ஜோடி வில்சன்-றேபோ | பாரதி காண விரும்பிய புதுமைப்பெண்

கனடிய வாசகர்களையும் கனடிய அரசியலில் அக்கறையுள்ள வாசகர்களையும் தவிர்ந்த ஏனையவர்களுக்கு இக் கட்டுரை பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் அறம் சார்ந்த போராட்டங்கள் ஏன் வெற்றி பெறுகின்றன என்பதற்கு இதற்குள்ளும் ஒரு பதில் கிடைக்கலாம்.

அறிமுகம்:

ஜோடி வில்சன்-றேபோ என்பவர் கனடிய ஆளும் கட்சியில் (லிபரல்) ஒரு முன்னாள் மந்திரி; கனடாவின் உரிமையாளர்களான சுதேசிகளின் பூர்விகத்தைக் கொண்ட ஒரு வழக்கறிஞர். லிபரல் கட்சி ஆட்சி அமைத்தபோது பிரதமர் தனது அமைச்சரவையில் பெண்கள், சுதேசிகள், பல்லினக் கலாச்சாரப் பிரதிநிதிகள் என்று பலருக்கும் அமைச்சரவையில் பதவிகளைக் கொடுத்தார். ஜோடி வில்சன் – றேபோவுக்கு அப்போது கொடுக்கப்பட்ட பதவி – நீதி அமைச்சு.  அத்தோடு  வழக்காடு நாயகம் (Attorney General) என்ற இன்னுமொரு பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஜோடி வில்சன் – றேபோ வின் தந்தையார் பில் வில்சன் சுதேசிய சமூக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர். தற்போதய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையார் பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் வெற்றிகரமாக நிறைவேற்றிய, கனடாவை ஒரு பல்தேசிய, பல்கலாச்சார மக்களின் ஒன்றியமாக மாற்றிய, அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது சுதேசிகளின் உரிமைகளுக்காக வாதாடி அவற்றைச் சாசனத்தில் இடம்பெற வைத்தவர் பில் வில்சன். திருமணத்தின் பின் ஜோடி தன் கணவரின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.

பிரச்சினை:

சென்ற வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகத்துக்கும் ஜோடி வில்சன்  – றேபோவின் அலுவலகத்துக்கும் ஒரு பிணக்கு. பிரதமர் ட்ரூடோ கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பிரஞ்சுக் கனடியர். கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற நிறுவனமான  எச்.என்.சீ. லவலன் (SNC Lavalin) என்ற நிறுவனம் பிரதமர் ட்ரூடோவிடம் ஒரு உதவியைக் கேட்டிருந்தது. லிபியாவை மேற்கு நாடுகள் (கனடாவும் சேர்ந்து) சேர்ந்து தாக்கியழித்த போது அங்கு பல கட்டுமான ஒப்பந்தங்களை எடுப்பதற்காக எச்.என்.சீ. லவலன் நிறுவனம் கடாபியின் மகனுக்கு இலஞ்சம் கொடுத்தமை தெரியவந்ததை அடுத்து அந்நிறுவனத்தின் மீது கனடிய அரசு வழக்குத் தொடுத்திருந்தது. அவ்வழக்கில் தமக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்படி அந்நிறுவனம் பிரதமர் அலுவலகத்தை நச்சரித்துக் கொண்டிருந்தது. அத்தோடு லிபரல் கட்சியின் தேர்தல் நிதிக்குப் பெருமளவு பண உதைவியையும் அது செய்திருந்தது. இன் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான கனடியர்களுக்கு, குறிப்பாகப் பிரஞ்சுக் கனடியர்களுக்கு வேலை கொடுத்து வருகிறது. கியூபெக் மாகாணத்தில் பல வாக்காளர்களையும் இது லிபரல் கட்சிக்கு வாங்கித் தந்திருக்கிறது. இதனால் இந் நிறுவனத்துக்கு உதவ வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் ட்ரூடோவிற்கு இருக்கிறது.

இப்பின்னணியில், இந்நிறுவனத்தின் மீதான சட்டப்பிரச்சினையில் தலையிட்டு அதற்கு ஒரு சாதகமான முடிவைப்பெற்றுக் கொடுக்கும்படி வழக்காடு நாயகம் ஜோடி வில்சன் – றேபோவுக்கு பிரதமர் தனது அலுவலக ஊழியர்கள் (ஆலோசகர்கள்) மூலம் சொல்லியிருக்கிறார். நீதி பரிபாலனத்தில் சமரசம் செய்ய ஜோடி வில்சன் – றேபோ திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதன் எதிரொலியாக பிரதமர் ஜோடி வில்சன்-றேபோவின் நீதி அமைச்சுப் பதவியை எடுத்துவிட்டு இன்னுமொரு முக்கியம் குறைந்த அமைச்சு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

பூதத்தைப் பிரதமர் போத்தலிலிருந்து வெளியேற உதவி செய்துவிட்டார். பூதம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது.

ஜோடி வில்சன் றேபோவிற்கு சார்பாக எதிர்க்கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும், சுதேசிகளின் அமைப்புகளும், பாரபட்சமற்று ஊடகங்களும், பொது மக்களும் குரலெழுப்பத் தொடங்கி விட்டார்கள். போதாதற்கு, பிரதமரும் தனக்குத் தானே தலையில் மண்ணை அள்ளிப் போடுவது போல ஜோடி வில்சன் – றேபோவைக் குற்றம் சாட்டி அறிக்கைகளை விடத் தொடங்கி விட்டார். “இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டுமானால் என் மீது போட்டிருக்கும் சட்ட ரீதியான வாய்ப்பூட்டைத் திறந்து விடுங்கள் நான் என் தரப்பு உண்மைகளைக் கூறிவிடுகிறேன்” என்று ஜோடி வில்சன் – றேபோ கூறியதும் வேறு வழியில்லாமல் பிரதமர் பூட்டைத் திறந்து விட்டார். அவரது வாக்குமூலம் இன்று பாராளுமன்றத்தில் நீதிக் குழு முன்னிலையில் நடைபெற்றது.

யாருக்கு வெற்றி?

மூன்று பிரதான கட்சிகளிலுமிருந்தும் பிரதிநிதிகள் நீதிக்குழுவில் அங்கம் வகித்திருந்தார்கள். தலைவர் ஒருவர் நெறிப்படுத்தினார். பாரபட்சமற்ற விசாரணை. ஜோடி வில்சன் – றேபோ மிகவும் தெளிவாகவும், தன்னம்பிக்கையுடனும், முடிந்தளவுக்கு உணர்ச்சிவசப்படாமல் சுருக்கமான பதில்களை அளிப்பவராகவும் காணப்பட்டார். கேள்வி கேட்டவர்களில் வெகு சிலரே கருத்துடைய, சம்பந்தமுள்ள கேள்விகளைக் கேட்டார்கள். அனேகமானோர் அனுபவமற்ற – ‘நாங்களும் உள்ளோம் வகையறாக்கள்’. தமிழ் ஊடக பத்திரிகையாளர் மானாட்டில் கலந்துகொண்டது போன்ற உணர்வு. இவர்கள் தான் எங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் என்றால் ஜனநாயகம் எனக்கு வேண்டாம்.

இதில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் சஞ்சலப்படுத்தின. அவற்றைக் கேட்டவர்கள் லிபரல் கட்சியினர்.

“பிரதமரின் அலுவலகம் (பிரதமர்) சமரசம் செய்யும்படி உங்களைத் தொந்தரவுப் படுத்தியிருந்தால் ஏன் நீங்கள் அப்போதே பதவியைத் துறக்கவில்லை?”

“பிரதமரின் அலுவலக ஊழியர்கள் தொந்தரவு செய்திருந்தால் ஏன் பிரதமரிடம் முறையிடவில்லை?”

இங்கு வைக்கப்பட்ட குற்றச்சாட்டே பிரதமரின் தலையீட்டுக்கு நீதியமைச்சர் இடம் கொடுக்கவில்லை என்பதே. நீதியமைச்சர் தன் கடமையையில் தலையிட வேண்டாம் என்று பிரதமருக்குத் தன் முடிவைத் தெட்டத் தெளிவாக வெளிபடுத்திய பின்னரும் – நீதியைப் பேணும் ஒரு அமைச்சர் பதவியைத் துறந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் லிபரல் கட்சியினர்.

இவ் விசாரணையால் பிரதமர் இன்னும் அவமானப்பட்டுப் போயிருக்கிறார். இதே உறுப்பினர்களையும் அலுவலக ஊழியர்களையும் வைத்துக்கொண்டு பிரதமர் ஆட்சியில் தொடர முடியாது.

வெற்றி ஜோடி வில்சன் றேபோவுக்குத் தான். அவரது மரியாதை பல் மடங்கு அதிகரித்திருக்கிறது. நீதியமைச்சர் நீதியைப் பரிபாலித்திருக்கிறார். சுதேசிகள் சமூகத்திற்கு அவரால் பெருமை.

எதிர்க்கட்சிகள்:

கனடாவில் நடப்பது ‘ஒற்றையாட்சி”. எதிர்க் கட்சிகள் இருந்தும் இல்லாதவை போலத்தான். இவ் விசாரணை எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த சிறு அவல். இன்னும் ஒன்பது மாதங்களுக்கு மெல்ல முடியாது. இதர அமைச்சுகளின் நடவடிக்கைகளில் பிரதமர் அலுவலகம் தலையிடுவது இது தான் முதற் தடவையுமல்ல. தமிழர்களைச் சுமந்து வந்த அகதிக் கப்பல்கள் கரையொதுங்கிய போது அதை அரசியலாக்கி குடிவரவு, பாதுகாப்பு அமைச்சுகளில் அப்போதய பிரதமர் ஹார்ப்பர் பெருமளவில் தலையிட்டார். எனவே ட்ரூடோ பதவி விலக வேண்டுமென்று கூப்பாடு போடும் தார்மீக உரிமை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ட்ரூ ஷியருக்கு இருக்க முடியாது.

அரசியல் ஒரு பன்னீர்க்குடம் என்று யாரும் சொன்னதில்லை. புரிகிறது.

சிவதாசன்

 

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)