மடித்து வைத்த பக்கங்கள் – 2

மண்ணின் அழைப்பு.

சென்ற வாரம் இங்கு (டொரோண்டோவில்) ஒரு தமிழரைச் சந்தித்தேன். இன்னும் சில வருடங்களில் ஒய்வெடுக்கவிருப்பதாகவும் பின்னர் இலங்கை சென்று தனது ஊரில் ஒரு கொட்டிலைப் போட்டுக் கொண்டு சந்தோசமாக இருக்கப் போவதாகவும் சொன்னார். அவருக்கு வயது வந்த பிள்ளைகளும் இங்கு இருக்கிறார்கள்.
“அப்போ பிள்ளைகள்?” என்றேன்.
“நல்ல ஐடியா அப்பா. நீங்க அங்க ஒரு வீட்டைக் கட்டுங்கோ. அங்க நாங்கள் விடுமுறைக்கு வந்து தங்கிப் போகலாம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கும் நான் அங்கு போவது விருப்பமாயிருக்கு”
சிரித்தபடியே சொன்னார். அரைச் சிரிப்பு அவரது துயரத்தை அளந்து காட்டியது.
மண்ணைப் பிரிவதன் துயரம் எல்லா மனிதருக்குமே பொதுவானதுதான். ஆனால் இவருக்கு இரட்டைப் பிரிவு. இந்த மண்ணையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிவது இரண்டாவது பிரிவு.
முதலாவது தடவை பிறந்த மண்ணைப் பிரியும்போது தூர தேசத்துக் கனவுகள் விட்டுப் போகும் மண் பற்றிய , உறவுகள், நண்பர்கள் பற்றிய நினைவுகளைத் திரையிட்டிருந்திருக்கலாம். இந்த இரண்டாவது பிரிவு கனவுகளை முன்வைத்துச் செல்லவில்லை. துயரங்களை மட்டுமே சுமந்து கொண்டு போகிறது. அந்த மண்ணின் அழைப்பு அல்ல இந்த மண்ணின் மீதான வெறுப்பே அவரது முடிவுக்குக் காரணம்.
அவரது குடும்பத்தை எனக்குப் பலகாலமாகத் தெரியும். புலம் பெயர்ந்த நாடுகளில் வெற்றிகரமாகத் தம்மை வேரூன்றச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் அவரதுவும் ஒன்று. அதே போல புலம் பெயர்ந்த சமூகங்களில் காணப்படும் சமூகப் பிரச்சினைகளால் குத்திக் குதறப்பட்டுச் சீரழிந்த பல நூற்றுக் கணக்கான (?) குடும்பங்களில் அவரதுவும் ஒன்று.
இப்போது அவர் குடும்பத்தைப் பிரிந்து தனியே வாழ்கிறார். பிள்ளைகள் அம்மாவுடன். ஒரு அன்னியர் வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தனிக் குடித்தனம் நடத்துகிறார்.
துயர ரேகைகள் அவர் முகம் முழுவதிலும் படர்ந்து கிடக்கின்றன. அதை மறைப்பதற்காகச் சிரிக்க முயல்கிறார்.
பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது அவரது வீட்டிற்குப் பல தடவைகள் போயிருக்கிறேன். இப்போ அவர்கள் பெரியவர்களாகிவிட்டார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்த குடும்பம். பிரிவிற்கு காரணம் என்னவென்று தெரியாது.
இவரைப் போன்று பல தந்தையர்கள் தனிக் குடித்தனம் நடத்துகிறார்கள். இரண்டு வெவ்வேறு வாழ்க்கைமுறைகளிடையே ஏற்படும் மோதலுக்குப் பலியானவர்களில் பலர் இவர்கள்.
ஒப்பீட்டளவில் தமிழர் சமூகம் கல்வி, வணிகம், அரசியல் என்று பல துறைகளிலும் பெரும் துணையற்றுத் தம்மைத் தாமே வளர்த்துக்கொண்ட சமூகம். தம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான இரை தேடலில் தமது வாழ்க்கையைத் தொலைத்துவரும் சமூகம். வரைபடங்களுக்கும் வரையறைகளுக்கும் பழக்கப்படாத வாழ்க்கைமுறையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்கே ஒரு தலைமுறை தேவையானபோது புதிய வாழ்வுமுறை என்ற அளவுகோலில் வைத்து அவர்களை மதிப்பிட முடியாது.
இந்த நகரத்து வாழ்வு படு வேகமானது. விழுந்தவரை மிதித்துக் கொண்டு அப்பாற் போய் அவரது இடத்தையே பிடித்துக் கொள்ளும் மனிதர்களின் சமூகம் தான் இந் நகரத்தை ஆக்கிரமிக்கிறது. இங்கு மனிதத்துக்கு இடமில்லை. சட்டங்களுக்கே பாரபட்சத்தைக் கற்றுக்கொடுக்கும் சமூகம் இது. இங்கே நீதியை எதிர்பார்க்க முடியாது. எனவே இதிலிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணும் ஒருவரது மனநிலையைப் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
சமீபத்தில் ஒரு குறுங்கதை எனது ஈ மெயிலில் வந்திருந்தது. அதில், முதிய வயதுத் தந்தையை அவரது மகன் சில்லு வண்டியில் வைத்துப் பூங்காவிற்கு அழைத்துப் போவார். அப்போது இருவருக்கும் நடைபெற்ற உரையாடலின்போது தந்தையார் மகனிடம் குழந்தை போல ஒரே விடயத்தைப் பல தடவைகள் கேட்டது மகனுக்கு எரிச்சலை ஊட்டியிருக்க வேண்டும். பூங்காவைப் பார்த்தது போதும் எனச் சொல்லி வண்டியைத் திருப்பிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தந்தையார் மகனிடம் கூறினார் ” மகனே நீ சின்னப் பிள்ளையாய் இருக்கும்போது உன்னைக் குழந்தை வண்டியில் வைத்து தினமும் இதே பூங்காவிற்குக் கொண்டுவருவேன். அப்போதும் ஒரே கேள்வியை நீ அடிக்கடி கேட்பாய். அப்போதெல்லாம் நான் கோபப்படாமல் உனக்குப் பதில் சொல்லிக்கொண்டே இருப்பேன்”
ஊருக்குப் போகவேண்டுமென்று அந்தத் தமிழர் எடுத்த முடிவு நல்லது எனவே நினைக்கிறேன். “நீங்க அங்க ஒரு வீட்டைக் கட்டுங்கோ. அங்க நாங்கள் விடுமுறைக்கு வந்து தங்கிப் போகலாம்”. அப்பா இங்கே தனியாயிருந்தாலென்ன எங்கே தனியாயிருந்தாலென்ன. அதுபற்றிய அக்கறை ஏதுமில்லாது தாம் விடுமுறையை அனுபவிப்பதற்கும் அப்பா வீடு கட்டி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் பிள்ளைகளை எந்த மண் உருவாக்கியது?
அவர் இருந்த மன நிலையில் ஊரில் வீடு கட்டி, முற்றத்தில் வேம்பு வளர்த்து அதில் ஊஞ்சலும் கட்டிப் பிள்ளைகளை வைத்து ஆட்டி மகிழ்வார் போலிருந்தது.
அவரது பரிதாபத்தைப் பார்த்து அந்த மண் விடுத்த அழைப்புக்கான பதிலே அவரது முடிவாகவும் இருக்கலாம், யார் கண்டது.

உரையாடல் சஞ்சிகைக்காக எழுதியது – ஜனவரி 2014

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)