அமைச்சர் பதியுதீனைக் கைது செய்ய வேண்டும் | எஸ்.பி.திசநாயக்க

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் றிசார்ட் பதியுதீனைக் கைது செய்யுமளவிற்குப் போதுமான ஆதாரங்கள் உண்டு எனக்கூறி அவரை உடனடியாகக் கைது செய்ய சட்டவமுலாக்கத் துறைக்கு ஆணையிடும்படி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்காவும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் பல அங்கத்தவர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டு வருகிறார்கள்.

அமைச்சர் பதியுதீனுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அங்கத்தவர்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவ்வமைப்பின் வன்முறை நடவடிக்கைகளுக்கு அமைச்சர் உதவியிருக்கிறார் என்பதையும் காட்டி அமைச்சர் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டுமென எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

“அமெரிக்க உளவு நிறுவனங்களினால் ஊக்கமளிக்கப்பட்டு நடாத்தப்பட்ட ‘அரபு வசந்தம்’ இன்று பயங்கர மிருகமாக உருவெடுத்து இப்போது வலுக் குறைந்த நாடுகளைத் தாக்கவாரம்பித்திருக்கிறது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் முடிந்து இரண்டு வாரங்கள் சென்று விட்ட போதிலும் நாடு இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதைப் பார்க்கக் கவலையாயுள்ளது” என ‘மாற்றத்துக்கான மையம்’ என்ற அமைப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறினார்.

அமைச்சர் றிசாட் பதியுதீன்

“தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மட்டுமல்ல ஜமாதி மில்லது இப்ராஹீம் மற்றும் தவ்ஹீத் உடன் தொடர்புடைய சிந்தனைப் பள்ளிகள், முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும் என்பதுடன் கிழக்கு முஸ்லிம் பல்கலைக்கழகக் கல்லூரியை பல்கலைக் கழக மானிய ஆணையம் கையேற்க வேண்டும்” என எஸ்.பி.திசநாயக்கா மேலும் தெரிவித்தார்.

“றிசாட் பதியுதீன் முன்பு ஒரு பூனைக்குட்டியாக இருந்ததால் ஒருவருக்கும் அதிக பாதகம் செய்யவில்லை. ஆனால் அவருடைய சொத்துக்களின் தொகையைக் கண்டறிந்து வெளிக்கொணர்வது அதிகாரிகளின் கடமை” என ஊடகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது எஸ்.பி. திசநாயக்கா கூறினார்.

மூலம்: டெய்லி மிரர் லங்கா

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)