பிரித்தானியா: உயர்கல்வி முடித்த வெளிநாட்டு மாணவர்கள் உடனேயே வெளியேறத் தேவையில்லை

பிரதமர் ஜோன்சனின் புதிய திட்டத்தினால் வெளிநாட்டு மாணவர்கள் பலன் பெறுவர்

செப்டம்பர் 13, 2019 

பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்ததும் உடனேயே தமது நாடுகளுக்குத் திரும்பத் தேவையில்லை. படிப்பு முடிந்து 2 வருடங்களுக்கு அவர்கள் அங்கேயே தங்கியிருந்து வேலைகளைத் தேடிக்கொள்ளலாம். வெளிநாட்டு மாணவர்களுக்காக பிரதமர் பொறிஸ் ஜோன்சனால் அறிவிக்கப்பட்ட இத் திட்டம் ‘பட்டதாரி குடிவரவுப் பாதை’ (Graduate Immigration Route) என அழைக்கப்படும்.

Photo Credit: Zentora

முந்நாள் பிரதமர் உள்விவகார அமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்ட தற்போதய சட்டத்தின்படி, வெளிநாட்டு மாணவர்கள் பட்டம் பெற்று நான்கு மாதங்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

‘பிறெக்சிட்’ நடைமுறைக்கு வந்தவுடன் பயிற்றப்பட்ட பட்டதாரிகளுக்கும், அனுபவமுள்ள வேலையாட்களுக்கும் பஞ்சம் ஏற்படும் என்பது ‘பிறெக்சிட்’ எதிர்ப்பாளர்களால் முன்வைக்கப்படும் கரிசனைகளில் ஒன்று. ‘பிறெக்சிட்’ நடைமுறைக்கு வருவதனால் ஏற்படும் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்கு ஜோன்சன் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளில் இதுவுமொன்று.

இப் ‘பாதை’, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து, இளமானிப் பட்டங்களையோ (undergraduate) அல்லது அதற்கு மேலோ படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கே பொருந்தும். 2020-2021 கல்வியாண்டில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.

“உலகம் முழுவதிலுமிருந்தும் புத்திக்கூர்மையுள்ள மாணவர்களை உள்வாங்குவதால் எமது பொருளாதாரம் மேம்பாடடையும்” என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Please follow and like us:
error0
error

Enjoy this blog? Please spread the word :)