நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் | ஞானசேர தேரர் எச்சரிக்கை

பொதுபலசேனாவின் தலைவர் ஞானசேர தேரர் ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். வஹாபிஸம் (தீவிர இஸ்லாமிய ஒழுங்கு) மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கிறார் தேரர்.
அவருடைய எச்சரிக்கையின் பின்னணியிலுள்ள முதலாவது கோரிக்கை முஸ்லீம் அரசியல்வாதிகளான ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி  ஆகியோரைப் பதவி நீக்கம் செய்வதே.
கண்டியில் உண்ணாவிரதம் இருக்கும் அத்துரலிய ரத்தன தேரரை இன்று மதியம் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசும்போதே ஞானசேர தேரர் இதைத் தெரிவித்தார்.
“நாளை மதியம் வரை நான் அரசுக்கு கால அவகாசம் வழங்குகிறேன். அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் நாட்டில் கலவரம் (சனாகெலி ) வெடிப்பதை அரசு கண்டு கொள்ளும்” என அவர் கூறினார்.
“உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களின் பின்னர் அதன் சூத்திரதாரியான பயங்கரவாதி சகாரான் தன்  மூன்று சகாக்களுடன் கிழக்கை விட்டு வெளியேறுவதற்கு ஹிஸ்புல்லா உதவி செய்ததை நிரூபிக்கும் வீடியோ தரவு என்னிடம் உள்ளது. நான்  இதை ஜனாதிபதிக்கு ஏற்கெனவே  கூறியுள்ளேன்.  எனவே ஒன்றில் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து விலக்கப்படுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். இஸ்லாமிய தீவிரவாதம் பரவுவதால் ஏற்படப்போகும் அபாயம் பற்றி நான் அசாத் சாலியிடம் பல மாதங்களுக்கு முன்னரே பேசியிருந்தேன். இந்த மூன்று காவாலி அரசியல்வாதிகளினால் ரத்தன தேரர் பலவீனமடைவதை நான் அனுமதிக்க மாட்டேன். ரத்தன தேரர் எனது ஆசிரியர். எங்களுக்குள்  சித்தாந்த ரீதியில் வேறுபாடுகள் இருந்தாலும் இந்த முஸ்லீம் வியத்தில் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம். வஹாபிஸத்தின் பயங்கரவாதம் நிறுத்தப்படாவிட்டால் அது இன்னுமொரு நூற்றாண்டுக்கு வேர் கொண்டு விடும்” என ஞானசேரர் மேலும் தெரிவித்தார்.
Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)