நவீன ஆயுதங்களை நாம் தயாரிக்க வேண்டும் | இராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்கா

“பல் குழல் கணை ஏவிகள் (Multi-Barrel Rocket Launchers (MBRLs)) போன்ற நவீன ஆயுதங்களப் பெருமளவில் நாம் தயாரிக்க வேண்டும். அவை எமது பயிற்சிக்கும், பாவனைக்கும் மட்டுமல்ல அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் உதவும்” என்று கேட்டுக் கொண்டார் சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனெறல் மஹேஷ் சேனனாயக்கா. ஹோமகம விலிருக்கும் ஆய்வு, அபிவிருத்தி மையத்திற்கு சென்றிருந்த போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ரிறான் டி சில்வா அவர்களது அழைப்பை ஏற்று இராணுவத் தளபதி அங்கு சென்றிருந்தார்.

மையத்தின் தொழில்நுட்பப் பிரிவிலுள்ள மின்னியல், அணுவாயுத, உயிராயுத, இரசாயனவாயுத அலகுகள் இராணுவத்துக்குத் தேவையான பல்வேறு விதமான இராணுவ ஆயுதத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. மையத்தினால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஏவு கணைகள், பல் குழல் கணை ஏவிகள், பயிற்சிக்குப் பாவிக்கும் உருவகத் தளங்கள் (simulation platforms), கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ரப்பர் மாதிரிகள், கணை ஏவிகள், மோட்டார்கள், பரசூட்டுகள், கவச வாகனங்கள் மற்றும் முப்படைகளுக்கும் தேவையான உபரிகள் ஆகியனவற்றின் உற்பத்தி நடைமுறைகளை இராணுவத் தளபதி பார்வையிட்டார்.

முற்று முழுதாக மையத்தினால் சர்வதேச தரத்துக்கு இணையானதாகத் தயாரிக்கப்பட்ட 10 குழல் கணை ஏவி ( 10-barreled MBRL) இந்த வருட சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்று மக்களின் பெரும் ஆதரவையும் பெற்றிருந்தது.

மையத்தின் சில தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளில் மையம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் மைய அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார்.

 

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)