தமிழர்களின் நண்பர் போல் டூவர் 1963 – 2019

 

கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் ஒட்டாவா – மத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களின் நண்பருமான போல் டூவர் இன்று (பெப்ரவரி 6, 2019) காலமானார். கடந்த வருடம் அவரது மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.

கல்லூரிக் காலங்களிலேயே சமூக செயற்பாட்டாளாராக இருந்து 2006 ம் ஆண்டு முதன் முதலில் ஒட்டாவா-மத்தி தொகுதியில் புதிய ஜனநயகக் கட்சியில் போட்டியிட்டுப் பாராளுமன்றம் சென்றார்.  2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மறைந்த தலைவர் ஜாக் லெயிற்றன் தலைமையில் பாராளுமன்றத்தில் தான் வரித்த கொள்கைகளுக்காகவும் பாதிக்கப்பட்ட நாதியற்ற மக்களுக்காகவும் அயராது குரல் கொடுத்தார் புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக இருந்தபோது போல் டூவர் வெளி விவகார விடயங்களின் பேச்சாளராக இருந்தார்.  பல தடவைகள் கனடிய பாராளுமன்றத்தில் தமிழர்கள் சார்பில் குரலெழுப்பினார். முதன் முதலாகக் கனடிய பாராளுமன்ற உறுப்பினராகச் சென்ற (2011)  தமிழரான ராதிகா சிற்சபேசன் அவர்களுக்கு உற்ற சகோதரர் போலிருந்து வழிகாட்டி உதவி செய்தார்.

போல் டூவரின் தாயாரான மரியோன் டூவரும் ஆரம்பத்தில் ஒட்டாவா மேயராக இருந்து பின்னாளில் ஜனநாயகக் கட்சியை இதே தொகுதியில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். சிறு வயதிலேயே முற்போக்குக் கொள்கைகளால் கவரப்பட்ட அவர் கல்லூரிக் காலங்களில் இருந்தே மாணவ செயற்பாட்டாளராகவும் பல்கலைக்கழகம் முடித்ததும் சமூக, அரசியல், தொழிற்சங்க செயற்பாட்டாளராகவும் பல் வேறு காலங்களில் செயற்பட்டுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் நிகராகுவாவில் ஐந்து மாதங்கள் தொண்டராகப் பணி புரிந்திருக்கிறார்.

1985 இல் காள்ரன் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பி.ஏ. பட்டத்தைப் பெற்ற பின்னர் 1994 இல் குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பயிற்சிப் பட்டத்தைப் பெற்று ஆரம்பக் கல்வி ஆசிரியராகச் சிறிதுகாலம் கடமையாற்றினார். இக் காலகட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கிப் பல சலுகைகளைப் பெற்றுக் கொடுத்தார்.

2015ம் ஆண்டு தேர்தலின் போது லிபரல் கட்சியின் தற்போதய உறுப்பினர் கதறின் மக்கென்னாவிடம் தோல்வியுற்றார்.

2018ம் ஆண்டு மூளையில் புற்றுநோய் காணப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காது இன்று மரணத்தைத் தழுவினார்.

ஜூலியா ஸ்நெயிட் இவரது மனைவி. இரண்டு பிள்ளைகளுமுண்டு.

ஒரு அரசியல்வாதி எப்படி உருவாக வேண்டுமென்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் போல் டூவர்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)