19வது திருத்த ஒழிப்பு | அமெரிக்கப் படை வரவு | கூட்டமைப்பின் திரிசங்கு நிலை – ஒரு பார்வை

சிவதாசன்

சிறீசேனவின் குத்துக்கரணம் தொடர்கிறது, 19 வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டுமாம்!

தேர்தல் அண்மிக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் கோமாளி உடைகளை மீண்டும் ஒருதடவை அணியப்போகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி முன்னுதாரணமாகத் தானே உடைகளை மாற்றிக்கொண்டு விட்டார்.

தமிழர் தரப்பு மிகத் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் நம்பிக்கொண்டிருந்த, தமிழர்களுக்கு விடிவுகாலம் வரப்போகின்றது என்று திரு. சம்பந்தன் அவர்களால் மீண்டும் மீண்டும் உறுதியாக அறிக்கைகளை விடுமளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்த, அந்த 19ம் சட்டத் திருத்தத்தை ஒழித்துவிட வேண்டுமென நமது நல்லாட்சி ஜனாதிபதி மேன்மை தங்கிய மைத்திரிபால சிறீசேன தென்னிலங்கை மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அத் திருத்தத்தைக் கொண்டுவருவதில் மிக அக்கறையோடு செயற்பட்டவரும் அவர்தான். இத் திருத்தம் நாட்டை நிலையற்ற தன்மைக்கு இழுத்துச் செல்கிறது எனவே அதை நீக்கிவிட வேண்டும் என அவர் இப்போது காரணம் சொல்கிறார்.

போருக்குப் பின்னான சூழலில் நாட்டில் நடைபெற்ற மிக முக்கியமான அரசியல் மாற்றங்களில் ஒன்றாக 19வது சட்டத் திருத்தம் பார்க்கப்பட்டது. மைத்திரி – ரணில் கூட்டைப் பெரும் அரசியல் சதியொன்றின் மூலம் உருவாக்கி ‘நல்லாட்சி’ ஒன்றை உருவாக்குவதில் மேற்கு நாடுகள், இந்தியா, சந்திரிகா பண்டாரநாயக்கா, சில தென்னிலங்கை முற்போக்கு சக்திகள், மஹிந்த தரப்புக்கு எதிரான அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப் பலரது கடும் உழைப்பும் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைத்தல், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாமை போன்ற விடயங்கள் மஹிந்த அணியைக் குறிவைத்து வரையப்பட்டதெனினும் தன்னுடைய அதிகாரக்குறைப்பைப் பொருட்படுத்தாது எதிரியின் மீள்வருகையைத் தடுப்பதற்காகவே 19 வது திருத்தத்தைச் சிறீசேனா ஆதரித்தாரா என்பதற்குத் தற்போதைய அவரது நிலைப்பாடு விடை தருகிறது.

19வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பு சிங்களத் தரப்புக்குப் பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்தது. இவற்றைப் பாவித்து கூட்டமைப்பின் எதிரிகள் பழிவாங்கல் அரசியலைச் செய்தார்கள். ரணிலை நம்பக்கூடாது, நம்பமுடியாது என்றெல்லாம் மேடைகள் போட்டுக் கூக்குரலிட்டார்கள். மாற்றுத் திட்டங்கள் எதையுமே முன்வைக்காமால் வெறும் (அவ)நம்பிக்கை அரசியலையே சுழற்றினார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாது கூட்டமைப்பு அரசியல் தீர்வில் வைத்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் அவமானங்களையும் சகித்துக்கொண்டு தொடர்ந்தார்கள். இப்போது சிறீசேனாவின் குத்துக்கரணம் கூட்டமைப்பிற்கு இன்னுமொரு தடவை அவமானத்தையே வாங்கித் தந்திருக்கிறது.

19வது சட்டத் திருத்தத்தை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இத் திருத்தத்தை ஒழிப்பதெற்கென்றே போராடிவரும் மகிந்த அணியுடன் சிறீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் இதர சிங்களத் தீவிரவாத பா.உ. க்கள், முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து இப் பெரும்பான்மையை நிறைவேற்றலாம்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ரணில் – சிறீசேனா கூட்டரசாங்கத்துக்குத் தொடர்ந்து முண்டு கொடுக்க வேண்டுமா என்ற கேள்விகள் எழலாம். இவ்வரசாங்கத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக பாராளுமன்றம், நீதி பரிபாலனம், நிறைவேற்று ஜனாதிபதி என்ற மூன்று அம்சங்களையும் மீளுருவாக்கி அவற்றின் அதிகாரங்களை உறுதி செய்தமையே. இந்தத் தனியொரு சாதனையால் தான் நாட்டை ஜனநாயகத்தால் பாதுகாப்பாக வைத்திருக்க முடிகிறது. ரணில் விக்கிரமசிங்கவை நம்பமுடியாது என்று எவ்வளவு ஆர்ப்பரித்தாலும் நாளுக்கு நாள் சித்த சுவாதீனமற்றவர் போல் நடந்துகொள்ளும் ஜனாதிபதியால் நாடு சீர்கெட்டுப் போகாமல் காப்பாற்றுவது ரணில் தான். இதனால் தான் கூட்டமைப்பும் பேயோடு தூங்கி வருகிறது.

ரணில் அரசாங்கத்தை வீழ்த்துவது கூட்டமைப்பிற்குப் பெரிய விடயமல்ல. ஆனால் நாட்டில் வரப்போகின்ற புதிய ஆட்சி 19வது திருத்தத்தை மீளப்பெறுமானால் அதனால் தமிழர் மட்டுமல்ல நாடு முழுவதுமே பாதிக்கப்படும். இதையே தான் ஜே.வி.பி. போன்ற கட்சிகளும் அஞ்சுகின்றன. மீண்டுமொரு தடவை மஹிந்த அரசின் கீழ் நாடு அல்லோலகல்லோலமாகிவிடும். தமிழர் இன்னுமொரு தடவை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள்.

அமெரிக்கா சிறீலங்காவுடன் கைச்சாத்திடப்போகும் ஒப்பந்தம் அங்கு அமெரிக்கப் படைகளை நிரந்தரமாகத் தங்க வைக்குமா என்ற அச்சம் தலி தூக்கியுள்ள இந்த வேளை ஏன் இந்த அவசர நகர்வு என்பதும் தென்னிலங்கையில் பரபரப்பாகப் பேசப்படும் விடயம். பிரபலமான சிந்தனாவாதிகளும், தேசீயவாதிகளும், முற்போக்குவாதிகளும் இதில் காட்டும் எதிர்ப்பு சிங்களப் பேரினவாதிகளுக்கும் அவர்களைத் தன்னகப்படுத்த முயலும் மஹிந்த அணிக்கும் ஊக்கத்தை அளிக்கும். தேர்தல் பிரசாரத்துக்காக அவர்களுக்கான அரிய சந்தர்ப்பம் வெள்ளித் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரணில் மீது பழியைப் போட்டுவிட்டு இச் சந்தர்ப்பத்தைக் கையகப்படுத்திக் கொள்ள சிறீசேன தரப்போ அல்லது மஹிந்த தரப்போ அல்லது இரண்டும் அணி சேர்ந்த தரப்போ முயற்சிக்கலாம். எனவே தேர்தலை எவ்வளவு காலத்துக்கு இழுத்தடிக்க முடியுமோ அதைச் செய்ய ரணில் அரசு முயலவே செய்யும். அதற்கு கூட்டமைப்புத் துணை போவதே சாணக்கியம்.

அமெரிக்கப் படைகளின் பிரசன்னம் -நீண்ட காலத்துக்கு – நாட்டின் தேசிய நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கலாம் என்பது உண்மையாயினும் இவ் வரவின் பின்னணியில் உடனடித் தேவைகளே இருப்பதாக எண்ணலாம். 1. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மேற்குக்குச் சாதகமான இன்னுமொரு அரசியல் சதியொன்றை மேற்கொள்ள முடியாதுள்ளது. 2. ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் சீனாவின் விரிவாக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. 3. இந்தியா ஒரு போதுமே நேரடியாகத் தலையிட முடியாத நிலையில் அமெரிக்காவை இந்தியா முன்தள்ள வேண்டிய சூழல்.

தற்போதுள்ள வரைவின்படி அமெரிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமானால் அமெரிக்கப் படைகளுக்கு எல்லைகளற்றதும், அனுமதி இல்லாது எங்கும் எப்போதும் நகர்வினை மேற்கொள்வதற்குமானதுமான சலுகைகள் வழங்கப்படும். பலர் இதை தமிழருக்குச் சாதகமான விடயமாகப் பார்க்கிறார்கள்.

கூட்டமைப்பு எதிர்பார்த்த அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பம் மீண்டுமொரு தடவை முறியடிக்கப்படுமானால் “நீங்கள் சொன்னபடி முயற்சித்தோம். மீண்டுமொரு தடவை சிங்களப் பேரினவாதம் தமிழரை ஏமாற்றிவிட்டது. தமிழர் போராட்டத்தைப் பலவீனப்படுத்திய உங்களிடமே தீர்வுக்கான பொறுப்பையும் விட்டு விடுகிறோம்” என்று மேற்குலகிடம் நமது எதிர்காலத்தைத் தாரைவார்த்துவிட்டு அம்போ என்று கூட்டமைப்பு இளைப்பாறுவத்ற்கு இது ஒரு சந்தர்ப்பமாகவும் அமைய இடமுண்டு. மோடி-கூட்டமைப்பு சந்திப்புக் கூட இப்படியானதொரு அச்சில் தான் நடைபெற்றிருக்க வாய்ப்புண்டு.

நிகழ்ச்சி நிரலில் இடம்பெற முடிகிறதே தவிர அதைத் தயாரிக்கும் தகமை தமிழருக்கு ஒருபோதுமே இருந்ததில்லை.

அறத்தினால் போடப்பட்ட கைவிலங்குகளை அரசியலால் உடைக்குமா? தற்போதுள்ள தமிழர் தலைமையில் அது நடக்கப் போவதில்லை.

 

 

 

Please follow and like us:
error0

One thought on “19வது திருத்த ஒழிப்பு | அமெரிக்கப் படை வரவு | கூட்டமைப்பின் திரிசங்கு நிலை – ஒரு பார்வை

 • June 23, 2019 at 7:03 pm
  Permalink

  அறத்தினால் போடப்பட்ட கைவிலங்குகளை அரசியலால் உடைக்குமா? தற்போதுள்ள தமிழர் தலைமையில் அது நடக்கப் போவதில்லை.
  அறத்தினால் போட்ட கைவிலங்குகளை அரசியலால் உடைக்க முடியுமா?
  அது என்ன அறத்தினால் போட்ட கைவிலங்கு?
  அறத்தினால் போட்ட கைவிலங்கா அல்லது மறத்தினால் போட்ட கைவிலங்கா?
  “தற்போதுள்ள தமிழர் தலைமையில் அது நடக்கப் போவதில்லை” என்றால் பின் எப்போதுள்ள தலைமையில் அது நடக்கும்?
  அதைச் சொன்னால் சற்று ஆறுதலையாக இருக்கும்?
  19 ஆவது திருத்த சட்டத்தையும் 18 ஆவது திருத்த சட்டத்தையும் கைவிட வேண்டும் என்பது சனாதிபதி சிறிசேனாவின் கனவு. அரசியலில் சேடம் இழுத்துக் கொண்டிருக்கும் சிறிசேனா தனது அந்திம காலத்தில
  காரண காரியம் இல்லாமல் உளறுகிறார். அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன.
  19 ஆவது சடட திருத்தத்தை இராசபக்சா குடும்பம் ஆட்சிக்கு வந்தாலும் அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை.
  அதனை முஸ்லிம் நா.உறுப்பினர்கள் ஆதரிக்கப் போவதில்லை.
  மேலும் அதனை பன்னாட்டு சமூகம் எளிதில் விட்டுக் கொடுக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)