வெனிசுவேலா – அடுத்த ஈராக்?

இலங்கையைப் பின்பற்றி வெனிசுவேலாவும் இரட்டைத் தலைவர்களையும் இரட்டை அரசாங்கங்களையும் கொண்ட நாடாக மாறும் போலிருக்கிறது. அதன் அதிபர் நிக்கொலாஸ் மடுறோவுக்கு சட்டப்படி நாட்டை ஆளும் ஆணை இல்லையெனக்கூறி எதிர்க்கட்சித் தலைவர் தன்னைத் தானே அதிபராக நியமித்துவிட்டு ஓடி ஒளிந்துவிட்டார். அவருக்கு ஆதரவாக உலக சண்டியர்களில் சிலர் ஆலவட்டம் பிடித்துக்கொண்டு ஊர்வலம் வருகின்றனர். அட நானும் சண்டியன் தாண்டா என்ற வகையில் அதில் கனடாவும் தினவெடுக்கிறது. ஈராக் மீது படையெடுக்க முன்னர் பிரித்தானியாவின் ரோணி பிளெயர் இந்த வேடத்தை எடுத்திருந்தார். நிஜமாகவே சண்டியனான கனடாவின் முன்னாள் பிரதமர் கிரத்தியேன் நடு விரலைக் காட்டாத குறையாக அமெரிக்காவின் வேண்டுகோளை உதாசீனம் செய்திருந்தார். அவர் கைப்பிள்ளை ட்ரூடோ வடிவேலு ரகத்தில் சண்டித்தனம் காட்டுகிறார்.

மடுரோ 2013, 2018 தேர்தல்களில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக ஆகியவர். இலங்கையைப் போலவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட அந்நாட்டின் ஜனாதிபதி படைகளின் கட்டளைத் தளபதியாகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்டவராகவும், சட்டங்களை இயக்கும் தேசீய அவையை நியமிக்கும் அதிகாரம் கொண்டவராகவும் இருப்பார்.

2018 ம் ஆண்டில் மடுரோ தெரிவுசெய்யப்பட்டபோது தேர்தல் நடத்தப்பட்ட விதம் முறையற்றது என்ற குற்றச்சாட்டில் 2019 இல் தேசீய அவை 2018 தேர்தல் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை எனக்கூறி  ஹுவான் குவைடோ என்பவரை தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்தது. இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை ஆனால் இவரே தேசீய அவையின் தலைவர். ஒரு இளைய தலமுறையினர். பொறியியலாளர். மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாதவர். தேசிய அவை அறிவித்ததன் பிரகாரம் தானே இடைக்கால ஜனாதிபதி எனப் பிரகடனம் செய்துவிட்டு மாயமாகிவிட்டார்.இதன் தொடர்ச்சிதான் இன்றய பிரச்சினை.

மடுரோ மறைந்த ஜனாதிபதி ஷாவேசின் வழிவந்தவர். ஒரு இடதுசாரிக்காரர். அதனால் பல்லாண்டு காலமாக அமெரிக்காவின் எதிரியாக இருப்பவர். பெற்றோல் மூல வளத்தில் வெனிசுவேலா முன்னணியில் இருக்கும் நாடு. சாவேஸ் ஆட்சிக்கு வரும்வரை அதன் வளங்களை, இதர தென்னமெரிக்க நாடுகளைப் போலவே, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சுரண்டி வாழ்ந்துகொண்டிருந்தன. சாவேஸ் அதை மாற்றிவிட்டதிலிருந்து அதன் மீது திட்டமிட்ட சதியை அமெரிக்காவும் அதன் நண்பர்களும் ஆரம்பித்து விட்டனர். அதனால் சாவேசும் அவர் பின்னால் மடுரோவும் ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் பக்கம் சாயத் தொடங்கியிருந்தன. நாடும் ஒரு வகையில் சுபீட்சத்தை எட்டிக்கொண்டிருந்தது. மடுரோ ஜனாதிபதியாக வந்ததிலிருந்து , ஈராக்கைப் போலவே, அந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலும், மக்களைப் பட்டினியால் வதைக்கும் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா இறங்கியிருந்தது. இதனால் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்று அறியப்படுகிறது.

ஹுவான் குவைடோ தன்னை இடைக்கால ஜனாதிபதி என அறிவித்த உடனேயே அவரைத் தாம் அங்கீகரிக்கிறோம் என அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவுடன் இருக்கும் முறுகலைச் சமாளிக்கவோ என்னவோ கனடாவும் நானும் இருக்கிறேன் எனப் பாய்ந்து வந்து தானும் அங்கீகரிக்கிறேன் எனப் பிரகடனம் செய்தது (பொதுவாக நடுநிலை வகிக்கும் கனடா இப்படியாகச் செய்வது இதுதான் முதல் தடவை எனவும் நம்பப்படுகிறது). கனடாவைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ் உள்ளீடான சில ஐரோப்பிய நாடுகள் ‘இன்னும் 10 நாட்களில் தேர்தல் நடத்தாவிட்டால் நாம் ஹுவான் குவைடோவை அங்கீகரிப்போம்’ என எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

மடூரோவின் தேர்தல் முறைகேடாக நடந்திருக்கலாம். முறைகேடுகளின் நாயகனே அமெரிக்கா தானே. அப்படிப் பார்க்கின் 2000 ஆண்டு அமெரிக்க தேர்தலில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்க்குப் பதிலாக அல் கோர் வென்றிருக்க வேண்டியவர்; அவர் பேசாமல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஒதுங்கி விட்டார். நவம்பர் 2017 இல் நடந்த தேர்தலில் ஹொண்டூரஸ் நாட்டின் ஜனாதிபதி ஹுவான் ஓர்லாண்டோ ஹேர்னாண்டேஸ் மீளவும் தெரிவு செய்யப்பட்டபோது அத் தேர்தல் முறைகேடானது என மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அரச படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 16 பேர் உயிரிழந்தார்கள். அதைத் தொடர்ந்து 7000த்துக்கும் அதிகமான ஹொண்டூரன் மக்கள் அமெரிக்க எல்லையை நோக்கிக் கால்நடையாக வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் ஹேர்னாண்டேசின் ஆட்சியை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

இத்தனைக்கும் அமெரிக்க நாடுகளின் ஒன்றியமாகத் தொழிற்படும் ஓஆஸ் அமெரிக்க உடுக்கடிக்கு ஆடும் ஒரு அமைப்பாக மாறிவிட்டது. அதன் செயலாளர் நாயகம் லூயி அல்மாக்றோ ஒரு அமெரிக்க அடிவருடி. ஊழல் குற்றச்சாட்டுகள் பல இவர் மேலிருக்கிறது. மடூரோ பதவி விலகாவிட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அல்மாக்றோ எச்சரித்திருக்கிறார். லீமா குழுவைச் சேர்ந்த பல நாடுகளும் மடூரோ பதவி விலக வேண்டுமெனக் கேட்டுள்ளன. ஆனால் மெக்சிக்கோ நாட்டின் புதிய தலைவர் ஆண்ட்றே மனுவேல் லோப்பேஸ் ஓப்றடோர் இதற்கு உடன்படாமல் நடுநிலை வகிக்கிறார்.

இதுவரை வெனிசுவேலா இராணுவம் மடூரோவின்  பக்கமே நிற்கிறது. இறுதிச் செய்தியின்படி, அமெரிக்காவிலிருக்கும் வெனிசுவேலன் இராணுவ இணைப்பதிகாரி கட்சி தாவிவிட்டார் என அறியப்படுகிறது. சிலியின் அயண்டேயைக் கொன்றது போல் எதுவும் நடக்கலாம். எல்லோரது உள்நாட்டுப் பிரச்சினைகளையும் சமாளிக்க எங்கோ ஒரு பலமற்ற வெளிநாடு பலியாக்கப்படுவது வழக்கம். இந்தத் தடவை வெனிசுவேலா. பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் குடும்பங்களைக் கொன்றழித்த ஒபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசைக் கொடுத்து மகிழ்ந்த உலகம் மனித உரிமைகளின் காவலன் ட்ரூடோவிற்கும் பரிசைப் பரிந்துரைக்கலாம்.

மடூரோ தோற்றத்தில் சதாம் ஹுசெயினைப் போலவே இருக்கிறார். Trophy hunting இற்குப் பலர் காத்திருக்கிறார்கள்.

 

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)