சிறீலங்கா கிரிக்கட்: சண்டிமால், ஹதுறுசிங்க நீக்கம்?
சமீபத்தில் அடைந்த தொடர்ச்சியான பல தோல்விகளையடுத்து சிறீலங்கா கிரிக்கட் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்விருக்கின்றன. அடுத்த வாரம் ஆரம்பிக்கவிருக்கும் தென்னாபிரிக்க சுற்றின் முன்னதாக அதன் காப்டன் டினேஷ் சண்டிமால் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சண்டிகா ஹதுறுசிங்க ஆகியோருள்ளிட்ட பலர் மாற்றம் செய்யப்படவுள்ளனர் என சொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்ற வருடம் ஜனவரி மாதம் சிறிலங்கா அணியின் தலைமைப் பயிற்சியாளராக 90 மில்லியன் ரூபாய்கள் வருட வருமானத்தில் மூன்று வருட ஒப்பந்தத்த்ஹில் சண்டிகா ஹதுருசிங்க பணியில் சேர்க்கப்பட்டார். ஒப்பந்தம் முடிவதற்கு முன்னதாகவே அவரைப் பணி நீக்கம் செய்வது தொடர்பாக சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சர்வதேச கிரிக்கட் ஆட்டங்களில் தரம் குறைவாக இருந்தமையால் தோல்விகளைச் சந்திக்க வேண்டியேற்பட்டதென்பதைச் சுட்டிக்காட்டி கப்டன் உட்பட அணியின் பல முக்கிய ஆட்டக்காரர்களைச் சில வருடங்களுக்கு சர்வதேச ஆட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்திருப்பதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018 அணியிலிருந்து டிமுத் கருணாரட்ன மட்டுமே 2019 அணிக்குத் தெரியப்பட்டிருக்கிறார். அயர்லாந்தில் விளையாடிய ‘A’ அணியைச் சேர்ந்த பலர் இவ்வருட சர்வதேச அணியில் சேர்க்கப்படவுள்ளார்கள்.
அங்கத்தவர்களிடையேயான பிரிவுகள், பிணக்குகள், அரசியல் தலையீடு காரணமாக அணியில் பல குறுங் குழுக்கள் உருவாகியிருப்பதாகவும் அதே வேளை ஆட்டங்களை வைத்து சூதாட்டம் (match-fixing ) நடைபெறுவது பற்றி சர்வதேச கிரிக்கட் கழகத்தின் ஊழலொழிப்பு பிரிவு விசாரணைகளை நடத்தியதென்றும் செய்திகள் கசிந்துள்ளன.
அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ சென்ற வாரம் அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்து விளயாட்டு அணியினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டாரெனவும் 2019 ICC உலகக்கிண்ணத்தை வெல்வது பற்றி யோசிக்கவே தேவையில்லை எனக்கூறியதாகவும் பேசப்படுகிறது.