புதிய ஆண்டு 2019

புதிய ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டுமென்பதே எல்லோரது விருப்பமாகவும் இருக்கும். பரம ஏழைக்கும் – பணத்தில் குளிப்பவனுக்கும், நோயாளிக்கும் – ஆரோக்கியனுக்கும், தர்மவானுக்கும் – கொலை காரனுக்கும் இதுவேதான் விருப்பமாக இருக்கும். விரும்புவதற்குரிய சகல உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. இருக்கின்ற படிக்கும் வைக்கப்போகும் படிக்குமுள்ள உறவு நிலைகளைக் கொண்டே உழைப்பு இருக்க வேண்டுமென்பது தான் இயற்கை. அந்த உழைப்புக்கு – அவன் யார் என்பதில் அக்கறையில்லை அதற்குரிய ஊதியத்தை அது கொடுத்தேயாகும். அதுவே தான் தர்மமும் கூட.

உலகின் நடப்பு எப்படியிருக்க வேண்டுமென ஒரு ஊரில் இருப்பவன் விரும்பலாம் ஆனால் தீர்மானிக்க இயலாது. எமது நிலையும் அதுதான். விருப்பங்களை மட்டும் முன் வைக்கலாம்.

அமெரிக்காவின் நாட்டாண்மை பற்றி நமக்கெல்லம் தெரிகிறது. கொதிக்கிறோம், புழுங்குகிறோம், திட்டித் தீர்க்கிறோம். அவற்றை அந்த நாட்டிலிருந்தே செய்யும் உரிமையை அந்த நாடே தந்திருக்கிறது. இவற்றை சீனாவோ, ரஸ்யாவோ, அரேபியாவோ தந்து விடமாட்டாது. சுதந்திரத்தின் அருமை சுதந்திரத்தை ஏங்குபவனுக்குத்தான் தெரியும்.

இலங்கையில் கம்பளத் தெருக்களைக் கண்டுவிட்டு ராஜபக்சவின் அபிவிருத்தியைப் புகழும் வெளிநாட்டுச் சுற்றுலாத் தமிழர்களுக்கு அம்மண்ணில் சுதந்திரமாக நடமாடும் பாக்கியத்தை அளித்த ரணில்-மைத்திரி அரசாங்கத்தை வையாமல் இருப்பதற்கு மனவிருத்தி இல்லையே என ஏங்கலாம், விரும்பலாம். அதை விட?

இப்படியான முரண்களுக்கிடையில் வாழ்ந்து தீர்த்தால் அதுவே பெரும் வெற்றி.  இன்றைய இருப்பும் நாளைய விருப்பும் இணையும் கோட்டில் சறுகாது பயணித்தாலே போதும்.

இயற்கையோடு வாழுங்கள்! இயற்கையாக வாழுங்கள்!

எல்லோரும் இன்புற்றிருப்பதுவே எமது விருப்பம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!