இசையமைப்பாளர் டி.இமானுக்கு ‘மாற்றத்திற்கான தலைவர்கள்’ விருது!

D.Iman was awarded ‘Ambassador for Tamil’ by Prof. Wisdom Tetty at UofT Scarborough

இசையமைப்பாளர் டி.இமானுக்கு சமீபத்தில் கனடிய தமிழர் பேரவை இந்த வருடத்துக்கான  ‘மாற்றத்திற்கான தலைவர்கள்’ விருதை வழங்கிக் கெளரவித்திருக்கிறது. தமிழ் இசைக்கும்,  தமிழர்கள் தங்கள் இசைத் திறமைகளை உலக அரங்குகளில் மிளிரவைக்க சந்தர்ப்பம் வழங்கியமைக்குமாக கனடிய தமிழர் பேரவை ஜனவரி 19, 2019 இல் நடத்திய தைப் பொங்கல் விழாவில் வைத்து இசையமைப்பாளர் டி.இமானுக்கு இவ்விருதை வழங்கிக் கெளரவித்தது. அதே வேளை, டி. இமான் அவர்கள் ரொறொண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்னும் தமிழ்க்  கீதமொன்றை இலவசமாக உருவாக்கியதோடு, தன்  கடுமையான வேலைப் பளுவையும் தள்ளிவைத்துவிட்டு இந்த விழாவிற்கு இந்தியாவிலிருந்து தன்  செலவிலேயே வந்து கீத இறுவட்டை வெளியிட்டும் உதவியிருந்தார்.

இந் நிகழ்வைத் தொடர்ந்து ஜனவரி 21ம் திகதி ரொறோண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாகம் நடாத்திய பொங்கல் விழாவிலும் டி.இமான் கெளரவிக்கப்பட்டார். ரொறோண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையின் ‘சர்வதேச தூதுவராக’ டி.இமானை நியமிப்பதாக அப் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் விஸ்டம் டெட்டி அவ் விழாவில் அறிவித்தார். கனடிய பல்கலைக் கழகம் ஒன்று நடாத்திய முதல் தைப் பொங்கல் விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ரொறோண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாகம் தமிழ் மொழி சிறப்புறப் பல முன்னெடுப்புக்களைச் செய்து வருகிறது. சென்ற வருடம் தமிழ் மொழியின் செழுமையை உலகறியச் செய்யும் பொருட்டு தமிழில் இருக்கக்கூடிய மூலப் படிவங்களை மின்படிவங்களாக்கும் முயற்சிக்காக ஈழத்தமிழரான முனைவர் ரவி குகதாசன் அவர்கள் 2 மில்லியன் டாலர்களை இப் பல்கலைக் கழகத்திற்கு அன்பளித்திருந்தார். இதற்காக கனடிய தமிழர் பேரவை அவருக்கு சென்ற வருடத்தின்’மிகச் சிறந்த சேவைக்கான’ விருதை அளித்துக் கெளரவித்திருந்தது. இந்த வருடம் தமிழ் மொழி மீது தீராத பற்றுக் கொண்ட கனடியரான முனைவர் பிறெண்டா பெக் அம்மையார் இம் மின்படிவ முயற்ச்சிக்காக சுமார் 4 இலட்சம் டாலர்களை அன்பளித்திருந்தார். இதன் பொருட்டு அவருக்கு  இவ் வருடத்திற்கான (2019)  ‘மிகச் சிறந்த சேவைக்கான’ விருதைக் கனடிய தமிழர் பேரவை தன் பொங்கல் விழாவின் போது வழங்கிக் கெளரவித்திருந்தது. கொங்கு நாட்டின் (பொன்னர் – சங்கர்) கதையை ஆங்கிலத்திலும் தமிழிலும் சித்திர நூல்களாக முனைவர் பிறெண்டா பெக் வெளியிட்டிருந்தார்.

உலகம் முழுவதுமுள்ள பிரதான பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவப்படவேண்டும் என்ற விருப்போடு செயற்பட்டு வரும் ‘தமிழ் இருக்கை நிறுவனமும்’ ரொறோண்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இவ் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சுமார் 6 மில்லியன் டாலர் செலவில் சென்ற வருடம் தமிழ் இருக்கை ஒன்று நிறுவப்பட்டது தெரிந்ததே. ரொறோண்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கான நிதித் தேவை சுமார் 3 மில்லியன் டாலர்கள் எனவும் இதில் மூன்றிலொரு மடங்கு ஏற்கெனவே கிடைக்கப்பெற்றிருக்கிறது என்றும் அறியப்படுகிறது. இந்நற்செயலுக்கு அன்பளிப்பு செய்ய விரும்புவோர் ‘தமிழ் இருக்கை’ இணையத்தளத்திற்குச் சென்று (தொடுப்பு இணைக்கப்பட்டுள்ளது) அன்பளிப்புச் செய்யலாம்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)