பிரியதர்சன் பக்கங்கள் 1.

போராட்டம் வீரர்களை மட்டுமல்ல, கோழைகளையும், துரோகிகளையும், அகதிகளையும், ஏழைகளையும், பணக்காரர்களையும் கூடவே பண்பட்ட மனிதர்களையும் உருவாக்கியது. இந் நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலில் வாழக்கிடைத்தபோது சுயமாக ஏற்றிக்கொண்டதும், தானாக ஏறிக்கொண்டதுமான அனுபவங்களும் சில ஞாபாகங்களும்  இனி  இந்த பக்கங்களை நிறைக்கும்.

அத்தியாயம் 1

அப்பாவுக்கு கொழும்பில் சுங்கத்திணைக்களத்தில் வேலை. சம்பளத்துக்கு மேல் வருமானமும் நல்ல வசதிகளோடும் கூடிய அரசாங்க தொழில். அப்போது நாங்கள் கொழும்பின் புறநகர் பகுதியான ஹுனுப்பிட்டியில் குடியிருந்தோம். நான் பிறந்ததும் என் சின்ன வயது பள்ளிப்படிப்பும் அங்கேயே அமைந்தது. எங்களைப் போலவே வேலையின் நிமித்தம் கொழும்புக்கு குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்கள் ஹுனுப்பிட்டியில் குடியிருந்தார்கள். பள்ளிக்கூட விடுமுறைக்கு பருத்தித்துறையில் இருந்த எங்கள் வீட்டுக்கு போய் வருவது வழக்கம்.

77 கலவரத்தில் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு பருத்தித்துறைக்கு நிரந்தரமாக போக நேர்ந்தபோது மூன்றாம் வகுப்பில் இருந்தேன்.

சில ஆண்டுகளில் எதிர்பாராமல் அப்பா இல்லாமல் போக எல்லா சுமைகளும் அம்மாவின் தலைக்கு ஒரேநாளில் இடம் மாறியது. அப்போது மூத்த அண்ணனும் அக்காவும் பல்கலைக்கழகத்திலும் நானும் மற்ற அண்ணனும் தம்பியும் பள்ளிப் படிப்போடும் இருந்தோம். அப்பாவின் பென்சனில் ஐந்துபேரின் படிப்பையும் செலவையும் சமாளிக்க சிரமப்பட வேண்டிஇருந்தது. ஒருவருடைய படிப்பையாவது நிறுத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும்படி அக்கம்பக்கத்தில் சொன்னார்கள். பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தி சிக்கலை கடப்பதில் அம்மாவுக்கு பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. செலவுகளின் துண்டு விழும் தொகையை சமாளிக்க அம்மாவின் ஒவ்வொரு நகையாக அடவு கடைக்கு போனது.

அண்ணா படிப்பை முடித்து வேலைக்கும் அக்கா மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்கும் போகிறபோது ஏறத்தாள அம்மாவின் எல்லா நகைகளும் அடவு கடைக்கோ அல்லது விற்பனைக்கோ போயிருந்தது. ஆயினும் அம்மா விரும்பியதை போலவே ஐந்து பேரும் இலங்கையிலேயே பல்கலைக்கழக படிப்பை பூர்த்திசெய்ய முடிந்தது.

பிறகு மீண்டும் வசதிகளும் வாய்ப்புகளும் வந்து சேர்ந்தபோது அம்மாவுக்கு நகைகளை போட்டு மகிழ்கிற வயது கடந்து போயிருந்தது.

இப்படித்தானே அம்மாக்களின் அர்ப்பணிப்புகளிலும் நம்பிக்கைகளிலும் துளிர்த்த குடும்பங்கள் ஊர் முழுக்க நிரம்பிக்கிடக்கிறது. அரைவயிரோடும கால்வயிரோடும் பிள்ளைகள் பற்றிய கனவோடு வாழ்ந்த  வாழ்கிற எல்லா அம்மாக்களும் நினைவுக்கு வருகிறார்கள் .

தொடரும்…
Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)