பசுமைப் புரட்சி | ‘ஹிப்பி’களின் மீள் வருகை

உலகம் எரிந்து கொண்டிருக்கிறது. வரலாறு காணாத வகையில் ஒரு மில்லியனுக்கும் மேலான உயிரினங்கள் இவ்வுலகிலிருந்து நிரந்தரமாக தொலைந்துவிடப் போகின்றனவென்று ஐ.நா. சபை அறிவிக்கிறது. தமது எதிர்காலம் கண்முன்னே இருண்டுகொண்டு வருவதைக் கண்டு இளைய தலைமுறையினர் அச்சம் கொள்ளவாரம்பித்திருக்கிறார்கள். ஆனால் பழமைவாதிகளோ எதையும் பற்றியும் கவலைப்படாது தமது வங்கிக் கணக்குகளைப் பெருப்பித்துக் கொள்வதில் மட்டுமே அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு விரைவில் வரப்போகிறது. உலகெங்கும் தொடர்ந்து வரும் இயற்கை அனர்த்தங்கள் அடுத்த தலைமுறையை விழித்தெழச் செய்து வருகின்றன. தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கடமைகளை அவர்கள் தமது பெற்றோர் தலைமுறையிடமிருந்து பறித்தெடுக்கத் தயாராகி விட்டார்கள். இந்த விழிப்பியக்கம் உலகெங்கும் பசுமைப் புரட்சியை மேற்கொள்ளப் போகிறது. அதற்கான கட்டியங்கள் கேட்கவாரம்பித்து விட்டன.

சூழல் மாசடைவு பூமியின் ஆரோக்கியத்தைச் சீரழித்து வருகிறது என்பதை ஆதாரங்களுடன் விஞ்ஞானம் பல தசாப்தங்களாகப் பறையடித்துச் சொல்லி வந்தது. அரசியல்வாதிகள் கேட்கவில்லை. பெரும் வியாபாரிகளின் மஞ்ச விரிப்புக்களில் மயங்கிக் கிடந்த, இன்னும் கிடக்கும், அரசியல்வாதிகள் அடுத்த தலைமுறையின் அரசியல் பேரலையால் அடித்துச் செல்லப்படுவர். அதற்கான பேரியக்கத்தை ‘தலைமுறை – Z (25 வயதுக்குக் குறைந்தவர்கள்) ‘ ஆரம்பித்து விட்டது.

1960 களில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ‘ஹிப்பி’ கலாச்சாரம் உச்ச நிலையில் இருந்தது. அதுவும் ஒரு இளைய தலைமுறை தான். அவர்களின் அரசியற் செயற்பாடுகள் புரட்சிகரமானவை. சிவப்புச் சாயம் எதுவும் பூசப்படாத அறம் சார்ந்த அப்புரட்சி உலகில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. இளைய தலைமுறையினால் முன்னெடுக்கப்பட்ட இப் பேரியக்கம் வியட்நாம் போரைத் தோற்கடித்தது. நூற்றாண்டுகளாக கறுப்பின மக்களின் கரங்களைப் பிணைத்துக்கொண்டிருந்த இனத்துவேச விலங்குகளைச் சிதறடித்தது.

60 வருடங்களுக்குப் பிறகு காலம் ஒரு சுழற்சியை முடித்திருக்கிறது. புதிய Z தலைமுறை ‘ஹிப்பி’ தலைமுறையினரைவிடவும் பலமானதாக இருக்கலாம். சித்திரவதைக்குளாகிக் கொண்டிருக்கும் பூமியின் வலி அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. உண்மைகளை மூடி மறைத்து வேசதாரிகாளான அரசியல்வாதிகளின் திரிபு படுத்திய தகவல்களை இத் தலைமுறையினர் கண்டுகொள்ளப் போவதில்லை. நெகிழிகளினால்  (plastic) தமது வாழிடங்களிலேயே தூக்கிலிடப்பட்ட ஆமைகளும், வயிறு வெடித்துச் செத்த திமிங்கிலங்களும் இவர்களுக்கு வாழும் தரவுகள்.

மாற்றங்கள் தேவை. உடனடியாகத் தேவை. அவற்றைக் கொண்டுவரக்கூடியவர்கள் அரசியல்வாதிகள். அவர்களைத் தெரிவு செய்பவர்கள் மக்கள். இதுவரை இந்த மக்களில் இளையவர்கள் இருந்ததில்லை. இனிமேலும் அப்படியில்லை என்பதற்கு நிறையவே சான்றுகள் தெரிகின்றன. இவ்விளையவர்களின் பேரியக்கங்கள் சில நாடுகளில் ஏற்கெனவே அசையத் தொடங்கிவிட்டன. அரசியல்வாதிகள் கேட்கவாரம்பித்துள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்ணியா மாநிலம், இந்தியா, கனடா, தாய்வான் போன்றவை சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இருப்பினும் ஆட்சி மாற்றங்கள் எத்திட்டங்களையும் எப்போதும் மாற்றிக்கொள்ளலாம்.

கனடாவின் மத்திய அரசு கடந்த ஏப்ரல் 1 முதல் கரி விலை நிர்ணயம் (Carbon Pricing) என்றொரு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இருப்பினும் நான்கு மாகாணங்கள் தாம் அவற்றை நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனப் போர்க்கொடி தூக்கியுள்ளன. இன் நான்கு மாகாணங்களிலும் ஆட்சியிலுள்ளவை பழமைவாத அரசுகள். இந்த நான்கு மாகாணங்களும் இயற்கை அனர்த்தங்களால் அடிக்கடி பாதிக்கப்படுபவை. இருப்பினும் இம் மாநில வாக்காளர்கள் சூழல் பற்றி எந்தவித அக்கறையுமில்லாத, கல்வி, விஞ்ஞானம் எவற்றிலும் நம்பிக்கையில்லாத பழமைவாத அரசுகளை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்.

மத்திய அரசின் கரி விலை நிர்ணயத்திட்டம் பற்றிய போதிய விளக்கம் மக்களுக்கு அளிக்கப்படவில்லை. அரசியல்வாதிகளூக்கு இது எதுவும் விளங்கப்போவதில்லை என்பது வேறு விடயம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு பண்டத்தின் விலையைத் திடீரென்று அதிகரித்தால் அப் பண்டத்தை வாங்குவோரின் (நுகர்வோரின்) எண்ணிக்கை குறையும். வாகனத்துக்குத் தேவையான எரிபொருளின் விலையை அதிகரித்தால் பலர் பொதுப் போக்குவரத்தை அதிகம் பாவிப்பார்கள். பெரும் எரிபொருட் செலவில் பண்டங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்திக் கட்டுப்பாட்டையோ அல்லது எரிபொருட்ப் பாவனைக் கட்டுப்பாட்டையோ கொண்டு வருவார்கள். வீடுகளில் வெப்பமாக்கும் அல்லது குளிரூட்டும் சாதனங்களின் பாவனையைக் குடியிருப்பாளர்கள் கட்டுப்படுத்துவார்கள். எப்படியோ எரிபொருட் பாவனையைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்பதே அரசின் திட்டம். அதனால் எரிபொருளின் விலைகளைத் திட்டமிட்ட வகையில் அதிகரிப்பதே கரி விலை நிர்ணயம். முதியவர்களில் புகை பிடிப்பவர்களின் விகிதாசாரம் 55%. சிகரட்டின் விலை அதிகரிப்பின் பின் அது 18%. கரி விலை அதிகரிப்பும் இப்படியான ஒன்று தான், எரி பொருட் பாவனை குறைந்தால் வானத்தில் கரியமில வாயுவின் (CO2) மூட்டம் குறையும். இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்காது. பனி மூடிகள் உருகாது. வெள்ளங்கள் ஏற்படாது. எல்லோரும் நிமதியாக வாழலாம்.

இத் திட்டத்தால் மக்கள் மொத்தத்தில் இலாபமடைகிறார்கள் என்ற விடயம் பெரும்பாலோருக்குத் தெரிந்திருப்பதாகத் தெரியவில்லை. இத் திட்டத்தினால் ஆரம்பத்தில் மக்கள் எரிபொருளுக்காக அதிக விலையைக் கொடுத்திருந்தாலும் அரசு வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை மக்களுக்குத் திருப்பித் தருகிறது. கரி விலை நிர்ணயத்தினால் கனடாவில் 2019ம் ஆண்டுக்க்கான மக்களின் செலவு அதிகரிப்பு சராசரியாக $256.00 எனவும் அரசு திருப்பிக் கொடுக்கும் தொகை $300.00 எனவும் அறியப்படுகிறது. ஒரு குடியிருப்பாளர் தனது எரிபொருட் பாவனையைக் கட்டுப்படுத்தி மாதம் $100.00 இற்குள் கொண்டுவருவாராயின் அவர் $200.00 களை மிச்சப்படுத்துவார். எனவே இந்த கரிவிலை நிர்ணயம் சூழல் மாசுபடுலைக் கட்டுப்படுத்துவதோடு மக்கள் இலாபமடையவும் அதே வேளை அரசின் உற்பத்திப் பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கும் உதவி செய்கிறது.

இதில் முரண்நகை என்னவென்றால், கனடாவில் இத் திட்டத்தை அல்பேர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற மாகாணங்கள் சில வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டன. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் 2008ம் ஆண்டு இத் திட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து மாசு வாயுக்களின் வெளியேற்றம் 14% த்தால் குறைந்திருக்கிறது. அதே வேளை அம்மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் முதன்மையானதாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வெற்றியைக் கண்ட பின்னரே பிரதமர் ட்ரூடோ இத் திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் அமுல் படுத்தினார்.

இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் மக்கள் பல வழிகளில் இலாபமடைவார்கள். அதில் முக்கியாமானதொன்று காப்புறுதி. இயற்கை அனர்த்தங்களால் கனடாவில் மட்டும் ஏற்படும் பொருட் செலவு $21 முதல் $43 பில்லியன்கள். இவற்றைப் பொறுப்பேற்பது அரசுகளோ அல்லது காப்புறுதி நிறுவனங்களோ மட்டுமல்ல சாதாரண வரியிறுக்கும் மக்களும் தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகளாவிய ரீதியில் இது வரை 74 நாடுகள், மாநிலங்கள், நகரங்கள் இத் திட்டத்தை நடைமுறைப் படுத்தியோ அல்லது நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டியோ உள்ளன. பல எரிபொருள் உற்பத்தி (எண்ணை) நிறுவனங்களும் இத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆனாலும் பழமைவாதிகள் இதை எதிர்க்கிறார்கள் என்றால் ஒன்று அவர்களின் புரிதலில் சிரமம் இருக்கிறது அல்லது பனத்தின் மேலான பேராசை அவர்களை ஆட்கொண்டிருக்கிறது.

ஆனாலும் இளைய சமுதாயம் சூழலை மட்டுமல்ல இவர்களையும் புரிந்து கொள்ளவாரம்பித்திருக்கிறது என்பது நல்ல விடயம். கனடாவில் சென்ற வாரம் நடைபெற்ற மத்திய இடைத் தேர்தலில் எதிர் பாராத வகையில் பசுமைக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு பேரலையின் முன்னோடியாகவே அவதானிகள் இதைப் பார்க்கிறார்கள். உலகின் பல பாகங்களிலும் இளைய தலைமுறையினரின் மாற்றத்திற்கான வேட்கை வாக்குகளின் மூலம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தினால் புரிய வைக்க முடியாத உண்மைகளை இயற்கை தன் சீற்றத்தால் புரியவைத்திருக்கிறது. புரியாத அரசியல்வாதிகள் இப் பசுமைப் புரட்சிப் பேரலையால் அடித்துச் செல்லப்படுவார்கள்.

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)