‘எங்கள் தீவைக் கடற்படையிடமிருந்து மீட்டு விட்டோம்’ – இரணைதீவு மக்கள்

இரணைதீவு சிறீலங்காவின் வடபகுதியில் மன்னார் குடாவில் அமைந்துள்ள இரு சிறு தீவுகளிணைந்த ஒரு ஊர். கடந்த 25 வருடங்களாக சிறீலங்காவின் கடற்படை வசமிருந்தது. பல தலைமுறைகளாகத் தமிழர்  வாழ்ந்து வந்த இப்பிரதேசம் போரின் போது சிறீலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது. அங்கிருந்த மக்கள் பலவந்தமாக வேறிடங்களில் குடியேற்றப்பட்டிருந்தார்கள்.

இப்பொழுது அத்தீவை அம்மக்கள் கடற்படையிடமிருந்து மீளக் கைப்பற்றியிருக்கிறார்கள். கத்தியின்றி, இரத்தமின்றி சென்ற வருடம் அது நடந்தேறியிருக்கிறது. அது எப்படிச் சாத்தியமாகியது என்பதை பி.பி.சி. ஊடகத்தின் அயீஷா பெரேரா விபரிக்கிறார்.

Map of Iranaithivu Photo Credit: BBC

இரணமடு நகர் இரணதீவுக்கு மறு கரையில் சிறீலங்காவின் பெருநிலப் பகுதியில் இருக்கும் ஒரு ஊர். சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 23ம் திகதி இரணமடு நகரின் கரையில் திடீரென்று பலர் கூடினார்கள். கத்தோலிக்கப் பாதிரிமார், பெண்கள், மீனவர், உள்ளூர் ஊடகக்காரர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்று பலரும் அங்கு கூடினர். கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளைக் கொடிகளைத் தாங்கிய 40 இயந்திரப் படகுகளில் அவர்கள் ஏறி இரணைதீவுக்குச் சென்றார்கள். அவர்களது நோக்கம் கடற்படை வசமிருந்த இரணைதீவை மீளக் கைப்பற்றுவது.

இரணைதீவு ‘பெரியதீவு’, ‘சின்னத்தீவு’ என்ற இரு தீவுகள் இணந்த நிலப்பரப்பு. மன்னார்க் குடாவில் இருக்கும் ஏகாந்தமான ரம்மியமான ஒரு சுவர்க்க பூமி.  தெளிந்த நீலக்கடலில் நீந்தும் மீன்கள், தென்னம் தோப்புகளினால் வரம்பு கட்டப்பட்ட இன்னும் சீரழிக்கப்படாத அழகிய கடற்கரை, அரைக் கிலோமீட்டர் வரையும் முழங்காலை எட்டாத ஆழமற்ற கடல். வர்ணிக்க முடியாத அழகு. அதுவே இரணைதீவு.

1992 ம் ஆண்டு அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உக்கிரமாகப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் இரணைதீவை கடற்படை கையகப் படுத்தியது. அங்கு அவர்கள் தமது தளமொன்றை நிறிவினார்கள். அங்கிருந்த மக்கள் பலவந்தமாக அகற்றப்பட்டு இரணைமடு நகரில் குடியேற்றப்பட்டார்கள். தாங்கள் இரணைதீவில் மீளக் குடியேறுவதைக் கடற்படை தடுத்து வந்ததாக மக்கள் கூறுகிறார்கள். கடற்படை அது உண்மையில்லை என்கிறது.

படகுகளில் சென்ற பலர் பெண்கள். ஆயுதம் தாங்கிய கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகலாம் என்ற பயமிருந்தும் அவர்கள் உறுதியான தீமானத்துடன் சென்றார்கள். ” ஆகக் கூடியது எங்கள் சிறிய படகுகளின் குழுவிற்கும்  கடற்படையினருக்குமிடையில்  ஏற்படும் முறுகல் நிலையையாவது நாங்கள் பதிவு செய்து எங்கள் சமூகத்தின் போராட்டத்தை வெளியுலகுக்குக் கொண்டு வரலாம்” என்று அன்று சமூகமாயிருந்த பாதிரியார்களில் ஒருவரான அருட் தந்தை ஜெயபாலன் கூறினார்.

Iranaithivu Pristine Coastline Photo Credit: BBC

ஆனால் ஆச்சரியமாக அவர்கள் எதிர்பார்த்த முறுகல் நிலை அங்கு ஏற்படவில்லை.

வழக்கமாக துறைமுகத்தில் தரித்து நிற்கும் காவற்படகையும் கடற்படை ஆழக் கடலுக்கு அகற்றிவிட்டிருந்தது. வேறெந்த படகுகளும் அங்கு இருக்கவில்லை. தமிழ்ப் படகுக் குழுவினர் எவ்வித எதிர்ப்புகளுமின்றி தரையில் இறங்கிச் சுதந்திரமாக நடமாடினார்கள்.

“நாங்கள் தரையில் விழுந்து மண்ணை முத்தமிட்டோம், கதறி அழுதோம். நாங்கள் எங்கள் சொந்த மண்ணுக்கு மீண்டும் வந்துவிட்டோம் இனி ஒருபோதும் இங்கிருந்து போகப் போவதில்லை” என்றார் உள்ளூர் சமூகத் தலைவர்களில் ஒருவரான ஷாமின் பொனிவாஸ்.

இடிபாடுகளின் எச்சமாகவிருந்த தீவின் தேவலாயத்தில் குழுவினர் தொழுகையை மேற்கொண்டனர்.

அப்போதுதான் அங்கிருந்த சில கடற்படையினர் குழுவினரை அணுகினர். தாங்கள் திரும்பி வந்துவிட்டோம் இனிமேல் இங்கேயே தங்கப் போகிறோம் என மக்கள் கடற்படை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உள்ளூர் ஆசிரியர் ஒருவர் தான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த அவ்வூரின் காணி உறுதிகளை அவர்களுக்குக் காட்டினார்.

சில பேச்சுவார்த்தைகளின் பின்னர் காணி உறுதிகளை வைத்திருப்பவர்கள் அன்றிரவு தீவில் தங்குவதற்கு கடற்படை அனுமதியளித்தது. ஏனையவர்கள் அன்று மாலையே தம்மிடங்களுக்குத் திரும்பினார்கள். பலரும் தம் வீடுகள் இருந்த நிலங்களைப் பார்த்தும், தேங்காய்களையும், பழ வகைகளையும் பிடுங்கியும், கடற்கரையில் உலாவந்தும் அன்றய நாளை அனுபவித்தனர். சிலர் தாம் விட்டுச் சென்ற கால்நடைகளைத் தேடிச் சென்றனர். கட்டாக்காலியாகிவிட்ட அம் மிருகங்கள் தம் முன்னாள் எஜமானர்களது கட்டளைகளுக்கு அடங்க மறுத்துவிட்டன.

ஒரு மாதத்திற்குப் பிறகு இரணைதீவிற்குச் சென்ற அரச அதிகாரிகள் சுமார் 400 குடும்பங்களைக் கொண்ட ஒரு முழுக் கிராமத்தையே – காணி உறுதிகள் இல்லாதிருந்தவர்களுக்கும் – அங்கு மீள் குடியேற அனுமதித்தனர். அது எதிர்பாராத வெற்றி. ஆனால் உள்ளூர் சிறு ஊடகங்களைத் தவிரப் பெரிதாக மக்களின் அவதானத்தைப் பெறாத ஒரு மாபெரும் வெற்றி.

கடற்படையினர் தங்களை மீள்குடியேற அனுமதித்தது பற்றி மக்கள் இன்னும் ஆச்சரியத்தோடு தானிருக்கிறார்கள். தரையிறங்க விட்டதுமல்லாது தங்குவதற்கு அனுமதித்தது ஏன் என்று அவர்களால் இன்னும் புரியவில்லை.

Iranaithivu Villagers Cooking Outdoors Photo Credit: BBC

முகாம் நிர்மாணிக்கப்படதற்குப் பிறகு அங்கு மக்கள் தங்குவதற்குத் தாங்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை எனக் கடற்படை கூறுகிறது. விடுதலைப் புலிகளுடனான பிரச்சினைகளாலும் தீவின் வசதியின்மை காரணமாகவும் மக்கள் தாமாகவே வெளியேறி விட்டனர் என்று கடற்படைப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார பி.பி.சி. இற்குக் கூறினார்.

சமூகத் தலைவர்கள் இதை மறுக்கிறார்கள்.

அரச அதிகாரிகளிடம் பலதடவைகள் விண்ணப்பித்திருந்தும், கடற் கரையில் ஒரு வருட காலமாகப் பல அமைதிப் போராட்டங்களை நடத்தியிருந்தும் கடற்படை எம்மை மீள்குடியேற அனுமதிக்கவில்லை என அவர்கள் கூறுகிறார்கள்.

முன்னாள் முதலைச்சர் சீ.விக்லினேஸ்வரன், சிறீலங்காவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி போல் கொட்பிறி போன்ற பலர் இரணைதீவு மக்களை மீள்குடியேற அனுமதிக்கும்படி மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்கள் பி.பி.சி.க்குக் கிடைத்தன.

இரணைதீவு மக்கள் தமது வாழிடங்களுக்குத் திரும்பி பத்து மாதங்கள் ஆகின்றன. அவர்களது வாழ்வை மீளமைத்துக் கொள்ள அவர்கள் படும் சிரமங்களைக் காணக்கூடியதாகவுள்ளது.

ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்து இன்று இடிபாடுகளாகப் போன கற்சுவர்களுக்கு அருகாமையில் வேய்ந்த ஓலைக் குடிசைகளில் அவர்கள் வாழ்கிறார்கள். திறந்த வெளிகளில் விறகு கொண்டு சமையல் செய்கிறார்கள். கைகளால் பின்னப்பட்ட வலைகளில் மீன் பிடிக்கிறார்கள்.

நவீனத்தின் ஒரே பிரசன்னம் கைத் தொலைபேசிகள் மட்டும்தான். சூரிய வெளிச்சத்தைக் கொண்டு சார்ஜ் செய்யும் வசதியை ஒரு கனவான் வழங்கியிருக்கிறார். இருப்பினும் அபிவிருத்தியின் ஆரம்பம் அங்குமிங்கும் தெரியாமலில்லை. பழைய கிணறுகள் தூர்வாரப்படுகின்றன. மரக்கறித் தோட்டங்கள் இழந்த மீன்பிடி வருவாயை மீளத் தருகின்றன. சின்னத் தீவில் தேவாலயம் புனரமைக்கப் படுகிறது. தீவின் பாடசாலை இன்னும் புனரமைக்கப் படவில்லை. அதனால் பாடசாலை செல்லும் பிள்ளைகள் இன்னும் இரணைமடு நகரில் தான் வசிக்கிறார்கள்.

மீளக் குடியேறியதிலிருந்து பல சிரமங்களின் மத்தியிலும் வாழ்வு சிறப்பாகத் தானிருக்கிறது என்கிறார்கள் மக்கள்.

தீவிற்கு அண்மாயான கடற் பிரதேசங்களில் மீன்பிடி அதிக இலாபத்தைத் தருகிறது எனத் தீவின் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டோறாஸ் பிரதீபன் கூறுகிறார். படகுகளைக் கரையிலேயே தரிக்கக் கூடியதாக உள்ளது அதனால் எரிபொருட் செலவு மீதமாகிறது என்கிறார்.

இரணைதீவுக்கு மீள் குடியேறியதிலிருந்து தான் இரண்டே மாதங்களில் 70,000 ரூபாய்களைச் சம்பாதித்திருப்பதாக பாக்கியம் காணிக்கை என்ற பெண் கூறினார். மீன், நண்டு, கடலட்டை ஆகியன மித மிஞ்சிக் கிடைக்கின்றன என்கிறார் அவர்.

Abundance of Fish in Iranaimadu Seas

கடற்படை இன்னும் அங்குதானிருக்கிறது. தேசிய பாதுகாப்புக்கு அது அவசியம் எனக் கடற்படை கூறுகிறது. கடத்தல் காரர்களையும், அத்து மீறும் இந்திய மீனவர்களையும் கண்காணிக்க இது ஒரு முக்கிய தளம் என்கிறது அது.

தற்போதைக்கு இரண்டு தரப்பினரும் மகிழ்ச்சியோடு இணைந்து வாழ்கிறார்கள். மீள் குடியேறுபவர்களுக்கு கடற்படை பல உதவிகளையும் செய்து கொடுக்கிறது. பெரிய தீவிலுள்ள தேவாலயத்தைச் சீரமைத்துக் கொடுத்திருக்கிறது. கிராமத்தவர்களுக்கு நன்னீர் வழங்க உதவியிருக்கிறது. தெருக்களையும் நடைபாதைகளையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

கிராமத்தவருக்குத் தேவையான இயந்திரங்களையும், உதிரிப் பாகங்களையும் கடற்படை பெற்றுத் தருவதாக சிலர் கூறுகிறார்கள்.

போர் முடிந்து பத்து வருடங்கள் கடந்து விட்டன. இருந்தும் 4,241 ஏக்கர்கள் நிலம் இன்னும் இராணுவத்தின் வசமே இருக்கிறது. பாதுகாப்பும் கேந்திர முக்கியத்துவமும் தான் தாம் இன்னும் நிலங்களை விட்டுக்கொடுக்க முடியாமலிருப்பதற்குக் காரணம் என இராணுவம் சொல்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாமிற்கு முன்னதாக மக்கள் போராட்டமொன்று 700 நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது போன்று பல மக்கள் போராட்டங்கள் நடபெறுகின்றன. இரணைதீவு மக்களின் வெற்றிகரமான போராட்டம் ஏனையவர்களுக்கும் உதாராரணமாக அமையுமா?

அது சாத்தியாமக வாய்ப்புகளுண்டு.அது எந்த சமூகம் எப்படியான நடவடிக்கையை எட்டுக்கிறது என்பதைப் பொறுத்தது என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் ரூக்கி பெர்ணாண்டோ.

” அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், நிறுவனங்களும் நீதியைப் பெற்றுத் தருவதில்லை. குறிப்பாக, முறைப்பாடுகள், மேன்முறையீடுகள், பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் போன்றனவற்றிற்கு அரசு எதிர்வினை கிடைக்காத போது இரணைதீவு மக்களைப் போல தமக்கென்று உரித்தான தேவகளை முன்வைத்து நேரடியான அறவழிப் போராட்டங்களை சம்பந்தப்பட்ட மக்கள் தான் முன்னெடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.

இரணைதீவில் இப்பொழுதுதான் செயற்பாடுகள் உண்மையாகவே ஆரம்பிக்கின்றன. தீவை முன்னேற்ற பல்மடங்கு அரச உதவிகள் தேவைப்படுகின்றன என்கின்றனர் மக்கள். இரணைமடு நகருக்கும் இரணைதீவிற்குமிடையில் படகுச் சேவை (ferry) ஒன்று கிடைக்கவுள்ளதாகக்  கூறப்பட்டுள்ளது.

தீவின் இளைய சமுதாயம் அங்கு நிரந்தரமாக வாழவேண்டுமென்ற கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. “இது எங்கள் மூதாதையர் வாழ்ந்த பூமி. இங்குதான் எங்கள் ஒவ்வொருவரது உடல்களும் புதைக்கப்பட வேண்டும்” என்கிறார் பொனிவாஸ்.

கட்டுரையின் மூலம் பி.பி.சி. செய்தி.

தமிழில்: சிவதாசன்

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)