அமெரிக்க இடைத் தேர்தல்கள்: ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றியது

நவம்பர் 7, 2018

இன்று நடந்து முடிந்த அமெரிக்க இடைத் தேர்தல்களில் ஜன நாயகக் கட்சி பிரதி நிதிகள் சபையையும் குடியரசுக் கட்சி செனட் சபையையும் கைப்பற்றின. பிரதி நிதிகள் சபையில் மொத்தம் 435 ஆசனங்களும் செனட் சபையில் மொத்தம் 100 ஆசனங்களும் உள்ளன. இதில் எடுப்பவர்பிரதி நிதிகள் சபையில் 218 ஆசனங்களை எடுக்கும் கட்சி அச் சபையில் ஆதிக்கம் செலுத்தும். செனட் சபையில் 51 ஆசனங்களை எடுக்கும் கட்சி அங்கு ஆதிக்கம் செலுத்தும்.

இத் தேர்தலில் முன்னெப்பொழுதையும் விட அதிக எண்ணிக்கையானோர் வாக்களித்திருந்தனர். அதற்கு காரணம் ஜனாதிபதி ட் ரம்ப் ஆட்சியின் மீதான நம்பிக்கையை மக்கள் கொடுப்பார்களா?; 2020 இல் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ட் ரம்ப் வெற்றி பெறுவாரா? என்பதற்கான மக்களின் கருத்துக் கணிப்பாகவே இத் தேர்தல் அமைந்திருந்தது. ஜனாதிபதியின் கொள்கைகள் மிகவும் சர்ச்சைக்குரியனவாக அமைந்திருந்ததும் தென் எல்லையில் ஹிஸ்பானிய குடிவரவாளர்களின் நெருக்கடிகள், மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களினால் ஸ்திரமான பொருளாதாரத்தை உருவாக்க முடியாமை போன்ற பல விடயங்கள் அவரது ஆட்சியின் பலத்தை ஆட்டம் காட்டுமா என்பதை இத் தேர்தல் நிரூபிக்குமென அரசியல் அவதானிகள் எதிர்பார்த்திருந்தனர்.

உண்மையில் பிரதிநிதிகள் சபையில் ஆதிக்கம் செலுத்தினாலும் ஜனநாயகக் கட்சியினால் தமக்கு இஷ்டமற்ற விடயங்களுக்கு முட்டுக்கட்டை போடலாம்; அதனால் ஜனாதிபதி தன்னிச்சையாக பல விடயங்களை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தலாம் என்பதைத் தவிர ஜனாதிபதியைப் பதவி நீக்கும் அல்லது அவரை விசாரணை செய்யும் தகமைகளை செனட் சபையின் பெரும்பான்மையே தீர்மானிக்கும் என்பதனால் இத் தேர்தல் முடிவுகளையிட்டு ஜனாதிபதி அதிக கவலையடையவோ அல்லது ஜனனாயகக் கட்சி புழகாங்கிதமடையவோ தேவையில்லை.

பொதுவாகப் பிரதிநிதிகள் சபை எண்ணிக்கையில் அதிகமானதாகவிருந்தாலும் செனட் சபைதான் அதிகாரம் கூடியது என்பார்கள். அந்த வகையில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் ட்ரம்ப் தானே வெற்றி பெற்றிருக்கிறேன் என்று முழங்குவதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

அமெரிக்க வரலாற்றில்மு, அதுவும் ட்ரம்ப்பின் அமெரிக்காவில், முதலாக இரண்டு முஸ்லிம் பெண்களையும் ஒரு சுதேசிப் பெண்ணையும் தெரிவு செய்த தேர்தல் இதுவென்பது அரசியல்வாதிகளுக்கு அப்பால் அமெரிக்க மக்களின் நற்பண்பை எடுத்துக் காட்டுவதாகிறது.