இலங்கையின் இனப்படுகொலை: சுயாதீன சர்வதேச விசாரணை தேவை | கனடிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றை ஐ.நா. முன்னெடுக்கவேண்டும் எனக் கனடிய பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று இன்று நிறைவேற்றப்படுள்ளது.

Cheryl Hardcastle, M.P. (NDP)

இது பற்றி ஸ்காபரோ ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“பல மாத கடும் உழைப்பின் பயனாக இன்று கனடிய பாராளுமன்றம் இத் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது குறித்து நான் இறும்பூதெய்துகிறேன். நடைபெற்ற அட்டூழியங்களினாற் பாதிக்கப்பட்டவர்களையும், பிழைத்துக்கொண்டவர்களையும் இந்த உலகம் மறந்துவிடவில்லை என்பதை இவ்விடயம் ஞாபகமூட்டுகிறது” என ஆனந்தசங்கரி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Shaun Chen M.P. (Liberal)

குற்றஞ்சாட்டப்படும் இனப்படுகொலை பற்றிய விசாரணயொன்றின் அவசியம் பற்றி கனடிய பாராளுமன்றத்தில் இவ் வருடம் மே மாதம் 15ம் திகதி, லிபரல் கட்சியைச் சேர்ந்த ஷோன் சென், பா.உ. ஒரு தீர்மானமொன்றைக் கொண்டுவந்திருந்தார். உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியின் (கன்சர்வேட்டிவ்) ஆதரவு கிடைக்காததால் இத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் இரண்டாவது தடவையாக இத் தீர்மானம் ஜூன் மாதம் 12ம் திகதி புதிய ஜனநாயகக் கட்சியின் பா.உ. ஷெரில் ஹார்ட்காசில் அவர்களால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒத்துழைப்பின்றி அதுவும் தோல்வியைத் தழுவியிருந்தது. இதன் பலனாக இத் தீர்மானம் ஜூன் 18 அன்று வெளிவிவகார மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சின் நிலைக்குழு (Standing Committee on Foreign Affairs and International Development) விற்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இன்று (ஜூன் 19) பா.உ. ஷெரில் ஹார்ட்காசில் அவர்களால் எதுவித மாற்றங்களுமின்றி இத் தீர்மானம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டபோது சகல கட்சிகள் மற்றும் சுயாதீன பா.உ.க்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Gary Anandasangarie M.P.(Liberal)

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றிய சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை ஐ.நா. சபை முன்னெடுக்கவேண்டுமென்ற கனடிய பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் விடயத்தில் இது ஒரு முக்கிய படி என்பதோடு, அங்கு நீதியான பொறுப்புக்கூறல் ஒன்றை உருவாக்குவதில் கனடா தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என்பதற்கான வெளிப்பாடுமாகும்.

“இவ் விவகாரத்தை முன்னெடுப்பதில் ஒத்துழைத்த சகல கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயாதீன உறுப்பினர்கள் எல்லோருக்கும் எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவிப்பதோடு இது விடயத்தில் கடும் உழைப்பை நல்கிய எமது சமூகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆனந்த சங்கரி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கம்:

“இப் பாராளுமன்றம்:

  1. அ) சிறீலங்காவில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேருக்கும் அனுதாபத்தைத் தெரிவிக்கிறது;
  2. ஆ) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்குதல், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சகல வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் சிறீலங்கா அரசு நீதி பரிபாலனத்தை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறது;
  3. இ) ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றில் கூறப்பட்டபடி சகல விடயங்களையும் ஒரு குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதோடு நாட்டின் சகல இன மக்களிடையேயும் பொறுப்புக்கூறல், சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்; இவ்விடயத்தில் கனடா சகல ஒத்துழைப்பையும் வழங்கும்;
  4. ஈ) 2009 இல் நடைபெற்ற இறுதி யுத்தம் உள்ளடங்கிய, சிறீலங்காவில் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை பற்றிய சர்வதேச, சுயாதீன விசாரணையொன்றை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும்;

பா.உ. ஷோன் ஷென் முன் மொழிந்த தீர்மானத்தின் உள்ளடக்கம்:

“இப் பாராளுமன்றம்:

  1. அ) சிறீலங்காவில் வன்முறை, பயங்கரவாதம், போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேருக்கும் அனுதாபத்தைத் தெரிவிக்கிறது;
  2. ஆ) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்குதல், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சகல வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் சிறீலங்கா முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும்;
  3. இ) ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றில் கூறப்பட்டபடி சகல விடயங்களையும் அரு குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் சிறீலங்க அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதோடு னாட்டின் சகல இன மக்களிடையேயும் பொறுப்புக்கூறல், சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்; இவ்விடயத்தில் கனடா சகல ஒத்துழைப்பையும் வழங்கும்;
  4. ஈ) 2009 இல் நடைபெற்ற இறுதி யுத்தம் உள்ளடங்கிய, சிறீலங்காவில் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை பற்றிய சர்வதேச, சுயாதீன விசாரணையொன்றை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.
Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)