சி.ல.சு.கட்சியின் தலைமையகத்துக்குச் செல்ல சந்திரிகாவிற்குத் தடை – சிறிசேன.

முந்நாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரரணதுங்கவையும் அவரது ஆதரவாளர்களையும்  சிரிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமயலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டாமென அதன் பராமரிப்பாளர்களுக்கு ஜனாதிபதி சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தாய்லாந்தில் பிரத்தியேக விடுமுறையொன்றை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் அவர் இக் கட்டளையைப் பிறப்பித்ததாக அறியப்படுகிறது. தான் திரும்பி வரும்வரையில் டார்லி தெருவில் அமைந்திருக்கும் தலைமை அலுவலகத்தைப் பூட்டி வைத்திருக்கும்படி அவர் கட்டளையிட்டிருந்ததாக அப் பத்திரிகை கூறுகின்றது.

குமாரதுங்க தன் தலைமைக்கு எதிராகப் ‘புரட்சி’ ஒன்றை ஒழுங்கு செய்ய முயற்சிக்கலாம் என்ற அச்சத்தில் அவர் இந்த நடவடிக்கயை எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கட்சியின் அங்கத்தவர்களில் ஒரு பகுதியினர் ராஜபக்ச குழுவினருடன் சிறிசேன அணி சேர்ந்த விடயத்தில் பலத்த அதிருப்தியைக் கொண்டிருக்கின்றனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் றோஹன லக்ஸ்மன் பியதாசஅவர்கள் தலைமையில் சென்ற சனிக்கிழமையன்று கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டமொன்றில் இவ் விடயம் தொடர்பாக காரசாரமாக விவதிக்கப்பட்டதெனவும் அதில் கட்சி அமைப்பாளர்களில் பலர் சிறிசேனாவைக் கடுமையாக விமர்சித்தனர் எனவும் தெரிய வருகிறது. எச்.பி.திசனாயகா, நிமால் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகரா, துமிந்த சில்வா போன்ற கட்சியின் பிரமுகர்கள் பலரும் இக் கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.