கோடீஸ்வரன் மறைவு குறித்து த.தே.கூட்டமைப்பு அஞ்சலி

தனி சிங்கள சட்டத்திற்கெதிராக தனித்து வழக்காடிய திரு. கோடீஸ்வரனின் மறைவிற்கு எமது அனுதாபங்கள்.

1956 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உத்தியோகபூர்வ மொழி சட்டமும் அதன் கீழ் 1961ம் ஆண்டு வழங்கப்பட்ட திறைசேரி சுற்று நிரூபமும் சோல்பரி அரசியல் யாப்பின் 29 (2) ம் பிரிவிற்கு முரணானது என்று பிரிவி கவுன்சில் வரைக்கும் சென்று வழக்குத் தாக்கல் செய்த திரு.செல்லையா கோடீஸ்வரன் அவர்களின் மறைவு குறித்து எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நீண்டகாலம் சுகவீனமுற்றிருந்த திரு. கோடீஸ்வரன் சென்ற 15ம் திகதி கொழும்பில் காலமானார். அவரது ஈமக்கிரியைகள் இன்று (18.02.2019) திருகோணமலையில் இடம்பெறுகின்றன.

கோடீஸ்வரன் வழக்கு இலங்கை சட்ட வரலாற்றிலே தனி இடம் பெற்றது. அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவராக இருந்த திரு.கோடீஸ்வரன் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற மறுத்ததன் காரணமாக சம்பள அதிகரிப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. இதனைக் காரணமாக வைத்து திரு. கோடீஸ்வரன் யாழ் மாவட்ட  நீதிமன்றத்தில் அரசுக்கெதிராக தாக்கல் செய்த வழக்கானது பிரித்தானியாவின் பிரிவி கவுன்சில் வரைக்கும் சென்றது. அரச ஊழியர் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாதென்ற அரசின் ஆட்சேபனையை மாவட்ட நீதி மன்றத்தில் திரு. கோடீஸ்வரன் முறியடித்தார். ஆனாலும் இலங்கையின் உச்ச நீதிமன்றம் அவருக்கெதிராக தீர்ப்பளித்ததன் காரணமாக பிரிவி கவுன்சிலுக்கு சென்று அங்கு வெற்றி பெற்றார்.

1972ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பிற்கு பதிலீடாக முதலாவது குடியரசு அரசியல் யாப்பு இயற்றப்பட்டதன் காரணமாக அவருடைய வழக்கின் இறுதித் தீர்ப்பை பெற முடியவில்லை.

இலங்கை வாழ் தமிழ் மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய தனி சிங்கள சட்டத்தை எதிர்த்துப் போராடிய திரு.கோடீஸ்வரனிற்கு எமது மரியாதை கலந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

திரு. M.A சுமந்திரன்

ஊடகப் பேச்சாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)