ஒரு விஞ்ஞானி பேச அழைக்கப் பட்டிருந்தார். அவர் கூறிய ஒரு விடயம் என்னுள் இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. ‘we train engineers to think, it is up to you how to apply this in your real life’.

கற்றல் என்பதற்கு ஆங்கிலத்தில் learning  என்பார்கள். சிறுவயதில் நான் ‘கற்ற’ ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதல் உயர் பாடசாலையில் கற்ற தாவரவியல், விலங்கியல் வரை எல்லாமே நினைவு வங்கியில் பதியப்பட்ட விடயங்களே. 

ஆசிரியர்கள் ‘புகட்டிய’ இந்த விடயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கு அப்போது மட்டுமல்ல பல வருடங்களுக்குப் பின்னரும் இருக்கவில்லை. மனசார ஒத்துக்கொள்கிறேன். அவற்றை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்க மட்டுமே ஆசிரியர் வற்புறுத்துவார். ஆசிரியரின் பிரம்பும் பரீட்சையில் சித்தி பெறாவிடில் கிடைக்கக்கூடிய அவமானமும் தான் தரப்பட்ட விடயங்களை உட் புகுத்தின. இளமைக் கல்வி எல்லாமே பிற்காலத்திற்கென இட்ட விதைகள். 

இப் பதிவுகளை இன்று மீட்டு அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும்போது ஏற்படும் பரவசம் அற்புதமாகத்தான் இருக்கிறது. கம்பராமாயணத்தின் செய்யுள்கள் மட்டுமே பதிவாகின. பொழிப்புரைகள் அல்ல. (இதற்குக் காரணமே யாப்பிலக்கணம் என்பதைப் புரிய வாழ்க்கையின் ஒரு பர்வத்தைக் கடக்க வேண்டியிருந்தது.) 

இந்த ‘நினைவில் பதியும்’ நடைமுறையையே நான்  கற்றல் (learning) என்று நம்புவது. கற்றவற்றைப் பிரயோகப்படுத்தும் போதுதான் அவற்றின் வழியும் மகிழ்வும் புரியவருகிறது.

நவீன கணனிச் செயன்முறைகளைத் தெரிந்துகொண்ட பின்னர் கற்றல் பற்றிய புரிதல் இலகுவாக இருக்கிறது. உயிரிகளின் படைப்பு விசித்திரமாக இருக்கிறது. ஒன்றோடு மற்றொன்றை ஒப்பிடும்போது அறிவுலகம் விரிகிறது. கணனியின் உருவாக்கத்தின் பின்னணியில் மனித உடலியக்கம் மாதிரியாக (model)  இருந்திருப்பினும் மனிதப் புதிர்களுக்கு கணனி தான் விடைகளைத் தருகிறது.

விடயத்தைப் பிரயோகப் படுத்துவதற்கு அவ்விடயத்தின் பொருளைத் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பது பிரயோகத்தின் வெற்றி தோல்விகள் அறிவுறுத்தியிருக்கின்றன. ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுதல்’ பற்றி மாணிக்க வாசகர் சுவாமி சொன்னது இப்போதுதான் புரிகிறது.

சமூகம் எனக்குள் பல வடிகளை (filters) யும் சேர்த்தே கற்றுத் தந்திருக்கிறது. பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயர்களில் வரையறுக்கப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட வாழ்வைப் பின்பற்றும்படியான கட்டளைகள் அவை. ஒழுக்கமான வாழ்வுக்கு அவை அத்தியாவசியாமானவை என்று சொல்லப்படுகிறது. சந்தி விளக்குகள் போல. கணனியின் கட்டளைக் கோப்புகளும் இப்படியான வடிகளை உட்கொண்டுள்ளன.

நாசா விஞ்ஞானி சொன்ன ‘training to think’ என்பது ஒவ்வொரு படைப்பையும் சுய விசாரணையின் மூலம் ‘அறிந்து’ கொள்வதற்குத் தரப்படும் பயிற்சியே. அதற்கான முதற் செயற்பாடு மேற் சொன்ன ‘வடிகளை’ அகற்றி விடுவது. பொறியியலாளனும் ஒரு படைப்பாளியே. எந்தவிதமான முற்சாய்வுகளும் இல்லாது உலகத்தைப் பார்ப்பது ஒரு படைப்பாளிக்கு அவசியம் என்பதையே அவர் சுட்டிக் காட்டினார். 

திறந்த மனதோடு உலகைப் பார்க்கும்போது படைப்புகள் அசாதாரண பரிமாணங்களுடன் தோற்றுகின்றன. ஒருவகையில் திருப்தி தரக்கூடிய வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு இக் ‘கற்றல்’ எனக்கு உதவி வருகிறது. ஆனாலும் அப்பப்போ பல ‘வடிகள்’ குழப்பங்களை ஏற்படுத்துவதுண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

*****
சமீபத்தில் முக நூலில் நண்பர் ஒருவர் நடராஜர் சிலையின் கலைத்துவத்துக்காக அதைத் தான் முற்கூடத்தில் (living room?)  வைப்பேனே தவிர நூற்கூடத்தில் (labrary) அல்ல என்று எழுதியிருந்தார். அவரது இக் கருத்து பற்றிய குறிப்பை இங்கு எழுதுவதற்கு அடியெடுத்துத் தந்ததற்கு நண்பருக்கு நன்றிகள்.
நடராஜர் சிலையில் (சிவபெருமான் சிலை அல்ல) உள்ள அம்சங்கள் சுட்டும் கருத்துக்களை சைவம் துறை போகக் கற்றுணர்ந்த ஒருவர் அக்கு வேறு ஆணி வேறாகச் சொல்லலாம். ஆனால் அந்த அம்சங்களைச் சிலையில் பிரதிபலிக்கச் செய்த சிற்பியின் படைப்புத் திறமையை ஒரு சமயவாதி முன்வைப்பது சிரமமானது, தேவையுமற்றது. பக்தனுக்கு சிலையின் பிரசன்னமே போதும். கலைப் பார்வையுள்ளவனுக்கு அச் சிலையிலுள்ள அம்சங்களை சிற்பி வடித்ததன் பின்னாலுள்ள காரணங்களைத் துருவியறியும் போக்கு இருக்கும். அப்படிப் பார்க்கும்போது ஒரு படைப்பாளிக்கு சிலை மூலஸ்தானத்தில் இருப்பதைவிட முற்கூடத்தில்  இருப்பதே சிறந்தது. நண்பரைத் தெரிந்தவர்களுக்கு அவரது கூற்று ஆச்சரியத்தைத் தராது.  
*******
நடராஜர் சிலையிலுள்ள அம்சங்கள் பற்றி நானும் மண்டையைக் குடைவதுண்டு. அவற்றில் இரண்டு பற்றி சமீபத்தில் அறிய முடிந்தது. சரியோ பிழையோ அது ஒருவரது கருத்து. 
நடராஜரின் தலையில் கிரீடத்துக்குக் குறுக்காக கயிற்றுத் துண்டுகள் போல இரண்டு பக்கங்களிலும் தோற்றமளிக்கும். இவை அவரது சடாமுடி (திரிசடை) என்று ஒருவர் சொன்னார். அப்படியானால் அம்முடி கீழ் நோக்கித் தூங்கிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பக்கங்களுக்குப் பறந்துகொண்டிருக்க முடியாதே. இயற்கை விதிகள் அப்படித்தானே சொல்கிறது?
அப் பறக்கும் திரிசடையின் மர்மத்தை சமீப வாசிப்பொன்று இப்படித் துலக்குகிறது. நடராஜர் சிலை தாண்டவத்தின் ஒரு படிமம். அவரது நித்திய இயக்கத்தைக் (perpertual motion) குறியிட்டுக் காட்டவே அப் பறக்கும் சடாமுடியையும் – அத்தோடு பறக்கும் இடுப்புச் சால்வையையும் – சிற்பி வடிவமைத்திருக்கிறார் என்கிறது அந்தக் குறிப்பு. கார்ட்டூன் படைப்பாளிகள் உருளும் பந்தைக் குறிப்பதற்கு இரண்டு வளைவான கோடுகளைப் போடுவது போல. பொருத்தமான வேறு காரணங்கள் கிடைக்கும்வரை நடராஜர் சிலையின் இக் கலையம்சத்தை நான் மிகவும் ரசிப்பதை ஒப்புக் கொள்கிறேன். 
******

எதிர்பாராத முகம்

மார்கழி 01, 2010

சென்ற வாரம் (நவம்பர் 28, 2010) ஞாயிற்றுக் கிழமை கவிஞர் செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை’ புத்தக வெளியீடு ஸ்காபரோ மத்திய சன சமூக நிலையத்தில் நடைபெற்றது.

சுமார் நூறு பேர் மட்டில் கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு என். கே. மகாலிங்கம் தலைமை வகித்தார். 36 வது காலம் இதழும் வெளியிடப் பட்டது.

காலம் சஞ்சிகையை வெளியிட்டுப் பேசுவது என் பணி. பரபரப்போ சலசலப்போ இல்லாது அது முடிந்தது.

‘வானத்தைப் பிளந்த கதை’ பற்றி மாமூலன். வெங்கட்ரமணன், திரு வேங்கட சலபதி அவர்கள் பேசினார்கள். ஈழப் போராட்டம் பற்றித் தமிழ்நாட்டுத் தமிழருக்கு இருந்த அறிவும் தெளிவும் அக்கறையும் பிரமிக்க வைத்தன.

இறுதிப் போராட்டத்தின்போது இந்தியாவின் பங்கு என்ன என்பது பற்றி ஈழத் தமிழர்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தவரைக் காப்பாற்றாது கைவிட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வோடு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. படித்தவர்களும் பாமரரும் இவ்விடயத்தில் ஒத்த கருத்தோடு இருக்கிறார்கள். துக்ளக் சோ கூட இப்போது புலிகளை விமர்சித்து எழுதுவது குறைவு. ஆனாலும் ரஜீவ் காந்தி விடயத்தில் புலிகள் பிழை விட்டு விட்டார்கள் என்பதையும் தமிழ்நாட்டுக்காரர் குறிப்பிடத் தவறுவதில்லை.

ஆனாலும் ஈழத்தவர் இவ்விடயத்தில் மௌனம் காப்பது சரியானதாகப் படவில்லை. அமைதிப் படை செய்த அட்டூழியங்களின் வலிகள் இன்னும் தீராதவைதான். ராஜீவ் காந்தி கொலையைத் தாண்டி எமக்காக இந்தியா செயற்பட வேண்டுமென்று கட்டாயமில்லை. ஆனால் அமைதிப்படை தந்த வலிகளைத்தாண்டிச் செயற்பட வேண்டிய தேவை எமக்கு இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளத் தவறியிருக்கிறோம்.

கூட்டத்தில் நிரலில் இல்லாத ஒரு பேச்சாளரைச் சபையிலிருந்து வலிந்து அழைத்தார்கள். அவரைக் கண்டிருந்தாலும் முன் பின் அவர் பேசிக் கேட்டதில்லை. அவரைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயம் முற்சாய்வு உடையதாயிருந்தது உண்மை.
ஆனால் அன்றைய தினத்தின் முற்றிலும் எதிர்பாராததும் பிடித்ததுமான பேச்சு அவருடையதே.

தான் சார்ந்திருந்த இயக்கம் மட்டுமல்ல ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை இயக்கங்களினதும் ஜனநாயகமற்ற தன்மை, மக்களிடமோ இதர போராளிகளிடமோ தார்மீகம் காட்டப்படாத தன்மை ஆகியவற்றை உணர்வுபூர்வமாக விமர்சித்தார். தான் சார்ந்த இயக்கத்தில் Naம்பிkகை இழந்து புலிகளும் விரட்ட தானும் செழியனும் தப்பியோடி கனடாவுக்கு வந்தபடியால் உயிர் பிழைத்திருப்பதாகவும் அதற்காக புலிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சொன்னார்.
அவரையும் செழியனையும்போல் இன்னும் நிறையப்பேர் பேசவும் எழுதவும் வேண்டும். புலிகளின் தரப்பிலிருந்து இன்னும் ஒருவரும் முன்வரவில்லை.
அவரது பெயர் டேவிட்சன் என்றார்கள்.
அவர் பேசியதை நம்பும்படி மனம் சொல்கிறது.