பசுமைப் புரட்சியின் முன்னணியில் புங்குடுதீவு
இயந்திரப் புரட்சி முடிவுக்கு வருகிறது. பூமியையச் சிதைத்தது போதும் இனி என்னிடம் விட்டு விடுங்கள் என்று இயற்கைத் தாய் ஆதிக்கத்தைத் தன் கைகளில் எடுத்திருக்கிறாள். இனிக் காளியின் ஆட்சி. நமக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ அடங்கிப் போகவேண்டிய சூழ்நிலை.
பருவங்கள் பொய்க்க ஆரம்பித்துப் பல தசாப்தங்கள். ஐந்திணைகள் ஒன்றாகிப் பாலையாவதைக் கண்டும் பணத்தை மட்டுமே தொழுகின்ற நவீன பாமரர் பாடம் கற்க ஆரம்பித்திருக்கிறார்கள். இருப்பினும் எமது திணை நிலங்களைத் திருப்பிப் பெறவென ஒரு சிலர் புறப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
புங்குடுதீவு இலங்கையின் வடபுலத்திலுள்ள ஒரு சிறிய தீவு. அமைதிக் காலத்தில் இங்கு சுமார் இருபதினாயிரம் பேர்கள் வரையில் வாழ்ந்தார்கள். போர் துரத்தியது போக இப்போது மூவாயிரம் பேர் இருக்கலாம். அயலூர்க்காரர் உட்பட.
ஒரு காலத்தில் அழகு கொழித்த கிராமம் . சு.வில்வரத்தினத்தைக் கவிஞனாக்கிய கிராமம். பசுங் கூரையின் கீழ் படுத்திருந்த கிராமம்.
இன்று மேகம் தவிர்த்த, வானம் வெறுத்த வரண்ட பூமி. எப்படியாவது பிழைத்துப் போங்கள் என்று தன் மக்களைப் பரதேசம் அனுப்பிவிட்டு இயலாத உயிர்களை மட்டும் இயன்றவரை தாக்குப்பிடித்துக் கொண்டிருந்த பூமி.
ஒரு நாள் விழித்தெழுந்தது அக் கிராமம். இளம் நாற்றுகளோடு இளையர் கூட்டமொன்று படையெடுத்து வந்தது. வாருங்கள் நம் கிராமத்தைப் பசுமையாக்குவோம்; குளங்களைத் தூர் வார்வோம்; வரப்புகளை உயர்த்துவோம்; மரங்களை நாட்டுவோம். வானைப் பிளந்த ஆரவாரம் மேகங்களையே இரங்க வைத்தது.
பரதேசம் சென்ற பலர் நிரந்தரமாகவே திரும்பினார்கள். மண்ணைக் கட்டுவதற்காக மனங்களைக் கட்டினார்கள். இயந்திர வசதிகளைத் துறந்து இயற்கை வசதிகளை அரவணைத்தார்கள்.
இன்று அக்கிராமம் புதுப் பிறவி எடுத்திருக்கிறது. பசுமை கூடாரம் அமைத்திருக்கிறது. வயல்கள் விளைகின்றன. பறவைகள் திரும்புகின்றன. கால்நடைகள் காத்திருக்கின்றன.
மனிதருக்காக…
பி.கு.:
அருணாசலம் சண்முகனாதன் ஒரு தமிழ்க் கனடியர். பூர்வீகம் புங்குடுதீவு. தற்போது தன் கிராமத்திலிருந்து இயற்கை வளங்களை மூலமாகக் கொண்டு உற்பத்திகளையும், வரண்ட வயல்களில் விளைச்சலையும் செய்து வரும் புரட்சியாளர்.
இவர் பிரான்ஸ் பிரஜை. பூர்வீகம் புங்குடுதீவு. தற்போது புங்குடுதீவின் நிரந்தர வாசி. ‘பசுமைப் புரட்சிக் குழுமம்‘ என்ற அமைப்பின் தலைவர்.
இவர்களை விடவும் மேலும் பல அர்ப்பணிப்புள்ள நல்லுள்ளம் கொண்ட இளையர்கள், பெரியவர்கள், கிராமத்துடன் உறவுள்ள கொடையாளர்கள், இக் கிராமத்தையே அறியாத பசுமைப் புரட்சியாளர்கள் என்று பலரும் இப்பணியுடன் இணைந்து செயற்படுகிறார்கள். எல்லோரையும் இங்கு குறிப்பிடவில்லை. கிராமம் நன்றி சொல்லும், ஒரு நாள்….



