இலங்கை-இந்தியா- ஈழம்: கற்றுக் கொள்ளாத பாடங்கள்

‘இதயம் பலவீனமானவர்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு வரவேண்டாம்’ என்ற எச்சரிக்கையோடு நண்பர் உரையாடலை ஆரம்பித்தார். சமீபத்தில் யாழ்ப்பாணம் போய் வந்ததன் பின்விளைவு அது. அவர் ஒரு நீண்டகால ‘புலி; விமர்சகர்’. நீண்டகாலமாகப் போராட்டத்தின் போக்குகளை விமர்சித்தவர் constructively, of course!.

தமிழர் அடையாளங்கள் வெகு வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட வகையில் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. தட்டிக் கேட்க யாருமில்லை. புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசுமட்டுமல்ல புலிகளைப் பலவீனப்படுத்துகிறோம் என்று நினைத்து கண்டும் காணாமல் இருந்த உலக நாடுகளும் எதிர்பார்த்திருக்கவில்லை. புலிகளின் அழிவு மேற்கின் திட்டங்களையும் சேர்த்தே அழித்துவிட்டது.

புலிகளின் ஆட்சியின் உச்சம் பேச்சுவார்த்தைக்கு முன்பான காலம் என்றுதான் சொல்லலாம். சோழர் ஆட்சிக்குப் பின்னர் தமிழரின் பொற்காலமும் அதுவே. அந்த வெற்றியின் பாற்பட்ட நெகிழ்வற்ற தன்மையே அவர்களது அழிவின் ஆரம்பம், the writing was on the wall. மலை உச்சியில் ஆரம்பிக்கும் சிறு சரிவுகள்தான் அடிவாரத்தில் பலத்த அழிவுகளைக் கொண்டு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக அங்குதான் அவர்களின் ‘குடிமக்களும்’ வாழவேண்டியும் நேரிடுகிறது.

புலிகளின் அழிவு ஏற்படுத்தப் போகும் பாரிய உட்சிதைவைத் (massive implosion) தாங்குவதற்கான தயாரிப்பில் எவருமே இருந்திருக்கவில்லை. இலங்கை அரசு மட்டுமல்ல தமிழ்நாடு மற்றும் புலம் பெயர்ந்த தமிழருங்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வகையான avalanche தான். அதைத் தடுத்து நிறுத்தும் வல்லமை எவருக்குமே இருந்திருக்கவில்லை. உணர்ச்சி வசப்பட்ட கூச்சல்களை நிரப்பிக்கொண்டு ‘தார்மீகப் படைகள’ வந்திறங்கி தங்களைக் காப்பாற்றும் என்று மக்களை நம்ப வைத்ததில் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு (தமிழ்நாடு சேர்ந்த) பாரிய பங்குண்டு.

புலிகளின் அழிவால் வந்த பாரிய உட்சிதைவு முழு இலங்கையினதும் சிதைவுக்கான ஆரம்பமேதான். புலிகள் இருந்த உச்சி இன்று மஹிந்தவின் ஆட்சியில் இருக்கிறது. வெற்றிக் களிப்பின் கேளிக்கைகள் முடிய அவரது பாதங்களுக்குக் கீழே சரிவுகள் ஆரம்பிக்கும். இந்தத் தடவை அது தமிழர் தரப்பிலிருந்து அல்லாது தென்னிலங்கை மக்களிடமிருந்து ஆரம்பிக்கும். ஜே.வி.பி மற்றும் மாணவர் கிளர்ச்சிகள் அதைக் கொண்டு நடத்தும்.

தமிழரைத் தோற்கடித்ததற்காக ஈழத் தமிழர்கள் இந்தியாவை நொந்து கொண்டதும் அதன்மீது சாபமிட்டதும் புரிந்துகொள்ளப்பட வேண்டியதே. ஆனால் ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவைத் தவிர வேறெந்த சக்தியாலும் முடியாது என்பதையும் நாம் உணரவேண்டும். வெறும் உணர்ச்சிவசப்பட்ட தூற்றல்களும் காழ்ப்புணர்வுகளும் தமிழருக்கு எந்தவிதத்திலும் உதவாது. இந்தியாவைப் பங்காளியாக்காது பாதுகாப்பான வெளிநாடுகளிலிருந்து நாம் எடுக்கின்ற எந்த முயற்சிகளும் மீண்டுமொரு முள்ளிவாய்க்காலையே உருவாக்கும்.

பனிப்போருக்குப் பின்னர் உலக ஒழுங்கை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கும் ஒரே விசை பொருளாதாரம். அமெரிக்காவிடமிருந்து உலக வல்லாதிக்கத்தைக் கூறுபோட சீனா, ரஷ்யா, இந்தியா போன்றவை முயன்றுகொண்டிருக்கின்றன. தனது பொருளாதாரத்தைப் பேணுவதற்காக தென்-கிழக்கு ஆசியாவின் ஆதிக்கத்தைச் சீனா – இந்தியாவிடம் தாரைவார்க்க அமெரிக்கா தயங்காது. தாய்வானின் விட்டுக்கொடுப்பு இதற்கு நல்ல உதாரணம். ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர இருப்பிடம் பெறுவதற்காய் இந்தியா ஏனைய வல்லரசுகளின் தயவைப் பெற முயற்சிக்கிறது. இதற்காக எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இந்தியா தயங்காது.

தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் தற்போது இருக்கின்ற வலுச் சமன்பாட்டில் இலங்கைக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இதையே பகடைக்காயாகப் பாவித்து மஹிந்த புலிகளை வென்றார். அது நீண்ட காலத்திற்கு நிலைக்காது. வல்லாதிக்க சக்திகளின் பிராந்திய வேள்விக்கு முதற் பலி புலிகள் என்றால்; இரண்டாவது மஹிந்தவின் ஆட்சி;.
தற்போதுள்ள இலங்கை- இந்திய உறவு தற்காலிகமானது, பரஸ்பரம் நம்பிக்கையற்றது. எப்போது யார் யாரது கழுத்தை அறுப்பார்கள் என்று தெரியாது. தென்னிலங்கையில் தாம் மக்களிடையே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற ஜே.வி.பி யிற்கு இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் ‘இந்திய எதிர்ப்பு’. பிளவு பட்டுப்போயிருக்கும் யூ.என்.பி. யும் இதற்குப் பிற்புலத்தில் துணை போகும்.

இதை இந்தியா உணராமல் இல்லை. வடக்கு கிழக்கில் இந்தியா தனது பொருளாதார ஆதிக்கத்தைச் செலுத்துவதனாலேயே இலங்கையில் தனது இருத்தலை நிர்ணயிக்கும். ஒரு வகையில் வடக்கு கிழக்கை ஒரு விதமான ‘soft take over’ வடிவத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். புலிகளின் அழிவின் பின்னால் ‘தமிழ் மக்களை நாம் காப்பாற்றுவோம்’ என்று இந்தியா சொல்வது அவர்களது பொருளாதார மேம்பாட்டை உருவாக்குவதையே கருதுவதாகும். புலிகளின் அழிவுக்கு முன்னதாகவே கிழக்கில் பிள்ளையானை ‘அமர்த்துவதில்’ இது ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. வடக்கில் இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய எவரும் இதுவரை இல்லை. இந்த வெற்றிடத்தை மஹிந்த தனக்கு சாதகமாகப் பாவித்து வடக்கைச் சிங்கள மயமாக்குவதில் வேகமாகச் செயற்படுகிறார். தென்னிலங்கைக் கிளர்ச்சிகளுக்கு மக்களாதரவு கிடைக்காமலிருக்க அவர்களுக்கு மஹிந்த போடும் தீனியே வடக்கு –கிழக்கு சிங்கள மயமாக்கல். இதைத் தடுத்து நிறுத்த தமிழர்களுக்கு இப்போது வலுவில்லை.

இந்த வேளையில் எமக்கு இருக்கும் ஒரே தயவு இந்தியாதான். தமிழ்நாடு சின்னாபின்னப்பட்டுப் போயிருக்கிறது. புலிகள் இன்னும் அழிக்கப்படவில்லை என்ற வாய்ப்பாட்டை இலங்கையும் இந்தியாவும் இன்னும் சில வருடங்களுக்குப் பாடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் அரசியலுக்கு அது தேவையாக இருக்கலாம். தமிழருக்குத் தனிநாடு தேவைக்கான காலம் இதுவேதான். அதைச் சிங்கள தேசமே உருவாக்கித் தந்திருக்கிறது. ஆனால் இந்தத் தடவை தமிழர் அதற்குத் தயாராகவில்லை.

அடுத்த கட்ட ஆயுதப் போரைத் தமிழரால் தனியே நின்று நடாத்த முடியாது. பொருளாதாரத் தேவைகளை மீறித் தார்மீகத் தேவைகளை முன்னிலைப்படுத்த உலகம் தயாராவில்லை. எனவே நாம் மேற்கொள்ள வேண்டியது அரசியற் போர்தான். அதன் களம் இலங்கையில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதில் முக்கிய பங்களாளி இந்தியாவாகவே இருக்க முடியும்.
இந்தியாவின் கால்கள் இலங்கையில் ஆழமாகப் பதிய வேண்டும். அது பொருளாதாரப் பாதையினூடுதான் வரவேண்டும். தமிழர் வர்த்தகம் சிங்களவரின் கைகளில் போவதைவிட தமிழ்நாட்டுத் தமிழரிடம் போகலாம். இந்த வர்த்தக ஆதிக்கம் தன்னோடு கலாச்சார ஆதிக்கத்தைக் கொண்டு வரும். அதனாலேதான் வடக்கிலும் கிழக்கிலும் இழந்து போகும் மொழியும் கலாச்சாரமும் மீண்டும் நிலை நிறுத்தப்படும். சிங்கள மயமாக்கலை உடனடியாகத் தடுத்து நிறுத்த இதுவே இப்போதைக்கு ஒரே வழி.

இந்திய – சீன பூசல் உச்சம் பெறுவதற்கான சாத்தியம் இப்போதைக்கு இல்லை. 2000ம் ஆண்டு 3 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் என்றிருந்த வர்த்தகம் இன்று 60 பில்லியன்களை எட்டியிருக்கிறது. உலகத்தின் இரண்டாவது பொருளாதாரப் பூதமாக சீனா உருவெடுத்துள்ள நிலையில் இந்தியா சீனாவோடு உரசுவதற்கான சூழல் இப்போதைக்கு இல்லை.
அப்படியல்லாது போர் மூளும் பட்சத்தில் இலங்கையில் தடம் பதிப்பது இந்தியாவுக்கு மிகவும் அத்தியாவசியமானதாகிவிடும். அப்போது இலங்கையின் சிதைவு முற்றுப்பெற்றதாகிவிடும்.

அதுவரை எமது ஆட்டுக் கல்லில் அரசியல் மட்டும்தான் இருக்க வேண்டும்.

Please follow and like us:
error0
error

Enjoy this blog? Please spread the word :)