அறிவித்தல்

உடனடி விநியோகத்திற்கு:நவம்பர் 09, 2018

 சிறிலங்கா மீது தீர்க்கமான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும்படி கனடிய தமிழர் பேரவை வேண்டுகோள் 

 அரசியல் சாசனத்துக்கு முரணாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா பாராளுமன்றத்தை இன்று கலைத்ததை கனடிய தமிழர் பேரவை கண்டிக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அரசியல் சாசனத்துக்கு முரணாகப்  பிரதமராக நியமிக்க முயற்சி செய்திருந்தார். இந்த சாசன முரணான சதி தோல்வியைத் தழுவலாம் என்பதை அறிந்ததும் அவர் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டார்.

சடடத்தின் ஆட்சி, அரசியலமைப்பு, சர்வதேச நியமங்கள் போன்றவற்றை மீறும் போக்கைத் தவிருங்கள் என்று சிவில் சமூகங்கள், சிறுபான்மையினர், மேற்குலக ஜனநாயக நாடுகள், இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புக்கள் போன்றவற்றின் வேண்டுகோளைத் தற்போதைய ஜனாதிபதி தொடர்ந்தும் நிராகரித்து வருகிறார். இப் போக்கு சந்தேகத்திற்கிடமின்றி சிறிலங்காவை மீண்டும் அச்சமும் குழப்பமும் தரும் காலமொன்றிற்குள் தள்ளிவிடும்.

சிறிலங்கா மீண்டும் சட்டவாட்சி மற்றும் ஜனநாயக மரபுகளைப்  பேணும் வகையில் இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தடைகள் உட்பட்ட தீர்க்கமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி சர்வதேச சமூகத்தைக் கனடிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது. இது ஒன்றே சகலரும் அமைதி, நீதி, பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை அனுபவிப்பதற்கு ஏதுவான பாதையை  அமைத்துக் கொடுக்க வல்லது.

கனடிய தமிழ்ச் சமூகம் இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் குழுமத்திலிருந்து சிறிலங்கா தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கனடிய அரசைகே கனடிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.

மேலும் ஊடக தகவல்களுக்கு 416-240-0078 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

கனடிய தமிழர் பேரவை 


கனடிய தமிழ்க் காங்கிரஸ்

ஊடக  அறிவிப்பு
நவம்பர் 7, 2018
கனடிய தமிழர் பேரவை, அதன் இயக்குனர் சபை, மற்றும் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் மீதாக வைக்கப்பட்டுள்ள  குற்றச் சாட்டுகள் தொடர்பான விளக்கமளிக்கும் வகையில் பத்திரிகையாளர் மாநாடொன்றை ஒழுங்கு செய்துள்ளது. இக் குற்றச் சாட்டுகள் சம்பந்தமாக ஏதாவது விளக்கங்கள் தேவைப்படின் இம் மாநாட்டில் கலந்து  கொள்வதன் மூலம் பெற்றுக்  கொள்ளலாம்.
தயவு செய்து சமூகமளிக்கவும்.
மாநாடு பற்றிய தகவல்கள்:
இடம்: கனடிய தமிழார் பேரவை அலுவலகம் 10 Milner  Business Crt. Suite #513, Toronto
காலம்: புதன் கிழமை, நவ்பர் 14, 2018 7:00 மணி
மேலதிக தகவல்களுக்கு:
கனடிய தமிழர் பேரவை
அலுவலகம்: 416-240-0078

டான்ரன் துரைராஜா, நிறைவேற்று இயக்குனர்: 647-300-1973. 


கனடா – மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணை தொடர்பான கனடிய தமிழர் பேரவையின் அறிக்கை
நவம்பர் 01, 2018
பா.உ. ச.வியாழேந்திரன் அவர்களது சமீபத்திய கனடா வருகையுடன் தொடர்பு படுத்தி கனடிய தமிழர் பேரவையின் 2016 நிதி சேர் நடை பவனி மூலம் மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சேகரிக்கப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தில் பல்வேறு செய்திகள் சமூக மற்றும் இணையத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அச் செய்தி முற்றிலும் தவறானது மட்டுமல்லாது திரிபுபடுத்தப்பட்டு மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் எண்ணத்தோடு செயற்படும் சிலரால் பரப்பப்பட்டும் வருகிறது.
இச் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு நமது மக்களுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடும் கனடிய தமிழர் பேரவைக்கு உண்டு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மக்களின் அவல நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு சில வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு 2016 ம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடிய தமிழர் பேரவை, திரு. வியாழேந்திரன் பா.உ. வைக் கனடாவுக்கு அழைத்திருந்தது. இதன் பிரகாரம் கனடாவிலுள்ள பல மனிதாபிமான தொண்டு நிறுவனங்களுடனும் தமிழ் ஊடகங்களுடனும் திரு. வியாழேந்திரன் பல சந்திப்புக்களை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நிலைமைகள் பற்றிய நேரடி அனுபவங்களையும், மேற்கொள்ள வேண்டிய அவசியமான சில செயற்திட்டங்களையும்  பரிந்துரைத்தார். இத் திட்டங்களில், கிராமங்களைத் தத்தெடுத்தல், பின்-பள்ளி உதவிகள், முன் – பள்ளி ஆசிரியர் ஆதரவுத் திட்டங்கள், முன் – பள்ளி உணவு வழங்கல், பாடசாலைக் கட்டுமானங்கள், உள-வள ஆலோசனை வழங்கல், பெண்கள் விடுதிகளைப் புனர் நிர்மாணம் செய்தல், பார்வையற்றோருக்கான பள்ளிகளுக்கு ஆதரவு வழங்கல், மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களின் தேவைகளை நிறைவேற்றுதல், நுண் கடனுதவித் திட்டங்களை அறிமுகம் செய்தல், கிராமங்களுக்கு நீர் வழங்கல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆதியன நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பெற ஆரம்பித்துள்ளனர். மேலும் பல திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச் சந்திப்பினைத் தொடர்ந்து பல தமிழ்க் கனடிய மனிதாபிமான அமைப்புக்களும், பெரு மனது கொண்ட தனிபட்ட கொடையாளிகளும் இம் முன்னெடுப்புக்களுக்கு ஆதரவுதர முன்வந்தனர்.
இச் சந்திப்புகளின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவது மிக முக்கியமானதும் அவசரமானதுமென திரு. வியாழேந்திரன் பா.உ. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கனடிய தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் கனடா-மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணை உருவாக்கம் பெற்றது. இத் திட்டத்திற்கான நிதி 2016 செப்டம்பரில் நடைபெற்ற கனடிய தமிழர் பேரவையின் வருடாந்த நடை பவனி மூலம் திரட்டப்பட்டது.
இப் பணம் திரட்டப்பட்டதிலிருந்து ஒரு வருடத்துக்கும் மேலாக, திரு. வியாழேந்திரன் பா.உ. வின் உதவியுடன் இப் பண்ணைத் திட்டத்திற்கான உகந்த நிலமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும் பலவித சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய காரணத்தினால் அம் முயற்சி தடைபட்டுப் போனது. உயர்தர மாடுகளுக்குத் தேவையான அளவு போதிய நீர் வசதியின்மை, 10 ஏக்கர் வசதியான நிலம், நம்பிக்கையான உறுதிப் பத்திரங்களைப் பெற முடியாமை, மற்றும் நிலத்துக்கான அபரிமிதமான விலை ஆகியன இச் சவால்களில் சில. திரு. வியாழேந்திரன் பா.உ. அவர்களின் கடும் முயற்சியின் பின்னரும் உகந்த நிலத்தைக் கொள்வனவு முடியாமல் போனது மட்டுமல்லாது காலமும் நீடித்துக் கொண்டு போவதயும் மனதில் கொண்டு கனடிய தமிழர் பேரவை இப் பண்ணைத் திட்டத்தை நிறைவேறுவதற்கான மாற்று வழிகளையும் ஆராய்ந்தது.
இம் மாற்று வழிக்கான தேடலின் பிரகாரம் மட்டக்களப்பு அரச அதிபரின் உதவியுடன் பண்ணைக்கு உகந்த அரச நிலமொன்றைக் நீண்டகாலக் குத்தகைக்கு எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இக் குத்தகைக்கான விண்ணப்பம் 2018 முற்பகுதியில் மனுச் செய்யப்பட்டது. பல நிர்வாகத் தடங்கல்களைச் சந்தித்த போதும் கனடிய தமிழர் பேரவை அனுமதிப் பத்திரத்தைப் பெற்று பண்ணையைச் செயற்பட வைக்கவேண்டுமென்பதில் சிரத்தையுடன் செயற்படுகிறது. மட்டக்களப்பு பிரதேச மக்களின் நன்மை கருதி இத் திட்டம் விரைவில் செயற்பட ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கையுடன் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது.
இப் பண்ணைத் திட்டத்துக்கான பணத்தைக் கனடிய தமிழர் பேரவை மோசடி செய்து விட்டது என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ குற்றம் சாட்டுவது கனடிய தமிழர் பேரவையை அவமதிக்கும் உள்நோக்கங்களைக் கொண்டதாகும். இவ் திட்டத்திற்காக திரு. வியாழேந்திரன் பா.உ. விற்கு கனடியத் தமிழர் பேரவை பணமெதுவும் வழங்கவில்லை என்பதை என்பதை உறுதி செய்கிறது.
கனடா – மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணைத் திட்டத்துக்காகச் சேகரிக்கப்பட்ட நிதி கனடிய வங்கி ஒன்றில் பிரத்தியேக கணக்கில் சேமிப்பில் உள்ளது. இப் பணம் பேரவையின் வேறெந்தச் செலவீனங்களுக்காகவோ அல்லது சிறீலங்காவிலுள்ள தனிப்பட்ட அல்லது அமைப்புக்களின் தேவைகளுக்கோ பாவிக்கப்பட மாட்டாது  என்பதைக் கனடிய தமிழர் பேரவை உறுதி செய்கிறது. அத்தோடு, பண்ணை நிலத்துக்கான பத்திரம் கிடைத்தவுடன் கனடா – மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணையின் செயற்பாட்டை கனடிய தமிழர் பேரவை நேரடியாகவோ அல்லது பேரவையின் நம்பிக்கையான உள்ளூர் தொண்டு நிறுவனம் மூலமாகவோ ஆரம்பிக்கும்.
கனடா – மட்டக்களப்பு பண்ணைத் திட்டம் மட்டுமல்லாது எமது இதர பல திட்டங்களையும் செவ்வனே முடித்து வைப்பதில் கனடிய தமிழர் பேரவை மிக உறுதியுடன் உள்ளது.
கனடிய தமிழர் சமூகத்தின் உதவியுடன் எமது தாய் நாட்டு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்தும் அயராது உழைக்கும்.
மேலதிக விளக்கம் மற்றும்  தகவல்களுக்கு 416-240-0078 என்ற இலக்கத்தைத் தயவு செய்து அழைக்கவும்.
நன்றி
கனடிய தமிழர் பேரவை