119 உறுப்பினர்களுடன் தீர்மானம் நிறைவேறியது: நவம்பர் 07 ல் பாராளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி இணக்கம்!

மஹிந்த – மைத்திரி கூட்டணிக்குப் பேரதிர்ச்சி தரும் வகையில் இன்று இதர கட்சிகளின் கூட்டணியின் 119 உறுப்பினர்கள் கூடி பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு  கோரும் தீர்மானமொன்றை நிறைவேற்றினர்.  அத்தோடு, மஹிந்த ராஜபக்சவின் நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் அத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஐ.தே.கூட்டணி, த.தே.கூ. மற்றும் ஜே.வி.பி. கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இத் தீர்மானத்தை நிறைவேற்றினர். ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசனாயக்க உள்ளடங்க அக்கட்சியின் நான்கு அங்கத்தவர்கள் மற்றும் த.தே.கூ. ச் சேர்ந்த மூன்று அங்கத்தவர்கள் இத் தீர்மானத்தின் போது சமூகமளித்திருக்கவில்லை. இருப்பினும் சமூகமளிக்காத உறுப்பினர்கள் அத்தனை பேரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்போமென வாக்குறுதி அளித்திருந்தார்கள். 

பிரதமர் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கியமையும், இன்னுமொரு பிரதமைரைப் பதவியில் அமர்த்தியமையும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்றும் அதே காரணத்துக்காக ஜனாதிபதியால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டமையைச் சபாநாயகர் புறந்தள்ளி விட்டு உனடனடியாகப் பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டுமென்று சபாநாயகரைக் கேட்டுக் கொள்வதாகவும் த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதி திரு எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இக் கோரிக்கைக்கு இணங்கி நவம்பர் 7 ம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரியாவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவும் உறுதியளித்துள்ளனர். “இது குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்று அறிவிக்காத பட்சத்தில் தான் குறிப்பிட்ட திகதியில் பாராளுமன்றத்தைக் கூட்டுவேன்” எனச் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Source: Colombo Telegraph

 

Please follow and like us:
0

Enjoy this blog? Please spread the word :)