இது கொடும்பாவிகளின் காலம்

யாராவது புதிதாக ஏதாவது வியாபாரம் தொடங்குவதற்கு உத்தேசித்தால் என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது. அதிக முதலீடு தேவையில்லை. இவ் வியாபாரம் இலங்கையில் செய்யப்படின் அதிக லாபத்தை விரைவாக ஈட்டித் தரும்.

பொறுத்தது போதும். ஐடியா இதுதான். கொடும்பாவி தயாரிப்பு. அடப்பாவி இதுக்குத்தானா இவ்வளவு பில்டப்.

யாழ்ப்பாணத்தில் அனந்தி & கோ எரித்த சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோரின் கொடும்பாவிகளைப் பார்த்த பிறகுதான் எனக்கு இந்த ஐடியா வந்தது. இலங்கைத் தமிழ் அரசியலைப் பார்க்கும்போது இத்தகைய கொடும்பாவி எரிப்புக்கள் அடிக்கடி நடைபெறுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.

அதெப்படி அனந்தி & கோ தான் கொடும்பாவி எரித்தவர்கள் என்று குற்றம் சாட்டலாம் என்று அனந்தி & கோ வாடிக்கையாளர்கள் புகையலாம். புகைவதற்கான அத்தனை உரிமைகளும் உங்களுக்கு உண்டு என்பதை ஒத்துக்கொண்டு…..

தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பின் சமீபகால உள்முரண்பாடுகளை அவதானிக்கும்போது அதில் உடைவிற்கான வெடிப்புகள் தெரிய ஆரம்பித்துள்ளன. உண்மையில் கூட்டமைப்பு இவ்வளவு காலம் நிலைத்திருந்ததே ஒரு அதிசயம்.

பல கட்சிகளை, ஏன் புலிகளைக் கூடப் பிரித்தாண்ட மஹிந்த ராஜபக்ஷவினால் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரிக்க முடியவில்லை. காரணம் இரா.சம்பந்தன் என்ற ஒரு தனி மனிதர். பாராளுமன்றத்தில் மட்டுமல்ல வெளியிலும் பலராலும் மதிக்கப்படும் ஒரு மனிதர் சம்பந்தன். அவருடைய நேர்மையும் அர்ப்பணிப்புமே அவரது கவசம். அந்தக் கவசந்தின் பின்னால் இருந்தமையினாலேயே கூட்டமைப்பும் தப்பிப் பிழைத்தது.

திரு சம்பந்தன் அவர்களை நான் ஒரு தடவை ‘வெளிச்சம்’ நிகழ்ச்சிக்காக செவ்வி கண்டிருக்கிறேன். வார்த்தைகளை நிதானமாகவும் அளந்தும் பேசுவார். தனது மனதில் சரியென்று பட்டதை -அது அடுத்தவரைப் புண்படுத்தும் என்று தெரிந்தாலும் கூட- சொல்லிவிடுவார். முட்டாள்தனமான கேள்விகளும் வாதங்களும், விவாதங்களும் அவரை எரிச்சல் படுத்தும். இலகுவாகப் பொறுமையை இழக்கக் கூடியவர்.

இப்படியான குணாதிசயங்களை உடையவர் எப்படி கூட்டமைப்பை இவ்வளவு காலமும் கட்டியவிழ்த்தார் என்பது ஆச்சரியம். தமிழ் மக்களின் பொது நன்மையைத் தவிர வேறொன்றும் காரணமாக இருக்க முடியாது. நியாயத்தைத் தவிர வேறெதனாலும் அவரை வாங்கிவிட முடியாது. அதனால் தான் புற எதிரிகளால் கூட்டமைப்பைப் பிரிக்க முடியவில்லை. அதைப் பிரிக்கும் வல்லமை உள் எதிரிகளாலேயே சாத்தியமாகும். அது அண்மிக்கிறது என்பது கவலை தரும் உண்மை.

கூட்டமைப்புக்குள் இப்போது இருப்பவர்களில் அடுத்த தலைமைக்கான நம்பிக்கை நட்சத்திரம் சுமந்திரன் என்று சம்பந்தன் கருதியிருக்கலாம்.  சர்வதேச ரீதியிலும் சிங்கள அரசியல் களங்களிலும் லாவகமாகத் தொடர்பாடல்களைப் பேணும் வல்லமையுடையவர் சுமந்திரன். ஆனால் தமிழர் தலைவராக வருவதற்கான பண்புகள் அவரிடம் இல்லை; இப்போதைக்கு இல்லை. தனக்குச் சரியென்று பட்டதைச் சொல்லியே தீருவார். தளபதி அமிர்தலிங்கத்திற்குப் பிறகு தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த நல்ல தளபதியென்று அவரைக் கூறலாம். காலம் அவரைப் பதப்படுத்தும்போது அவர் தலைவராகலாம்.

சரி கொடும்பாவி வியாபாரத்திற்கு வருவோம்.

அனந்தி & கோ கொடும்பாவி எரித்ததற்கான ஆதாரங்கள் பல கூகிள் ஆண்டவர் பாதங்களில் பரவிக் கிடக்கின்றன. அவருக்குத் துணை நின்ற பல உள் வீட்டு, வெளிநாட்டுக் கந்தர்வர்கள் அடி முடி தெரியாமல் அனந்தப் பெருவெளியில் சஞ்சாரம் செய்கின்றனர். இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து தெரிவு செய்த பொது எதிரிகளே சுமந்திரனும் சம்பந்தனும். அனந்தி ஒரு கருவி மட்டுமே.

கூட்டமைப்பு உடைந்து போனால் அதில் அதிக பலனடையப் போவது தமிழரசுக் கட்சியாகவே இருக்கலாம். தேர்தல் என்று வரும்போது மக்கள் தமிழரசுக் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். இக் கொடும்பாவி நடவடிக்கைகள் தமிழரசுக் கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை அதிகப் படுத்தும்.

அனந்தி மீதான கூட்டமைப்பின் ஒழுக்காற்று நடவடிக்கை, ஐ.நா. வில் அனந்தி – சுமந்திரன் மோதல் என்பனவெல்லாம் அனந்தியைக் கொடும்பாவி எரிப்பில் முன்னிலைப் படுத்தினாலும் காணாமற் போனோர் பற்றிய கவன ஈர்ப்பின் போது பின்னணியில் நின்றோர் காணப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

அடுத்த கொடும்பாவி யாருடையது என்பது பற்றி சர்வதேச மட்டங்களில் பேசப்பட்டு வரும் அதே வேளை யாழ்ப்பாணத்தில் சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவிகளைச் செய்த நிறுவனம் வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபடுவதாக…

இது கொடும்பாவிகளின் காலம்….

சிவதாசன் பெப்ரவரி 28, 2015 – இக்கட்டுரை மார்ச் ஈகுருவி பத்திரிகையில் பிரசுரமானது

Please follow and like us:
0

Enjoy this blog? Please spread the word :)