தலையங்கம் | முள்ளிவாய்க்காலும் முடியாத துயரமும்

Video Credit: Al Jazeera

“]

பத்து வருடங்களாகிவிட்டன.

இறந்தவர்கள், காணாமற் போனவர்கள் என்று எண்ணிக்கை எதுவும் இல்லாது;  பிள்ளைகளைக், கணவர்களை, மனைவிகளைப், பெற்றோர்களைத் தொலைத்தவர்களின்  ‘மீண்டும் வருவார்களா?’ என்கின்ற ஏக்கங்களிற்கு பதிலேதும் தராது அரசு இன்னும் இறுமாப்பில் இருக்கிறது. வருடா வருடம் அழுது குளறி அந்தக் குருஷேத்திரத்தின் குருதி தோய்ந்த மண்ணை மீண்டும் மீண்டும் கண்ணீரால் கழுவிக்கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்.

பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் தம் உயிர்ச் செலவில் ஒழித்துக்கட்டி நாட்டைக் காப்பாற்றியதற்காக சிங்களம் இன்னும் படைகள் மீது புகழ்பாடிக்கொண்டிருக்கிறதே தவிர வெந்து கொண்டிருக்கும் தமிழர் மனங்கள் எப்படி வேதனையுறும் என்றேனும் சிந்திக்காத அளவுக்கு நிலைமை இருக்கிறதென்றால் நல்லிணக்கம் மீது அதற்கு நம்பிக்கை இல்லை எனவே கருத வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது படுகொலை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அது இனப்படுகொலையா இல்லையா என்ற மொழிப்பிரயோகங்களை வைத்து அரசியல் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். ‘ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக அவர்களை வேண்டுமென்றே கொல்வது என்பது இனப்படுகொலை’ என வரைவிலக்கணம் செய்கிறது மேற்கு (UN Convention on Genocide). முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் என்பதனால் தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள், எனவே அது ஒரு இனப்படுகொலை. (உலக இனப்படுகொலைகள்)

முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல அதற்கு முன்னரும் பின்னரும், பல தடவைகளில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. போரில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைப் புரிந்ததாக ஐ.நா. மனித உரிமை ஆணையகம் சொல்லியிருக்கிறது. ‘இனப்படுகொலை’ என்ற சொல்லை ஐ.நா. இதுவரை பாவிக்கவில்லை. உலகில் எந்தவொரு நாடும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை என்று பிரகடனம் செய்யவுமில்லை. மியன்மாரில் றொஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை இனப்படுகொலை என்று சென்ற வருடம் கனடா அங்கீகரித்திருக்கிறது. ஐ.நா. வினால் தயாரிக்கப்பட்ட ‘உண்மையைக் கண்டறியும்’ அறிக்கையின் பின்னரே கனடா இதைச் செய்திருக்கிறது. ரொஹிங்யா முஸ்லிம்களின் துயரங்களை ஐ.நா. கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது 30 வருடங்களுக்கு முன்பு. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சியால் தான் இன்று அது ஒரு இனப்படுகொலை என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

சிறீலங்கா ஐ.நா.வின்  இனப்படுகொலை பட்டயத்தை (UN Convention on Genocide) ஏற்றுக்கொண்டிருக்கிறதே தவிர (acceding) அதில் கையெழுத்திடவில்லை (ratify). முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை என முதலில் ஐ.நாவும் மேற்கு நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இனப்படுகொலை என்பதை நாம் வெறுமனே பாராயணம் செய்து கொள்வதாலோஅல்லது தீர்மானங்கள் நிறைவேற்றுவதாலோ எதுவுமே நடந்துவிடாது.

போர்க்குற்றங்கள் விடயத்திலும் அப்படியே. அமெரிக்கா கையெழுத்திடாத, அங்கீகரிக்காத எந்த பட்டயங்களினாலோ அல்லது ஸ்தாபனங்களினாலோ எதுவுமே நடக்கப் போவதில்லை (இனப்படுகொலை பட்டயத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டிருக்கிறது).

சிறீலங்காவின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் மேற்கு நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தான் பெரும்பாலும் தங்கியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. சலுகையை ரத்து செய்ததனால் தான் சிறீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்மொழிவுகளை இணைந்து முன்னெடுத்தது. விருப்பமோ விருப்பமில்லையோ ஐ.நா. தான் மேற்கின் ஒரு பஞ்சாயத்து. நம் மக்கள் கையறு நிலையில் நிற்கும்போது ஐ.நா. தான் எம்மக்களைக் கைவிட்டு தம் பாதுகாப்புக்காக ஓடியது. அதே ஐ.நா.விடம் தான் நாம் நீதி கேட்டு நிற்கிறோம். வேறு வழியில்லை. தர்க்க ரீதியாகப் பார்ப்பின், ஐ.நா. தான் மேற்கின் கருவி அதுவே தான் எமது கருவியும் கூட.

தமிழரது தேவைகள் இரண்டு. ஒன்று நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதன் மூலம் எதிர்காலச் சந்ததிகளுக்கான சமாதானமான வாழ்வு. இரண்டாவது முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கும் தொலைந்தவர்களுக்கும் ஒரு நீதி.

இவற்றில் எதை முதன்மைப்படுத்துவது? யார் பொறுப்பேற்பது? எப்படியான அணுகுமுறைகளைக் கையாள்வது?

புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்கு இவ் விடயத்தில் மிகவும் காத்திரமானது. தாம் வாழும் நாடுகளின் மூலம் சிறீலங்காவின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது முதன்மையானது. முள்ளிவாய்க்கால் அரசியல்வாதிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் சிறந்த படிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது. கஞ்சியை ஊற்றுங்கள், காட்சிப்படுத்துங்கள். நாளைய சந்ததி உங்களை வாழ்த்தும் வகையில் செயற்படுங்கள்.

 

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)